கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலியில் திமுகவைச் சேர்ந்த இரண்டு மேயர்கள் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் மாநகராட்சியும் இதேபோன்றதொரு சிக்கலை பல மாதங்களாக எதிர்கொண்டு வருகிறது. திமுக மேயர் மகாலட்சுமி யுவராஜை தகுதி நீக்கம் செய்யக் கோரி, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் 30க்கும் மேற்பட்டோர் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வியைச் சந்தித்து இரண்டாவது முறையாக மனு அளித்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் 51 வார்டுகள் உள்ளன. உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு திமுகவைச் சேர்ந்த மகாலட்சுமி யுவராஜ் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், திமுக கவுன்சிலர்கள் பெரும்பாலானோர், அவரது செயல்பாடுகளில் திருப்தி அடையவில்லை. சில மாதங்களாக திமுகவை சார்ந்த கவுன்சிலர்களே மேயருக்கு எதிராக திரும்பத் தொடங்கினர்.
இதற்கு முக்கியக் காரணமாக, திமுக கவுன்சிலர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான மரியாதையும், அவர்களுடைய வார்டுகளுக்கு நிதி ஒதுக்கீடும் செய்யப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டை திமுக கவுன்சிலர்கள் முன்வைக்க தொடங்கினர். ஆரம்ப கட்டத்தில் இந்த பிரச்சனை சிறிதாக இருந்தாலும், நாட்கள் செல்ல செல்ல இந்த பிரச்சனை பூதாகரமாக வெடிக்க துவங்கியது.
மேயரின் கணவர் யுவராஜ் மேயரைப் போன்று செயல்படுவதுடன், அனைத்து ‘நிதி நடவடிக்கைகளையும்’ அவரே கவனித்துக் கொள்கிறார், மேயர் மௌன பார்வையாளராக இருக்கிறார் என்று திமுக கவுன்சிலர்களே குற்றம்சாட்டி வருகின்றனர். தங்கள் வார்டுகளில் எந்த வளர்ச்சித் திட்டங்களுக்கும் மகாலட்சுமி ஆதரவு தருவதில்லை என்றும் அவர்கள் புகார் கூறுகின்றனர். காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள இரண்டாவது மண்டல குழு தலைவர் சந்துரு மீதான தன் ஆதரவை விளக்கி கொள்வதாக கவுன்சிலர்கள் கமலக்கண்ணன், ஷர்மிளா, புனிதா, குமரன், ஷாலினி, விஜிதா மற்றும் துணை மேயர் குமரகுருநாதன் ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் கடிதம் அளித்துள்ளனர்.
ஏற்கனவே, மேயர் மகாலட்சுமி மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என, அதிருப்தி கவுன்சிலர்கள் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி, ஆணையர் செந்தில்முருகன் ஆகியோரிடம் மனு அளித்துள்ளனர். ஆனால், ஆணையர் செந்தில்முருகன் மாநகராட்சி கூட்டத்தை நடத்தாததால், நிலைக்குழு உறுப்பினர்கள் 14 பேர் ராஜினாமா செய்துள்ளனர். மேலும், மண்டல குழு தலைவர் சந்துரு மீதான ஆதரவை, ஏழு கவுன்சிலர்கள் நேற்று முன்தினம் விலக்கிக் கொள்வதாக கடிதம் கொடுத்துள்ளனர்.
சில மாதங்களுக்கு முன், மாநகராட்சி ஆணையரைச் சந்தித்து, மேயர் பெரும்பான்மை இழந்ததால், அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என, கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர். மகாலட்சுமிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதன் அடையாளமாக, ஜூன் மாதம் நடந்த கவுன்சில் கூட்டத்தை அவர்கள் புறக்கணித்தனர். 55 கவுன்சிலர்களில் 13 பேர் மட்டுமே மேயரின் அழைப்பை ஏற்று கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதற்கிடையே, அதிமுக கவுன்சிலர்களும் தகுதி நீக்க கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்தனர். இந்த சர்ச்சைக்கு மத்தியில், நகராட்சி நிர்வாக அமைச்சர் கே.என்.நேரு இரு குழுக்களுக்கும் இடையே சமாதானத்தை ஏற்படுத்த மத்தியஸ்தம் செய்ய முயன்றார், ஆனால் மகாலட்சுமியின் எதிர்ப்பாளர்கள் அசைந்து கொடுக்க மறுத்துவிட்டனர்.
கடந்த வெள்ளிக்கிழமை மாலை திமுக கவுன்சிலர்கள் மீண்டும் கலெக்டரை சந்தித்து, மேயர் மகாலட்சுமி பெரும்பான்மையை இழந்ததால் அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். காஞ்சிபுரத்தில் கடந்த 6 மாதங்களாக மேயர் கவுன்சிலர் கூட்டம் நடத்தாததால் அனைத்து வார்டுகளிலும் பணிகள் பாதிக்கப்படுவதாகவும், காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையர் மேயருக்கு ஆதரவாக இருப்பதால் அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.
மாமன்ற கூட்டத்தில் மேயருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருமாறு 30க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் மாநகராட்சி ஆணையரிடம் ஏற்கனவே மனு அளித்தனர். ஆனால் அந்த மனுவில் மேயரை நீக்கக் கூறும் காரணங்கள் முறையாக குறிப்பிடவில்லை, காரணங்கள் போதுமானதாகவும் இல்லை எனத் தெரிவித்து நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர ஆணையர் மறுத்துவிட்டார். எனவே ஆணையர் செந்தில் முருகனை மாற்றிவிட்டு, புதிய ஆணையரை நியமித்து நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வியிடம் 33 கவுன்சிலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் நெல்லை, கோவை மேயர்கள் ஒரே நாளில் ராஜினாமா செய்தனர். இருவருமே சொந்தக் காரணங்களுக்காக ராஜினாமா செய்வதாக வழக்கமான காரணங்களையே கூறியிரு்தார்கள். இதுகுறித்து கருத்து தெரிவிக்கும் அரசியல் நோக்கர்கள், “எந்த கோரிக்கை வைத்தாலும் நெல்லை மேயர் செய்து கொடுப்பதில்லை, அவருக்கென்று ஒரு கவுன்சிலர்கள் கூட்டத்தை உருவாக்கிக்கொண்டு தனியாக செயல்படுகிறார் என திமுக கவுன்சிலர்கள் கூறிவந்தனர். ஒருகட்டத்தில் மாமன்ற கூட்டத்திலேயே மேயரை விமர்சித்து சொந்த கட்சி கவுன்சிலர்களே பேசத் தொடங்கினர். அதேபோல, நெல்லை மாநகராட்சியில் ஊழல் அதிகமாக நடக்கிறது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை வேண்டும் என்றும் கேட்டனர்.
கோவையைப் பொறுத்தவரை செந்தில் பாலாஜியின் ஆதரவாளரான கல்பனா என்பவருக்கு மேயர் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆரம்பம் முதலே கவுன்சிலர்களுக்கும் மேயருக்கும் மோதல் போக்குதான் நிலவிக்கொண்டிருந்தது. கோவை பொறுப்பு அமைச்சரான செந்தில் பாலாஜி இருக்கும்வரை கல்பனாவுக்குப் பெரியளவில் சிக்கல் எதுவுமில்லை. செந்தில் பாலாஜி சிறைக்குச் சென்றபிறகு கல்பனாவின் செல்வாக்கு மெல்ல மெல்லக் குறையத் தொடங்கியது. மாமன்ற கூட்டத்திலேயே மேயருக்கு எதிராக ஆளும்கட்சி கவுன்சிலர்கள் பேச ஆரம்பித்தார்கள். மேயர் உள்நோக்கத்துடன் கோப்புகளில் கையெழுத்துப் போடாமல் இருக்கிறார் என்று கோவை மத்திய மண்டல தலைவர் மீனா லோகு மாமன்றத்திலேயே புகார் தெரிவித்தார்.
Also Read : மலையில் பயணிக்கும்போது காரில் ஏ.சி. போடலாமா? கூடாதா? மைலேஜை முன்னிலைப்படுத்தும் அறிவியல் விளக்கம்!
இந்தப் பிரச்சனைக்கு மூலக் காரணம் நிதி விவகாரம்தான். நிதி ஒதுக்குவது, நிதிப் பங்கீடு, கமிஷன் போன்றவற்றில் நெல்லை, கோவை மேயர்கள் தன்னிச்சையாக செயல்பட்டதைப் போலவே காஞ்சிபுரம் மேயரும் செயல்படுகிறார் என்பதுதான் புகாராகும். மேலும் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், திமுக அசைக்க முடியாத சக்தியாக வளர்ந்துவந்த செந்தில்பாலாஜியின் செல்வாக்கு பெருமளவு குறைந்துவிட்டது என்பதையே கோவை மேயரின் ராஜினாமா எடுத்துக்காட்டுகிறது.” என்று கூறுகிறார்கள்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry