கனகசபையில் தேவாரம், திருவாசகம் பாட ஆட்சேபம்! அறநிலையத்துறைக்கு தீட்சிதர்கள் கடிதம்!

0
310

சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மீது ஏறி தேவாரம், திருவாசகம் பாட அனுமதிக்கும் அரசாணையை அமல்படுத்தும் முன்பு தங்களிடம் கருத்து கேட்கவில்லை என்று பொது தீட்சிதர்கள் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர்.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஒவ்வொரு கால பூஜையின் போதும் கனகசபையில் 30 நிமிடங்கள் தேவாரம் திருவாசகம் பாட இந்து சமய அறநிலையத்துறை அனுமதி அளித்துள்ளது. கோவில் நிர்வாகத்திடம் முன் கூட்டியே தகவல் தெரிவித்து பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் தேவாரம் திருவாசகம் ஓதிக்கொள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் அனுமதி வழங்கியுள்ளார்.

இந்நிலையில் சிதம்பரம் நடராஜர் கோவில் பொது தீட்சிதர்களின் கமிட்டி செயலாளர் ஹேமசபேச தீட்சிதர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு ஆட்சேபனை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், ‘பாரம்பரிய வழக்கப்படியும், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படியும் நடராஜர் கோவில் நிர்வாகம் மற்றும் பூஜைகளை பொது தீட்சிதர்களாகிய நாங்கள் செய்து வருகிறோம். நடராஜர் கோவிலில் கனகசபை மீது ஏறி தேவாரம், திருவாசகம் பாட அனுமதிப்பதற்கான அரசாணையை அமல்படுத்தும் முன்பு பொது தீட்சிதர்களிடம் கருத்து கேட்கப்படவில்லை.

GETTY IMAGE

அரசாணையை நிறைவேற்றுவதில் சட்டம் – ஒழுங்கு பிரச்சினை ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர். அரசாணையை படிப்பதற்கும், அது தொடர்பாக சட்ட ஆலோசனை பெறுவதற்கும், பக்தர்களிடமும், பொதுதீட்சிதர்களிடம் கருத்து கேட்கவும், பூஜை முறைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் கலந்து ஆலோசிக்கவும் கால அவகாசம் கேட்கப்பட்டது.

Also Read : பிடியை இறுக்கும் அறநிலையத்துறை! என்ன செய்யப்போகிறார்கள் சிதம்பரம் தீட்சிதர்கள்?

ஆனால் பொது தீட்சிதர்களிடம் கருத்து கேட்காமல், அரசாணை பற்றி சட்ட ஆலோசனை பெறுவதற்கு கால அவகாசம் அளிக்காமல், சட்டத்திற்கு புறம்பாக கடந்த மாதம் 19-ந் தேதி அரசாணை செயல்படுத்தப்பட்டது. தற்போது எங்களது ஆட்சேபனையை மீறி கோவில் கனகசபை மேல் ஏறி தேவாரம், திருவாசகம் பாடப்படுகிறது.

Rudra Homa in Nataraja Temple – Getty Image

ஆகையால் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகவும், சட்டத்துக்கு புறம்பாகவும், பாதுகாப்பு பெற்ற தனி சமய பிரிவினரான பொது தீட்சிதர்களின் நடராஜர் கோவிலில் பாரம்பரியமான பூஜை வழிபாட்டு முறைகளையும், நிர்வாகத்தையும் சட்ட விரோதமாக போலீஸ் பலத்துடன் இடையூறு செய்வது உச்சநீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் செயலாகும். நடராஜர் கோவிலில் நீதிமன்ற உத்தரவுக்கு மாறாகவும், அரசியல் சாசன உரிமைகளை மீறியும் இந்து சமய அறநிலையத்துறை செயல்படுவது சட்டவிரோதமாகும். இதற்கு எங்களின் சட்டபூர்வமான எதிர்ப்பை தெரிவித்துக் கொள்கிறோம்’ என்று கூறப்பட்டுள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry