தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு சாதகமாக இருந்ததா NR அரசு? மாணவர்கள் போராட்டத்துக்குக் காரணம் என்ன? 

0
40

தனியார் மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கையில் 50 சதவிகித இடங்களை கட்டாயம் அரசுக்கு தர வேண்டும் என்ற ஒப்பந்தத்தை அரசு நீட்டிக்காததால், புதுச்சேரி மாநிலத்தில், ஏழை மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேர முடியவில்லை.

நிர்வாக ஒதுக்கீட்டில், 50 சதவீத இடங்களுக்கும் அதிகமாக மாணவர்களை சேர்க்க, ஸ்ரீ மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லூரி, புதுச்சேரி மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனம் (PIMS) மற்றும் ஸ்ரீ வெங்கடேஷ்வரா மருத்துவக் கல்லூரிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என புதுச்சேரியை சேர்ந்த மாணவர்கள் ஏழு பேர் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவில், என்.ஆர். காங்கிரஸ் அரசின் மெத்தனம் வெளிப்பட்டுள்ளது.

தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஆண்டுகளில் 2000-ம் ஆண்டு மட்டும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சண்முகம் முதலமைச்சராக இருந்துள்ளார். 2004, 2005, 2006, 2014, 2015-ம் ஆண்டுகளில் ரங்கசாமிதான் முதலமைச்சராக இருந்தார்.

தீர்ப்பின் சாராம்சம்

நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவின் சாராம்சம் இதுதான். அதாவது, “ PIMS மருத்துவக் கல்லூரிக்கு 07.12.2000-த்திலும், மணக்குள விநாயகர் கல்லூரிக்கு 28.08.2004-லிலும் Essentially Certificate எனப்படும் அத்தியாவசிய சான்று வழங்கப்பட்டுள்ளது. அதில் 50% இடங்களை அரசுக்கு கொடுத்தாக வேண்டும் என குறிப்பிடப்படவில்லை. அத்தியாவசிய சான்று பெறும்போது, அரசுடனான ஒப்பந்தத்தில் 50 சதவீத இடங்களை வழங்குவதாக அந்த கல்லூரிகள் எந்த இடத்திலும் ஒப்புக்கொள்ளவில்லை.

‘50% இடங்கள் வரை ஒதுக்கீடு செய்யலாம்

2006-ம் ஆண்டில் புதுச்சேரி அரசு வெளியிட்ட ஒழுங்குமுறை ஆணையில், சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் தவிர்த்து, தனியார் தொழில்முறை கல்வி நிறுவனங்கள் அரசுக்கு 50%  ஒதுக்கீடு செய்யலாம்(‘may’ reserve upto 50%) என கூறப்பட்டுள்ளது. அதவாது கொடுத்தாக வேண்டும் என ஒழுங்குமுறை ஆணையில் குறிப்பிடவில்லை. PIMS-ம், வெங்கடேஸ்வராவும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களாக பதிவு செய்துள்ளன. எனவே, இந்த ஆணைப்படி மூன்று தனியார் கல்லூரிகளும் 50% இடத்தை அரசுக்கு கொடுக்கத் தேவையில்லை என்பது தெளிவாகிறது

அரசாணையும் வலியுறுத்தவில்லை

2006-ம் ஆண்டு புதுச்சேரி அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டது. (G.O. MS NO.91 dated 28-07.2006) அதில், தனியார் பொறியியல் கல்லூரிகள் அரசு ஒதுக்கீட்டின் கீழ் 50% இடங்களை நிரப்ப வேண்டும் என்று மட்டும்தான் கூறப்பட்டுள்ளது. மருத்துவக் கல்லூரிகள் பற்றி எதுவும் கூறவில்லை.

அரசுத் தரப்பு கோரிக்கை நிராகரிப்பு

புதுச்சேரி அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிடும்போது, புதுச்சேரியைச் சேர்ந்த மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்டம் இயற்றி, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், 50 சதவீத இடங்களை ஒதுக்க வேண்டுமெனவும் கோரப்பட்டது. ஆனால், 2006- ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட விதிகள் தற்போது பொருந்தாது என்று கல்லூரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சொன்னதை செய்த கல்லூரி

அரசு மற்றும் கல்லூரி நிர்வாகங்கள் இடையேயான ஒப்பந்தம் அல்லது புரிந்துணர்வில், ஒவ்வொரு ஆண்டும், அரசும் தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகங்களும் பேச்சுவார்த்தை நடத்தி இடஒதுக்கீட்டை முடிவு செய்து வந்தன. 16.04.2015-ல் வெங்கடேஸ்வரா கல்லூரிக்கு அத்திவாயவசிய சான்று கொடுக்கும்போது, 2014-15-ம் ஆம் கல்வியாண்டில் பின்பற்ற இடஒதுக்கீடு முறையை தொடர வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதன்படி அந்தக் கல்லூரி 53 இடங்களை ஒதுக்கியது

Prospectus-ல் 55, கேட்பது 75

தனியார் கல்லூரிகளில், அரசு ஒதுக்கீட்டின் கீழ், 50 சதவீத இடங்களை நிரப்ப வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தால், அதுகுறித்து விளக்க குறிப்பேட்டில் (Prospectus) தெளிவுபடுத்தி இருக்க வேண்டும். ஆனால், அரசு ஒதுக்கீட்டில், 55 இடங்கள் என, விளக்க குறிப்பேட்டில் காட்டப்பட்டுள்ளது.எனவே, அரசு ஒதுக்கீடாக, 50 சதவீத இடங்களை அமல்படுத்த முடியுமா என்பதில் உறுதியாக இல்லாததால், அரசு இந்த வழக்கில் மறைமுகமாக முயற்சி எடுத்துள்ளது.

மருத்துவப் படிப்புக்கான தேர்வு நடைமுறைகள் துவங்கியபின், விதிகளில் மாற்றம் செய்ய முடியாது. தேர்வு நடவடிக்கைகளில் மனுதாரர்கள் பங்கேற்றுள்ளனர், சிலர் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தற்போது, விளக்க குறிப்பேடு குறித்து கேள்வி எழுப்ப, அவர்களை அனுமதிக்க முடியாது. மனு, தள்ளுபடி செய்யப்படுகிறது.”என்று நீதிபதி உத்தரவிட்டார்.

இதன் மூலம், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50% இடங்களைப் பெற ரங்கசாமி ஆட்சியில் முனைப்பு காட்டவில்லை என்று தெரிகிறது. ஒழுங்குமுறை ஆணையில் 50% இடங்களை கொடுத்தாக வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தாலே, ஏழை மாணவர்கள் பலரது மருத்துவக் கனவு நனவாகியிருக்கும்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry