தமிழக ரேஷன் அட்டைதாரர்களின் ஆதார் எண், தனி நபர் தகவல்கள் விற்பனை! பெரிய அச்சுறுத்தல் என நிபுணர்கள் எச்சரிக்கை!

0
29

தமிழகத்தில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களில், 68 லட்சம் பேரின் அனைத்து விவரங்களும் திருடு போயிருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இது மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் என்று சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகின்றனர்.

பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும்டெக்னிசாங்க்ட்‘(Technisanct) என்ற நிறுவனம் இந்தத் தகவல் திருட்டை அம்பலப்படுத்தியுள்ளது. தமிழ்நாடுசிவில் சப்ளைஸ்மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் வலைதளத்தில் இருந்து(tnpds.gov.in), ‘945VN’ என்ற புனைப்பெயரில் இயங்கும், வியட்நாம் நாட்டைச் சேர்ந்த சைபர் திருடன், கடந்த 28-ந் தேதி இந்தத் திருட்டில் ஈடுபட்டதாக தெரிகிறது.

தகவல் விற்பனைக்கு என குறிப்பிடப்பட்டுள்ள ஸ்கிரீன் ஷாட். Pic Courtesy DT Next

மொத்தம் 68 லட்சம் ரேஷன் கார்டு தாரர்களின்  தனிநபர் தகவல்கள், 67 லட்சம் ஆதார் எண்கள் திருடப்பட்டுளளன. ரேஷன் அட்டை எண், ஆதார் எண், பயனாளர்களின் பெயர், அவரது குடும்ப உறுப்பினர்கள், உறவுமுறை, விலாசம், மொபைல் எண் போன்றவை அரசு இணையதளத்தில் இருந்து களவாடப்பட்டுள்ளது. இதில் 49 லட்சத்து, 19 ஆயிரத்து, 668 பேரின் ஆதார் எண்கள் கடந்த 28-ந் தேதி “DARK WEB”-ல் வெளியிடப்பட்டுவிட்டது.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள https://www.technisanct.com/ நிறுவன சிஇஓ நந்தகிஷோர் ஹரிகுமார், தமிழக காவல்துறை சைபர் பிரிவுக்கு தகவல் அளித்துள்ளதாகக் கூறினார். மேலும் எவ்வளவு தகவல்கள் திருடப்பட்டுள்ளன, அது டார்க் வெப்பில் வெளியிடப்பட்டுவிட்டதா என்பது குறித்து ஆராயுமாறு, தங்கள் நிறுவனத்தின் Computer Emergency Response Team-க்கு பணித்துள்ளதாகக் கூறினார். 

சைபர் சட்ட பிரபல வழக்கறிஞரும், சைபர் பாதுகாப்பு ஆலோசகருமான ராஜேந்திரனிடம் வேல்ஸ் மீடியா சார்பில் இதுகுறித்து கேட்டபோது, “எல்லா திருட்டுகளுக்கும் அச்சாரம் டேட்டா திருட்டுதான். சர்வரில் இருந்து ஒரு முறை டேட்டா திருடப்பட்டால், அவ்வளவுதான். அதை எதுவும் செய்யமுடியாது. ரேஷன் கார்டுடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளது, ஆதாருடன் மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளது. இதுதான் அச்சுறுத்தலே. இதன் மூலம் உங்கள் பெயரில் யார் வேண்டுமானாலும் டூப்ளிகேட் சிம் வாங்க முடியும். அப்படி சிம் வாங்கப்பட்டுவிட்டால்,  உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை சுரண்டுவது மற்றும் உங்கள் கிரெட், டெபிட் கார்டு தகவல் திருட்டுக்கு முதல் படியாக அமையும்.

டூப்ளிகேட் சிம் மூலம் சட்ட விரோத நடவடிக்கைகளிலும் சிலர் ஈடுபடக்கூடும். எனவே,  வாடிக்கையாளர்கள் மிகவும் உஷாராக இருக்க வேண்டும். டேட்டா மேனேஜ்மென்டை, அரசு தனியார் வசம் ஒப்படைப்பதும் இதுபோன்ற பிரச்சனைகளுக்குக் காரணமாகிறது. அப்படி ஒப்படைத்தால், அதற்கான ஒப்பந்தம் போட்டு, வழிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை அரசு தனது பிரதிநிதி மூலம் தினமும் ஆராய வேண்டும். அரசுத் துறைகள், அரசு நிறுவனங்கள் தகவல் பரிமாற்றங்களுக்காக பொதுத்தளமான GMAIL பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். @nic.in என்ற மத்திய அரசின் இணைய முகவரித் தொடர்பை பயன்படுத்துவதே பாதுகாப்பானது. தமிழ்நாட்டுக்கான @tn.gov.in என்றோ அல்லது tn@nic.in  என்றோ அல்லது அது போன்றதொரு ஈமெயில் தளத்தை பயன்படுத்தலாம்.

தமிழ்நாடு அரசின் டேட்டாக்களை நிர்வகிக்கும் நிறுவனம் தமிழ்நாட்டிலேயே இருப்பது அவசியம். அப்போதுதான் கண்காணிப்பு செய்ய முடியும். பத்திரப்பதிவை தமிழ்நாடு அரசு ஆன் லைன் செய்துள்ளது. இந்தத்துறையின் டேட்டாக்கள் மிகவும் ரகசியமாகக் காக்கப்பட வேண்டியவை. தற்போது நடந்துள்ளதுபோன்ற இந்தத் துறையின் டேட்டாக்கள் திருடப்பட்டால், கோடிக்கணக்கான ரூபாய் அளவிலான ரகசிய பரிவர்த்தனைகள் அம்பலமாகும். அதன் மூலம் சம்பந்தப்பட்ட நபரிடம் மிரட்டி பணம் பறிக்கப்படலாம். அதேபோல், டூப்ளிகேட் பத்திரம் போட்டு இடத்தை அபரிக்கும் முயற்சிகூட நடக்கலாம். எனவே டேட்டாக்களை அரசு மிகவும் பாதுகாப்புடன் கையாள வேண்டும்என்று விரிவாகப் பேசினார்.   

ஏற்கனவே, கடந்த மாத துவக்கத்தில், தமிழ்நாடுசிவில் சப்ளைஸ்மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் வலைதளம், ‘ஹாக்செய்யப்பட்டது. ‘1945 விஎன்என்ற புனைப்பெயரில் இயங்கும், அதே நபர் தான் தற்போதும் தகவல்களை திருடினாரா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry