திருவள்ளூர் அருகே பன்னாட்டு நிறுவனத்திடம் மாமூல் கேட்டு மிரட்டியதுடன், நிறுவனத்திற்கு செல்லும் சாலையை சாலையை சேதப்படுத்தியதாக கீழச்சேரி ஊராட்சி மன்ற தலைவியின் மகனும், கடம்பத்தூர் ஒன்றிய திமுக பொருளாளருமான தேவா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்த நிறுவனத்துக்கு செல்லும் பிரதான சாலையின் குறுக்கே திமுக நிர்வாகி தேவா பள்ளம் வெட்டியதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் மேலாளர் பிரபு அளித்துள்ள புகார் மனுவில், “திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியம் கீழச்சேரி ஊராட்சியில் ஆல்ஃபா செக்யூரிட்டி இன்ஸ்ரூமென்ட்ஸ் (இந்தியா) பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இயங்கி வருகிறது. அதில் நான் மேலாளராக பணிபுரிகிறேன்.
பன்னாட்டு முதலீட்டில் தமிழக அரசு அங்கீகாரத்துடன் 2010ம் ஆண்டில் இருந்து இயங்கி வரும் எங்கள் நிறுவனத்தில் சுமார் 450 பேர் பணியாற்றுகின்றனர். பொருட்களை எடுத்து செல்லவும், பணியாளர்கள் பயன்பாட்டிற்காகவும் சுமார் 50 வாகனங்கள் வந்து செல்வது வழக்கம். 22/11/2022 மாலை சுமார் 3.30 மணிக்கு, நான் அலுவலகத்திற்கு சென்றபோது, எங்கள் நிறுவனத்திற்கு செல்லும் பிரதான சாலையில் பள்ளம் தோண்டப்பட்டு, வாகனங்கள் செல்ல முடியாத நிலை இருந்தது.
இது குறித்து விசாரித்த போது, கீழச்சேரி ஊராட்சி மன்ற தலைவியின் மகனும், கடம்பத்தூர் ஒன்றிய திமுக பொருளாளருமானதேவா என்பவரின் தூண்டுதலினால், மக்கள் பயன்பாட்டில் உள்ள சாலையை அடையாளம் தெரியாத நபர்கள் தோண்டி, பொதுச் சொத்திற்கு சேதம் விளைவித்தது தெரியவந்தது.
திமுக நிர்வாகியான தேவா ஏற்கனவே எங்கள் நிறுவனத்திற்கு செல்லும் பாதையை சேதம் செய்து எங்களுக்கு தொந்தரவு கொடுத்து வந்த நிலையில், அவர் மீது புகார் கொடுக்கப்பட்டு வழக்கும் பதியப்பட்டது. இதுமட்டுமின்றி எங்கள் நிறுவனத்திற்கு பொருட்கள் விநியோகம் செய்யும் ஸ்ரீ சாய் என்டர்பிரைசஸ் எனும் நிறுவனத்தை மிரட்டியது தொடர்பாக அவர் மீது ஏற்கனவே ஒரு புகார் நிலுவையில் உள்ளது.
Also Read : அடுத்த சிக்கலில் விஜய்-ன் வாரிசு படக்குழு! விளக்கம் கேட்டு விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ்!
திமுக நிர்வாகி தேவா எங்கள் நிறுவனத்திற்கு வந்து மாமூல் கேட்டு மிரட்டுவார்; மாமூல் கொடுக்கவில்லை என்றால் பணி அனுமதி தர வேண்டும், இல்லையென்றால் பல்வேறு தொல்லைகள் கொடுப்பேன் என்றும் மிரட்டினார். இதனால் அவருக்கு சில பணிகளை கொடுத்தோம். ஆனால் பணிகளை ஒழுங்காக செய்யாமல், மாதம் பத்து லட்சம் ரூபாய் தர வேண்டும், இல்லையெனில் நிம்மதியாக தொழில் நடத்த விடமாட்டேன்; நான் ஏற்கனவே ஒரு கொலை செய்தவன், அதனால் புரிந்து நடந்து கொள்ளுங்கள்; உங்கள் நிறுவன M.Dஐ வந்து என்னை பார்க்க சொல்லுங்கள், இல்லையென்றால் இந்த சாலையில் வரவே முடியாதபடி செய்துவிடுவேன் என்றும் தேவா அச்சுறுத்தினார்.
21.11.22 அன்று அவர் என்னை நான்கு முறை தொலைபேசில் அழைத்தார். நான் அவரது அழைப்பை ஏற்கவில்லை. திமுக நிர்வாகி தேவாவால் நாங்கள் நிம்மதியாக நிறுவனப் பணிகளை கவனிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தேவா மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி 22/11/2022 அன்று இரவு 12:00 மணியளவில் மப்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தோம். பின்னர் அரசு அதிகாரிகள் முன்னிலையில் ரூ.2,50,000 செலவு செய்து சிமென்ட் பைப் புதைத்து சாலையை சீரமைத்தோம்.
திருவள்ளூர் அருகே பன்னாட்டு நிறுவனம் மாமூல் தர மறுத்ததால், அந்த நிறுவனத்துக்கு செல்லும் சாலையின் குறுக்கே பள்ளம் வெட்டி அராஜகம் செய்த திமுக நிர்வாகி. @EPSTamilNadu @AIADMKITWINGOFL @annamalai_k @SeemanOfficial @NaamTamilarOrg @TOodagam For full news –https://t.co/q6SKGTC96T pic.twitter.com/Z1g9nfBNuv
— VELS MEDIA (@VelsMedia) November 25, 2022
மறுநாள், 23/11/2022 காலை 8 மணிக்கு வழக்கம் போல் நான் அலுவலகத்திற்கு சென்ற போது மீண்டும் சாலையின் குறுக்கே பள்ளம் தோண்டப்பட்டு, நாங்கள் பதித்த சிமெண்ட் பைப் சாலையில் வீசப்பட்டு கிடநதது. எங்கள் நிறுவன வாகனங்கள் போகமுடியாமல் சாலையில் நிறுத்தப்பட்டிருந்தது. இது தொடர்பாக மப்பேடு காவல் நிலையத்திற்கு தெரிவித்தோம். காவல் துறையினர் விரைந்து வந்து விசாரித்தனர்.
புகார் கொடுத்த சிறிது நேரத்திலேயே மீண்டும் இது போன்ற சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடும் தேவா மற்றும் அவரது கூட்டாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது சொத்தை சேதம் செய்ய பயன்படுத்திய பொக்லைன் இயந்திரத்தையும் பறிமுதல் செய்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கும் வேண்டும்.” இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள மப்பேடு காவல்நிலைய போலீஸார், திமுக நிர்வாகி தேவாவை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry