தனியார் கிரிப்டோவுக்கு அங்கீகாரம் இல்லை! டிஜிட்டல் கரன்சியை பணமாக மாற்றலாம்! ஆன்லைன் பரிமாற்றம் பாதுகாப்பானது!

0
118

மத்திய வங்கி டிஜிட்டல் கரன்சியின் தொடக்கமானது டிஜிட்டல் பணம் செலுத்துதல் மற்றும் ஆன்லைன் நிதி பரிமாற்றம் ஆகியவற்றை மிகவும் பாதுகாப்பானதாகவும், ஆபத்து இல்லாததாகவும் மாற்றும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

காணொலி வாயிலாக பாஜக சார்பில் நடைபெற்ற சுயசார்பு பொருளாதார கருத்தரங்கில பிரதமர் மோடி பேசினார். அதில், “டிஜிட்டல் கரன்சி என்பது நமது தாள் வடிவிலான ரூபாயின் டிஜிட்டல் வடிவமாக இருக்கும். அத்துடன் ரிசர்வ் வங்கியால் கட்டுப்படுத்தப்படும். இது டிஜிட்டல் கரன்சியுடன் தற்போதுள்ள கரன்சியை பரிமாற்றம் செய்யும் ஒரு அமைப்பாகவும் இருக்கும். மத்திய வங்கி டிஜிட்டல் கரன்சி  (சிபிடிசி) டிஜிட்டல் பொருளாதாரத்தை வலுப்படுத்தும். யாராவது டிஜிட்டல் கரன்சியில் பணம் செலுத்தினால், அதை பணமாக மாற்றிக்கொள்ள முடியும்.

சிபிடிசி-யின் தொடக்கமானது டிஜிட்டல் பணம் செலுத்துதல் மற்றும் ஆன்லைன் நிதி பரிமாற்றம் ஆகியவற்றை மிகவும் பாதுகாப்பானதாகவும் ஆபத்து இல்லாததாகவும் மாற்றும். மேலும், இது உலகளாவிய டிஜிட்டல் பணம் செலுத்தும் முறைகளின் வளர்ச்சியை எளிதாக்கும். டிஜிட்டல் கரன்சி புதிய வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம், நிதி தொழில்நுட்பத் துறையில் புரட்சியை ஏற்படுத்தும். பணத்தை கையாளுதல், அச்சிடுதல், மேலாண்மை ஆகியவற்றில் சுமையை குறைக்கும்.” என்றார் பிரதமர் மோடி.

மத்திய பட்ஜெட் ஏழை, நடுத்தர மக்கள், இளைஞர்களை கருத்தில் கொண்டும், அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் உருவாக்கப்பட்டது; அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதில் அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது. இந்தியாவில் ஏதாவது ஒரு பகுதி அல்லது மாவட்டம் ஏழ்மையில் இருப்பது சரியானது அல்ல; பா.ஜ.க. இளைஞர்களின் கனவுகளை அறிந்த கட்சி, அது இந்த பட்ஜெட்டில் பிரதிபலித்துள்ளது. தற்சார்பு என்ற அடித்தளத்தில் வருங்கால இந்தியா மிளிர வேண்டும்; இந்த பட்ஜெட் தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதற்கான பட்ஜெட். இந்த கரோனா காலங்களில் கூட, இந்தியா அதன் பொருளாதார ஸ்திரத்தன்மையால் உலகின் கவனத்தை ஈர்க்க முடிந்தது.

இதனிடையே, தனியார் கிரிப்டோவில் முதலீடு செய்பவர்கள், அதற்கு அரசாங்கத்தின் அங்கீகாரம் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும் மத்திய நிதித்துறை செயலாளர் டி.வி.சோமநாதன் கூறியுள்ளார். அதேபோல் தனியார் கிரிப்டோ முதலீடு வெற்றிபெறுமா இல்லையா என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இதனால் நஷ்டம் ஏற்படலாம், இதற்கு அரசு பொறுப்பல்ல என மத்திய நிதித்துறை செயலாளர் டி.வி.சோமநாதன் கூறியுள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry