மானியமும் இல்லை, கேஸ் சிலிண்டர் விலையும் கடும் உயர்வு! வாக்குறுதிப்படி மானியம் வழங்குமா தமிழக அரசு?

0
101

பெட்ரோல், டீசலைத் தொடர்ந்து வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.25.50 காசுகள் உயர்ந்துள்ளது. இது ஏழை, நடுத்தர மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை, கடந்த டிசம்பர் 1-ம் தேதி, ரூ. 610ஆக இருந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் ரூ.100 உயர்த்தப்பட்டது. அந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள், கடந்த மார்ச் மாதத் தொடக்கத்திலேயே மேலும் 25 ரூபாய் உயர்த்தப்பட்டு, ரூ.835-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஏப்ரல் 1-ந்தேதி சிலிண்டருக்கு ரூ.10 குறைக்கப்பட்டது.

இந்நிலையில், 14.2 கிலோ வீட்டு உபயோக சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.25.50 உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னையில் ஒரு சிலிண்டர் விலை ரூ.825ஆக இருந்தது. தற்போது ரூ.25.50 காசு உயர்த்தப்பட்டு இருப்பதால், சிலிண்டர் விலை ரூ.850.50 ஆக உயர்ந்துள்ளது. சிலிண்டரை வீட்டில் கொண்டுவந்து சேரக்கும் டெலிவரி மேன்களின் டிப்ஸோடு சேர்த்தால், ஒரு சிலிண்டர் விலை ரூ.875-க்கும் அதிகமாகவே இருக்கும்.

இதேபோல, 19 கிலோ கொண்ட வர்த்தக பயன்பாட்டு சிலிண்டருக்கு ரூ.84.50 காசு உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இதன் விலை ரூ.1603ஆக இருந்தது. இப்போது ரூ.1685.50ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், வீட்டு உபயோக சமையல் எரிவாயுவுக்கு வழங்கப்பட்டு வந்த மானியமும் பெருமளவு குறைக்கப்பட்டுவிட்டது.

2014-ம் ஆண்டில், மானியத்தை, எண்ணெய் நிறுவனங்களுக்குக் கொடுக்காமல், நேரடியாக மக்களுக்கே வழங்கும் திட்டத்தை மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு கொண்டுவந்தது. இந்தத் திட்டத்தை அப்போது எதிர்க்கட்சியாக இருந்த பா... கடுமையாக எதிர்த்தது. பின்னர் பா..க ஆட்சிக்கு வந்ததும், தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றி, மானியத்தை மக்களின் வங்கிக் கணக்குக்கே செலுத்தும் திட்டத்தை ஊக்குவித்தது.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை மத்திய அரசு நிர்ணயம் செய்துவந்த நிலையில், சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்களே தீர்மானிக்கலாம் என்று மத்திய பா..க அரசு மாற்றி அமைத்தது. தற்போதைய நிலையில் சமையல் கேஸ் சிலிண்டரின் விலையை நிர்ணயம் செய்வது யார் என்பது தெரியவில்லை.

வங்கிக் கணக்கில் மானியம் செலுத்தப்பட்டு வந்தபோது, மக்கள் கையிலிருந்து கொடுக்கும் தொகை அதிகமாக இருந்தது. இருப்பினும் மானியம் கிடைக்கிறது என்பதால் மக்கள் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. 2015-ம் ஆண்டு, ரூ.998-க்கு சமையல் காஸ் சிலிண்டரின் விலை உயர்ந்திருந்தாலும், அது பொதுமக்களைப் பெரிய அளவில் பாதிக்கவில்லை. ஏனென்றால், அப்போது மானியமாகக் கிடைத்த தொகை ரூ. 563. தற்போது ஒரு சமையல் காஸ் சிலிண்டரின் விலை சுமார் 850 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் மானியமும் கிடைப்பதில்லை.

தமிழகத்தில் பல மாவட்டங்களில் பெட்ரோல் விலை ரூ.100ஐத் தாண்டிவிட்டது. சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில ரூ. 100ஐ நெருங்கி வருகிறது. டீசல் விலையும் லிட்டர் ரூ.93ஐத் தாண்டிவிட்டது.  கொரோனா ஏற்படுத்திய பொருளாதாரத் தாக்கத்திலிருந்து மீள முடியாமல் தவிக்கும் நிலையில், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர், ஆட்டோ கேஸ் விலை உயர்வு, ஏழை மற்றும் நடுத்தர மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

இதனிடையே, சமையல் எரிவாயு மீதான ஜி.எஸ்.டி. வரியை நீக்குமாறு மத்திய அரசிடம் கோருவதுடன், ஏழை, நடுத்தர மக்களின் சுமையினைக் குறைக்க மாதந்தோறும் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் ரூ. 100 எரிவாயு மானியம் வழங்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. எனவே, திமுக அரசு சமையல் எரிவாயு மானியம் வழங்குமா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர்வின் தாக்கத்தால், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துகொண்டே வருகிறது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry