முறைகேடுகளை தடுக்காத பள்ளிக் கல்வி ஆணையர்! ஆசிரியர் கூட்டணியின் குற்றச்சாட்டால் கல்வித்துறையில் பெரும் பரபரப்பு!

0
4496

ஐபெட்டோ தேசிய செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணி மூத்த தலைவருமான வா. அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “இயக்கக பணிகளை முற்றிலும் தவிர்த்துக் கொண்டு, மண்டல ஆய்வு என்ற பெயரால் பள்ளிக்கல்வி ஆணையர் தனது தலைமையில் இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் படைசூழ பள்ளிகளில் அதிரடி ஆய்வினை தொடர்ச்சியாக நடத்தி வந்தார்.

பள்ளித் திறந்து நூறு நாளைக்குள்ளாக மண்டலங்களுக்குள் மூன்று முறை இந்த அதிரடி மண்டல ஆய்வு நடைபெற்றது. இந்த ஆய்வினுடைய உள்நோக்கம் பள்ளிகளை பார்வையிடுவது அல்ல; நாடாளுமன்றத் தேர்தலுக்குள் ஆசிரியர்களை வெறுப்புணர்வின் உச்சத்திற்கு கொண்டுபோய், மறைந்த முதலமைச்சர் கருணாநிதி சம்பாதித்துள்ள ஆசிரியர்களின் வாக்கு வங்கியினை சேதாரப்படுத்த வேண்டும் என்பதுதான் உள்நோக்கம்.

Also Read : அடுத்த சிக்கலில் விஜய்-ன் வாரிசு படக்குழு! விளக்கம் கேட்டு விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ்!

மண்டல ஆய்வுக்கு இவர்கள் எல்லோரும் செல்வதனால் பள்ளிக்கல்வி ஆணையர் அலுவலகம், இயக்குனர்கள் அலுவலகம், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்கள், மாவட்ட, வட்டாரக் கல்வி அலுவலகங்களில் கோப்புகள் குவிந்து கிடக்கின்றன. அதற்குத் தீர்வு காண வேண்டும் என்று எந்த அக்கறையும் இல்லை. மாணவர்களுக்கு ஆசிரியர்களை பாடம் நடத்தவிடக் கூடாது என்பது புதிய கல்விக் கொள்கையின் மறைமுகமான செயல்பாடாகும். அதைத்தான் செய்து வருகிறார்கள்.

தனக்கு உறுதுணையாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் சிலரை ஆணையர் தயார் செய்து வைத்துள்ளார். லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை செய்வதுபோல் அன்றாடம் பள்ளி வாரியாக உள்ளே புகுந்து பீரோவினைத் திறந்து பார்ப்பது, பெட்டியினைத் திறந்து பார்ப்பது போன்ற பணிகளில் கூட ஈடுபட்டு வருகிறார்கள்.

நுண்ணறிவு பிரிவு மூலமாக இதுபற்றி பலமுறை நாம் ஆதாரத்துடனும் முதலமைச்சருக்கு தெரிவித்து விட்டோம். ஆனால் முதலமைச்சரும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும் கண்டு கொள்வதில்லை. ஆசிரியர்களைப் பொறுத்தவரையில், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று நினைத்து அதன்படி வாக்களித்து ஆட்சியில் அமர வைத்தார்கள். ஆனால், பள்ளிக்கல்வித்துறை ஆணையர் போன்றவர்கள் அன்றாடம் தருகின்ற மன உளைச்சலினால் வெறுப்பின் உச்சகட்டத்திற்கு சென்று, யாருக்கு வாக்களிக்கக்கூடாது என்பதில் 80% உறுதியாகிவிட்டார்கள்.

 • மிகக் குறைந்த ஊதியத்தில் தற்காலிகமாக நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு நான்கு மாதமாக ஊதியம் பெற்றுத் தர முடியவில்லையே? ஆணையர் பதவியினால் இந்த கல்வித் துறைக்கு என்ன பயன்?
 • ஒரே அலுவலகத்தில் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பணியில் இருந்தவர்களை பணியிட மாற்றம் செய்தார்கள். பணியிடமாற்றம் பெற்றவர்களுக்கு ‘Modification order’ என்ற முறையில் அன்றாடம் பேரம் பேசப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறதே? இது ஆணையருக்கு தெரியாதா?
 • ஆசிரியர்கள் பணியிடமாற்றம் என்ற பெயரால் நடைபெற்று வரும் முறைகேடுகள் ஆணையரின் பார்வைக்கு வரவில்லையா? பள்ளிக்கல்வி ஆணையர் என்ற பதவியில் இருப்பதால் எதை இவரால் தடுத்து நிறுத்த முடிந்தது? ஆனால், எவரையும் செயல்படவிடாமல் தடுத்து நிறுத்தி வருகிறார்.
 • எமிஸ் பணியாளர்களுடைய ஆதிக்கம், தொண்டு நிறுவனங்களுடைய ஆதிக்கம், அவுட்சோர்சிங் நியமனம் போன்ற செயல்பாட்டில் ஆணையர் எதனை தடுத்து நிறுத்திவிட்டார்?
 • ஒன்றரை லட்சம் புத்தகங்களில் இரட்டை இலை சின்னம் வெளிவந்ததே அதை ஏன் என்று கேட்டிருப்பாரா?
 • ஜேக்டோ ஜியோ மாநாட்டில் முதலமைச்சர் அறிவித்த அரசாணை 151 ஆங்கிலத்தில் மட்டுமே அவசரமாக வெளியிட்டார்கள். அதற்கு திருத்திய தெளிவுரையினை அனைத்து ஆசிரியர் சங்கங்களும் கேட்டுக்கொண்டே இருக்கிறோம். இதுவரை அதில் கவனம் செலுத்தியிருப்பாரா?
 • மாணவர்களுக்கு உரிய நேரத்தில் நோட்டுப் புத்தகங்களை வழங்குவதற்கு ஆணையர் நடவடிக்கை எடுத்தாரா?
 • அன்றாடம் எமிஸில் அதிகரித்துவரும் இணைய பிரச்சினைகளுக்கு இதுவரை தீர்வு கண்டிருப்பாரா?
 • நிர்வாக பணியிட மாற்றத்தின் காரணமாக, பணியிடமாற்றம் செய்யப்பட்ட 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்களுக்கு இதுவரை ஊதியம் வழங்கப்படவில்லையே? ஊதியம் பெற்று வழங்குவதற்கு ஆணையர் எடுத்த நடவடிக்கைதான் என்ன?
 • புதிய கல்விக் கொள்கையினை மறைமுகமாக தீவிரமாக அமல்படுத்துகிறார். நான்கு, ஐந்து வகுப்புகளுக்கு பொதுத் தேர்வினை நடத்தினார்.
 • எண்ணும், எழுத்தும் என்ற கற்பித்தலின் மூலம் அச்சடித்த பாடப்புத்தகத்தினை அப்புறப்படுத்தச் செய்து விட்டார்.
 • 26 ஆம் தேதி தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான குறுவளமையக் கூட்டம் நடைபெறுகிறது. அன்று வாக்காளர் சேர்த்தல் – நீக்கல், வாக்குச்சாவடி நிலைய அலுவலர் பணியும் உள்ளது. அதற்கு ஏதும் தெளிவுரை ஆணையை ஆணையர் இதுவரை வெளியிட்டுள்ளாரா?

அரசாணை 151 வெளியிட்டதற்குப் பின்பும், தஞ்சாவூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சிவக்குமார், மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள், ஆசிரியர் பயிற்றுநர்களை அழைத்து கூட்டம் போடுவது, குழு அமைத்து ஆய்வினை மேற்கொள்வது; கேட்டால் ஆணையர் சொல்லிவிட்டார் நான் செய்கிறேன் என்று சொல்லி, கடந்த இரண்டு நாட்களாக தஞ்சை மாவட்டம் முழுவதும் அதிரடி ஆய்வினை நடத்தி வருகிறார்.

இவருடைய உள்நோக்கமும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஆளும்கட்சியின் வாக்கு வங்கியினை முற்றிலும் சேதாரப் படுத்தவேண்டும் என்பதுதான். தஞ்சை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆசிரியர்களுடைய பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டுவிட்டாரா? அந்த அலுவலகத்தில் முறைகேடுகளே நடைபெறவில்லையா? அந்த அலுவலகத்தை யார் ஆய்வு செய்வது?

Also Read : ரூ.350 மதிப்புள்ள பேனருக்கு ரூ.8,000 கணக்கு! மதுபானம், மருந்து கொள்முதலில் பெரும் ஊழல்! ஆளுநரை உசுப்பிவிட்ட ஈபிஎஸ்!

தஞ்சாவூரைப் போன்றே மேலும் சில மாவட்டங்களில், முதன்மைக் கல்வி அலுவலர்கள் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி முதன்மைக் கல்வி அலுவலர் என்ற பழையமுறைப்படி அதிகாரத்தை எடுத்துக் கொள்ள ஆணையர் அவர்களை உற்சாகப்படுத்துகிறார். இவர் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர். சேலம் மாவட்டம் வளர்ச்சி பெற வேண்டும் என்பதற்காகவே மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்தபோதே முனைப்பு காட்டி செயல்பட்டவர்.

கோரிக்கைகள் எதுவும் நிறைவேறவில்லை என்று கொந்தளித்துப் போயுள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மத்தியில் ஆணையரின் ஆதிக்கம் வேதனைத் தீயில் அன்றாடம் வெந்து மடிந்து வருகிறார்கள். இந்த நிலைமையை நினைத்து எங்களைப் போன்ற மூத்த தலைவர்களுக்கு இரவில் படுத்தால் உறக்கம் வருவது இல்லை.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் நல்லாட்சிக்கு அதிருப்தியினை உருவாக்கி வருவதனை தடுத்து நிறுத்திட, உடனடியாக பள்ளிக்கல்வி ஆணையர் பதவியினை விடுவிக்க வேண்டுமென தலைமைச் செயலாளரையும், முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர் -1ஐயும் பெரிதும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம். நீங்கள் விசாரணைக்கு அழைத்தால் இவர்களைப் பற்றிய உள்ளும், புறத்தினையும் ஆதாரமாக பட்டியலிட்டு தரமுடியும் என்பதனை அடக்கத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.” இவ்வாறு வா. அண்ணாமலை அறிக்கையில் கூறியிருக்கிறார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry