எதிர்க்கட்சிகளின் பலமிழந்த தேர்தல் உத்தி, மோடிக்கும், மோடி அரசுக்கும் சாதகமாகவே அமைகிறது. திமுக–வின் இந்து எதிர்ப்புப் போக்கை இதற்கு நல்ல உதாரணமாகச் சொல்லலாம்.
2019 தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி, 303 இடங்களில் வெற்றிபெற்று அதீத பெரும்பான்மை பெற்றது. அக்கட்சி சுமார் 38 (37.6%) சதவிகித வாக்குகளை பெற்றிருந்தது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றிருந்த மற்ற கட்சிகள் 7% வாக்குகளை பெற்றன. எனவே பாரதிய ஜனதா கட்சியைப் பொறுத்தவரை கூட்டணி வாக்குகள் போனஸ்தான்.
அதனால்தான், கூட்டணியில் இருந்து சிவசேனா, சிரோன் மணி அகாலிதளம் ஆகிய கட்சிகள் வெளியேறியபோதுகூட, பாஜக பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் மகிழ்ச்சியாக வழியனுப்பி வைத்தது. 38 சதவிகித வாக்காளர்களை தக்க வைத்து, 2024 தேர்தலிலும் ஆட்சியைப் பிடிக்க பாரதிய ஜனதா கட்சி தெளிவாக திட்டமிட்டுள்ளது. புதிய வாக்காளர்கள், பாஜக-வுக்கு வாக்களித்தால் அதுபோனஸ் என்றும் அக்கட்சி கருதுகிறது. அதை நோக்கியதாகத்தான் மோடியின் அரசியலும், ஆட்சியும் நடத்தப்படுகிறது. புதிய வாக்காளர்களை ஈர்ப்பதற்கு முயற்சிப்பதைவிட, இருப்பவர்களை தக்க வைத்தாலே, அது தமக்கும், கட்சிக்கும் போதுமானதாக இருக்கும் என மோடி நம்புகிறார்.
அதேநேரம் 38% வாக்காளர்களை தக்க வைப்பது எளிதல்ல என்பதையும் மோடி – அமித் ஷா இருவரும் உணர்ந்திருக்கிறார்கள். வரும் ஆண்டுகளில் மோடி அரசின், பாஜக-வின் அரசியல் என்பது, 38% Vs 62% என்பதாகவே இருக்கும். இதில், மோடியின் பலம் என்னவென்றால் எதிர்க்கட்சிகள்தான். எதிர்க்கட்சிகளின் பிரித்தாளும் சூழ்ச்சி, மோடிக்கு சாதகமாக மாறிவிடுகிறது.
உதராணமாக, தமிழ்நாட்டில், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளால் ஓங்கி ஒலிக்கப்படும் இந்து எதிர்ப்பு கோஷம், நடுநிலை இந்துக்களையும், திமுக-வில் உள்ள மதப்பற்றுள்ள இந்துக்களையும் பாஜக பக்கம் நகர்த்துகிறது.
விவசாயிகள் போராட்டத்தை எடுத்துக்கொண்டால், திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதைத்தான், மோடி அரசும் வேளாண் சட்டமாக கொண்டு வந்ள்ளது. ஆனால், வேளாண் சட்டங்களுக்கு எதிராக திமுக போராடுகிறது. இது சந்தர்ப்பவாதம் என்பதை அக்கட்சியினரே ஒப்புக்கொள்கின்றனர்.
வேளாண் சட்டத்துக்கு எதிரான திமுக-வின் போராட்ட மேடையில், இந்துக்கள் வேதனைப்படும்படியான மத விமர்சனங்களும், மோடி மீதான தனிநபர் தாக்குதலும் முன்வைக்கப்பட்டன. சமூக நீதி பேசும் திமுக, இதை கண்டிக்கவில்லை. இதுவும் பாஜக-வுக்கு சாதகமாக மாறிவிட்டது. பாஜக என்றாலே இந்துக்கள், இந்துக்கள் என்றாலே பாஜக, மோடி இந்துக்களுக்காகவே ஆட்சி செய்கிறார் என்ற பிம்பத்தை, தமிழ்நாட்டில் ஏற்படுத்தியது திமுக-தான். இதுபோலத்தான் மற்ற மாநிலங்களிலும். எதிர்க்கட்சிகளின் தவறான அரசியல் உத்தி, பாஜக-வுக்கு, குறிப்பாக மோடி அரசுக்கு சாதகமாக மாறுகிறது.
பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, சிஏஏ, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து, வேளாண் சட்டங்கள், இப்படி மோடி அரசு கொண்டுவந்த திட்டங்களுக்கு எதிராக, நாடே கொந்தளிப்பது போன்ற தோற்றத்தை எதிர்க்கட்சிகள் ஏற்படுத்தின – ஏற்படுத்துகின்றன. ஆனால், தனக்கான வாக்கு வங்கியுடன், மோடி அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டுதான் இருக்கிறார்.
Author – K.Gopinath, Views expressed are personal.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry