கோவில் திருவிழாக்கள் மற்றும் மங்கள நிகழ்வுகளில் தோரணங்கள் முக்கிய இடம் பெறுகின்றன. தமிழர்களின் நிகழ்வுகளைக் குறிக்கும் பண்பாட்டு அடையாளமாக தோரணங்கள் இன்றும் இருந்து கொண்டிருக்கின்றன. இந்தத் தோரணங்கள் இயற்கையாகக் கிடைக்கப் பெறும் பொருட்களைக் கொண்டு அமைக்கப்படுகின்றன.
நமது கலாசாரத்தில் உள்ள பல பழக்க வழக்கங்களை ஆராய்ந்து பார்த்தால் அவை, பெரும்பாலும் உடல் நலத்தையும், உள்ள நலத்தையும் மேம்படுத்துவதற்காகவே உருவாக்கப்பட்டிருக்கும். நாம் காலங்காலமாகக் கடைபிடிக்கும் பல்வேறு பழக்கங்களுக்குப் பின்னால் அறிவியல் ரீதியான காரணங்கள் பல இருக்கும்.
Also Read : குளிர்காலத்தில் குளிர்ந்த நீரில்தான் குளிக்க வேண்டும்! ஏன் தெரியுமா? Cold Shower Benefits in Winter!
அந்தக்காலத்தில் அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்படுவதில்லை. மங்கல, அமங்கல நிகழ்வுகள் நடப்பதைக் குறிக்க வீட்டு வாசலில் தோரணங்கள் கட்டப்பட்டன. அவை கட்டப்பட்டிருக்கும் முறையை வைத்தே அந்த வீட்டில் என்ன நடக்கிறது எனக் கூறிவிடலாம். தோரணமில்லை என்றாலும் ஒரு கொத்து மாவிலையையும், வேப்பிலையும் வாசலில் சொருகி வைத்திருப்பார்கள். அதற்கான காரணம் என்னவென்று பார்ப்போம்.
தென்னங் குருத்தோலைத் தோரணம்:
தென்னங் குருத்தோலையால் செய்யப்படும் குருத்தோலைத் தோரணங்களை மங்களத் தோரணம், அமங்களத் தோரணம் என்று இரண்டாக வகைப்படுத்தப்படுகின்றன. இத்தோரணங்களில், இடம் பெறும் மடிப்பு, கட்டமைப்பு குருவிகள் எனப்படுகின்றன.
சமய விழாக்கள் மற்றும் திருமணம் முதலான மங்களகரமான நிகழ்வுகளின் போது கட்டப்படுபவை மங்களத் தோரணங்கள் எனப்படும். இவ்வகைத் தோரணங்களானது நான்கு குருவிகளைக் கொண்டதாகவும், இத்தோரணங்களில் குருவிகளின் தலை மேல் நோக்கியும் வால் கீழ் நோக்கியும் இருக்கின்றன. இறப்பு உள்ளிட்ட அமங்கள நிகழ்வுகளின் போது கட்டப்படுவது அமங்களத் தோரணம் எனப்படும். இவ்வகைத் தோரணங்களானது மூன்று குருவிகளைக் கொண்டதாகவும், இத்தோரணங்களில் குருவிகளின் தலை கீழ் நோக்கியும் வால் மேல்நோக்கியும் இருக்கின்றன.
மாவிலைத் தோரணம்:
இந்து சமயப் பண்பாட்டில், வீடுகளில் திருமணம் உள்ளிட்ட பல்வேறு விழாக்களின் போது, மங்களத்தின் அடையாளமாக மாவிலைத் தோரணம் கட்டப்படுகிறது. குறிப்பாக, நிலவாசற்படியில் இந்த மாவிலைத் தோரணத்தை சிறப்பு நாட்களிலும், விழாக்களின் போதும் அனைத்து வீடுகளிலும் கட்டுவது வழக்கமாக இருக்கிறது. இப்படி மாவிலைத் தோரணம் கட்டுவதால் வீட்டில் துன்பம் தரக்கூடிய துர்சக்திகள் நுழைய முடியாது என்கிற நம்பிக்கையும் இருக்கிறது.
ஒரு நூலை மஞ்சளில் தோய்த்து எடுத்து, மாவிலைகளை ஒரே அளவு உள்ளதாக எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு, அதனைச் சுத்தம் செய்து துடைத்து, அதில் மஞ்சள் தடவி குங்குமம் வைத்து நன்கு காய வைத்து கட்ட வேண்டும். அந்த நூலில் 11 அல்லது 21, 101 எனும் எண்ணிக்கையில் மாவிலைகளைக் கோர்க்கப்பட்டு இத்தோரணம் அமைக்கப்படுகிறது.
சமய விழாக்களாக இருப்பின், இந்த மாவிலைத் தோரணத்துடன் சில வேப்பிலைக் கொத்துகளையும் சேர்த்துத் தோரணம் அமைக்கப்படுகிறது. மாவிலைகளுக்கு ஒரு சிறப்பு தன்மை உண்டு. அவை மரத்தில் இருந்து பறித்த பிறகும் கரியமில வாயுவை எடுத்து கொண்டு ஆக்ஸிஜனை வெளிவிடும் தன்மை கொண்டவை. மேலும் மா இலைகள் கிருமி நாசினி என்பது இங்கு கவனத்திற்குரியது.
நாம் வசிக்கும் வீட்டில் மின் காந்த அலை என்பது இருந்து கொண்டே இருக்கும். இது நல்ல விஷயங்களை மட்டுமல்ல, தீய விஷயங்களையும் ஈர்க்கக் கூடியவை. இவைகள் வீட்டிற்குள் வராமல் இருக்க நம்மால் தடை போட முடியாது. அப்படி போட்டால் வீட்டிற்குள் வர வேண்டிய நல்ல சக்திகளும் வராமல் தடைபட்டு நின்று விடும். இதனால் வீட்டிற்கு வெளியிலும், வீட்டிற்குள்ளும் இருக்கும் கெட்ட சக்திகளை நீக்கி, நல்ல சக்திகளை தக்க வைக்கும் வடிகட்டியாக மாவிலைகள் செயல்படுகின்றன.
வேப்பிலைத் தோரணம்:
ஒரு நூலை மஞ்சளில் தோய்த்து எடுத்து, அதில் வேப்பிலைக் கொத்துகளைக் கோர்த்து இத்தோரணம் அமைக்கப்படுகிறது. அம்மன் கோயில் திருவிழாக் காலத்தில், தெருக்களில் இத்தோரணம் அமைக்கப்படுகிறது. இதே போன்று, வீட்டில் யாருக்காவது அம்மை நோய் ஏற்பட்டிருந்தாலும், வீட்டு வாசலில் வேப்பிலைத் தோரணம் அமைக்கப்படுகிறது. இந்தத் தோரணத்தில் கட்டப்படும் வேப்பிலை கிருமிநாசினி என்பதால் அம்மை நோய் உள்ளிட்ட கோடைக்கால வெப்பநோய்கள் குணமடையும் என்கிற நம்பிக்கையும் இருக்கிறது.
பூத்தோரணம்:
இந்து சமய விழாக்களின் போது கோயில்கள், வீடுகள் போன்றவற்றில் அழகுக்காக பூ தோரணங்கள் அமைக்கப்படுகின்றன. மல்லிகை, சம்பங்கி, ரோஜா உள்ளிட்ட பல அழகிய மலர்களைக் கொண்டு இத்தோரணங்கள் அமைக்கப்படுகின்றன. பிறந்த நாள், பூப்புனித நீராட்டு விழா, திருமணம் உள்ளிட்ட பல்வேறு சுபநிகழ்வுகள் நடைபெறும் போது, அரங்கங்கள் மற்றும் மேடைகளில் பூ தோரணங்கள் அமைக்கப்படுகின்றன. பொங்கல் திருநாளின் போது, பூளைப் பூ, ஆவாரம் பூ போன்றவைகளைக் கொண்டு தோரணம் அமைக்கப்படுகிறது.
Also Read : பூனை குறுக்கே சென்றால் அபசகுனமா? பூனை சகுனத்தில் மறைந்திருக்கும் அறிவியல் ரகசியம்!
பொதுவாக மாவிலை தோரணம் கட்டியிருந்தால் அந்த வீட்டில் ஏதோ சுபவிசேஷம் என்று ஊர் மக்கள் தெரிந்து கொள்வார்கள். வேப்பிலை சொருகி இருந்தால் அந்த வீட்டில் அம்மை நோய் தாக்கி இருக்கிறது என்பதை அறிவார்கள், மாவிலையில் லட்சுமியும், வேப்பிலையில் ஆதிசக்தியும் குடியிருக்கிறார்கள் என்பது ஐதீகம்.
மாவிலை நேர்மறையான எண்ணத்தை உண்டாக்க வல்லது. மாவிலை காற்றிலிருக்கும் கார்பன் -டை-ஆக்சைடையும், வேப்பிலை காற்றிலிருக்கும் நஞ்சையும் உறிஞ்சும் சக்தி கொண்டது. இந்த இரு இலைகளும் எப்போதுமே, எந்த காலக்கட்டத்திலும், அழுகிப்போவதில்லை. இலை துளிர்த்து, முதிர்ந்து, காய்ந்து, சருகாகி மக்கித்தான் போகுமே தவிர, பாதியிலேயே அழுகிப்போகாது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry