சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.
அந்தவகையில், சென்னையில் கடந்த 3 மாதங்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல், ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.94.24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சென்னையில் 2வது நாளாக பல பெட்ரோல் பங்க்குகளில் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.
Also Read : சீரழிந்த சட்டம் ஒழுங்கு! தலைநகரில் அதிகரிக்கும் திருட்டு, வழிப்பறி! காவல்துறை மீது மக்கள் அதிருப்தி!
நுங்கம்பாக்கம், புரசைவாக்கம், எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கும் பாரத் பெட்ரோலிய நிலையங்களில் டீசல் இல்லை என நேற்று முன் தினம் பலகை வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலை இன்றும் தொடர்கிறது. இதனால் டீசல் போட முடியாமல் வாகனங்கள் வேறு பெட்ரோல் நிலையங்களைத் தேடி அலையும் சூழல் ஏற்பட்டுள்ளது. முக்கிய வணிக வாகனங்களுக்கு டீசல் தேவைப்படும் நிலையில், திடீரென சென்னையில் டீசல் பற்றாக் குறை ஏற்பட்டிருப்பது வாகன ஓட்டிகளுக்கு கடும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
இதுகுறித்துக் கூறும் எண்ணெய் நிறுவன அதிகாரிகள், கச்சா எண்ணெய் வரத்து குறைவு, வினியோகத்தில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால் திடீர் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டது. இது தற்காலிகமானது தான். விரைவில் இந்த பிரச்சினை தீர்க்கப்படும் என்று கூறினர்.
அதேநேரம், அண்மையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் பெட்ரோல், டீசல் சுத்திகரிப்பு ஆலைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டதாகவும், பெட்ரோல், டீசல் சுத்திகரிப்பை 70 சதவீதமாகக் குறைக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் 70 சதவீத கச்சா எண்ணெய் மட்டுமே சுத்திகரிக்கப்பட்டதால் டீசலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதேபோல் மற்ற எண்ணெய் நிறுவனங்களிலும் டீசலுக்கு தட்டுப்பாடு காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry