அக்டோபர், நவம்பரில் கொரோனா 3-வது அலை உச்சமடையலாம்| மத்திய அரசு விஞ்ஞானிகள் குழு எச்சரிக்கை!

0
11

கோவிட்-19, 3-வது அலை அக்டோபர், நவம்பர் மாதங்களில் உச்சம் அடையக்கூடும் என்று மத்திய அரசின் விஞ்ஞானிகள் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. பாதுகாப்பு நடைமுறைகளை முறையாக பின்பற்றாவிட்டால், பாதிப்பு எண்ணிக்கை எகிறும் என்றும் அக்குழு கூறியுள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை குறைந்து வருகிறது. விரைவில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிடலாம் என மக்கள் நினைத்துக் கொண்டிருந்தபோது,  மூன்றாவது அலை மற்றும் டெல்டா வகை வைரஸ் மீண்டும் பீதியடையச் செய்துள்ளது.

கொரோனா பாதிப்புகள் பற்றி முன்கூட்டியே கணிப்பதற்காக, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை சார்பில் 3 பேர் கொண்ட ஐஐடி விஞ்ஞானிகள் குழு கடந்த ஆண்டு அமைக்கப்பட்டது. இந்த குழுவில் மணீந்திர அகர்வால், வித்யாசாகர், மாதுரி கனிட்கர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். கொரோனா 3-வது அலை பாதிப்பு குறித்து தற்போது இந்தக் குழு கணித்துள்ளது. அதில், நோய் எதிர்ப்பு திறன் மற்றும் தடுப்பூசியின் செயல் திறன் இழப்பு, புதிய உருமாறிய கொரோனா வகைகள் என்பன உள்ளிட்ட பல்வேறு காரணிகள் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளன.  2வது அலை தாக்க முன்கணிப்பின்போது இந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை.

அந்தக் குழுவின் கணிப்பின்படி, கொரோனா 3வது அலை அக்டோபர், நவம்பர் மாதங்களில் உச்சமடையலாம், தினசரி பாதிப்பு அளவு பெரும்பாலும் 50,000 முதல் ஒரு லட்சம் என்ற அளவிலேயே இருக்கக்கூடும். அதேநேரம், தடுப்பூசி செலுத்தும் திட்டம் தீவிரப்படுத்தும்போது, கொரோனாவின் மூன்றாம் அல்லது நான்காம் அலையால் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது.

பாதுகாப்பு நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை என்றால், மூன்றாம் அலையின்போது தினசரி பாதிப்பு 1.5 லட்சம் முதல் 2 லட்சம் அளவுக்கு உயர வாய்ப்புள்ளது. அதேநேரம் 3-வது அலையின்போது மருத்துவ சிகிச்சை தேவைப்படுவோர் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் குழு கணித்துள்ளது.

இதனிடையே, கொரோனா தடுப்பூசி போடாத மக்களிடையே டெல்டா ப்ளஸ் வைரஸ் வேகமாக பரவி சமூகப் பரவலை ஏற்படுத்தக்கூடும். அனைவருக்கும் தடுப்பூசி போட்டால் மட்டுமே டெல்டா பரவலை கட்டுப்படுத்த முடியும்என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மூன்றாவது அலை என்பது டெல்டா ப்ளஸ் வைரசால் மட்டுமே ஏற்படும் என்றில்லை, இந்த இடைப்பட்டக் காலத்தில் உருமாற்றம் அடைந்த வேறொரு கொரோனா வைரஸ் கூட கண்டறியப்படலாம். எனவே, எதுவாக இருந்தாலும் மூன்றாவது அலை உருவாகுவதற்குள் தடுப்பூசி செலுத்திக்கொள்வது மிக நல்லது.

இந்தியாவில் இரண்டாவது அலையில் டெல்டா வேரியண்ட் முக்கியப் பங்காற்றியது. இந்த இரண்டாவது அலையில் கோவேக்சின்/ கோவிஷீல்டு போடப்பட்டவர்கள் தீவிர தொற்றில் இருந்து காக்கப்பட்டனர். தடுப்பூசி செலுத்தப்பட்டு விட்டால், மூன்றாவது அலையின்போது, மருத்துவமனை அட்மிஷன்கள், ஆக்சிஜன் தேவைப்படும் நிலை, ஐசியூ அட்மிஷன்கள், மரண விகிதம் மிகவும் குறைவதற்கு வாய்ப்புள்ளதாகவும்மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry