படுக்கையில் இருந்து எந்தப் புறமாக எழுந்திருக்க வேண்டும்? பின்னணியில் உள்ள வியக்க வைக்கும் அறிவியல்!

0
55

தூங்கி எழுந்திருக்கும்போது எந்தப்புறமாக எழுந்திருக்க வேண்டும் என்பதை சித்தர்கள் வரையறுத்து வைத்துள்ளனர். அதன் பின்னணியில் உள்ள அறிவியல்தான் சுவாரஸ்யமானது, நுணுக்கமானது.

வழக்கமாக இரு காந்த வளையங்கள் நம் உடலைச் சுற்றுகின்றன. இதில் முதல் அலையானது, காலில் இருந்து தலைக்கும், தலையில் இருந்து காலுக்கும் வலம் வருகிறது. இரண்டாவது காந்த வளையமானது, இடப் பக்கமிருந்து முன்பாகம் வழியாக வலப்பக்கத்துக்கும், வலது பக்கத்திலிருந்து பின்பாகம் வழியாக இடதுபக்கத்துக்கும் வலம் வருகின்றது. காந்த வளையத்தின் திசைக்கேற்றவாறு உடல் அசையும்போது காந்த வளையத்தின் சுருள்கள் இறுகுகின்றன.

காந்த வளையத்துக்கு எதிராக அசையும்போது உடல் இயந்திரத்தின் செயல்திறன் தளர்வடையும்.  எனவே படுக்கையைவிட்டு வலது புறமாகத்தான் எழ வேண்டும் என சித்தர்கள் கூறிவிட்டுச் சென்றுள்ளனர். படுக்கையைவிட்டு வலது பக்கமாக திரும்பி எழுந்திருக்கும்போது, காந்த வளையத்தின் சுருள்கள் இறுகுவதாக நவீன மின்னியல் ஏற்கிறது.   

அதேபோல், ஆழ்ந்த தூக்கம், அதாவது நித்திரை மிக மிக இன்றியமையாதது. அன்றாட இன்னல்களில் இருந்து ஆத்மாவுக்குள் ஒதுங்குவதையே நித்திரை என்கிறோம். சூரிய உதயத்துக்கு முன் பிரம்ம முகூர்த்த நேரத்தில் தூக்கத்தைப் பிரிந்து தினசரி அலுவல்களில் ஈடுபட வேண்டும் என சித்தர்கள் வரையறுத்துள்ளனர். எனவே பிரம்ம முகூர்த்த நேரத்தில் கண்விழித்து வலப்புறமாக திரும்பி எழ வேண்டும்.

வலப்புறமாக எழுந்த உடனேயே நடந்து செல்லக்கூடாது. தூக்கத்தில் இருக்கும்போது மனிதனின் ரத்த ஓட்டத்துக்காக இதயம் மிகக்குறைவான சக்தியயையே பயன்படுத்தும். எனவே எழுந்தவுடனேயே நமது செயல்பாடுகளைத் தொடங்கும்போது, இதயம் கடினமாகச் செயல்பட வேண்டியிருக்கும். இது இதயத்துடிப்பை அதிகரிக்கச் செய்யும். எனவே வலப்புறமாக திரும்பி எழுந்து உட்கார்ந்து, உள்ளங்கைகளை விரித்து பார்க்க வேண்டும்.

பின்னர், இன்றைய நாளை சிறப்பாக ஆக்கித்தருமாறு, அவரவர்க்கு பிடித்தமான கடவுள் அல்லது குலதெய்வங்களை சில நிமிடங்கள் பிராத்திக்கலாம். (அனைத்து மதத்தினருக்கும் இது பொருந்தும்). மனமொன்றி சில நிமிடங்கள் பிரார்த்திப்பதே தியானம் போன்றதுதான். இதனால் உங்கள் மனம் எந்த சஞ்சலத்துக்கும் ஆட்படாமல், அறையதினம் சிறப்பாக இருக்கும். எழுந்து நின்றவுடன் ஆண்கள் வலது கால் பெருவிரலை பூமியில் அழுத்திய பிறகும், பெண்கள் இடது கால் பெருவிரலை பூமியில் அழுத்த வேண்டும். பின்னர் படுக்கையை சரி செய்துவிட்டு உங்கள் பொழுதை இனிமையாகத் தொடங்கலாம். முன்னதாக நீங்கள் தூங்கச் செல்லும் முன், முதுகுத் தண்டுவடம் நேராக இருக்கும் வகையில், தரைவிரிப்பில் அமர்ந்து தியானம் செய்யலாம். இப்படிச் செய்யும்போது நீங்கள் ஆழ்ந்த தூக்கத்துக்குச் செல்ல முடியும். 

தகவல் உதவி: டாக்டர் வெங்கானூர் பாலகிருஷ்ணன்

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry