தமிழகத்தில் கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பே வெயில் கொளுத்தத் தொடங்கியுள்ளது. கடந்த மாதத்தில் இருந்தே வெயில் அதிகமாக காணப்படுகிறது. தமிழகத்தின் சில இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டிவிட்டது. சென்னையிலும் வெயில் அதிகமாக கொளுத்துகிறது.
இந்த நிலையில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் நாளை தொடங்கி வரும் 28-ந் தேதி வரை, 25 நாட்களுக்கு நீடிக்கும். அக்னி வெயில் காலகட்டத்தில் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருக்கும்.
பல மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தும். சில மாவட்டங்களில் வெயில் 110 டிகிரியையும் தாண்டிவிடும். இதன் காரணமாக பகல் நேரத்தில் அனல்காற்று வீசும். இரவு நேரத்தில் புழுக்கம் அதிகமாக காணப்படும்.
அக்னி நட்சத்திரம் என்றால் என்ன?
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் 21-ந் தேதி முதல் வைகாசி மாதம் 14-ந் தேதி வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இதனை ‘அக்னி நட்சத்திரம்’ என்று கூறுகிறார்கள். இந்த காலம் வடகிழக்கு பருவமழை காலத்திற்கும், தென்மேற்கு பருவமழை காலத்திற்கும் இடைப்பட்ட காலமாகும்.
சூரியனுடைய சஞ்சாரம் தொடர்பாக அமையும் காலப்பகுதியான அக்னி நட்சத்திரத்தின் முதல் ஏழு நாட்கள் சுமாராகவும், இடையில் ஏழு நாட்கள் மிக அதிகமாகவும் கடைசி ஏழு நாட்கள் சுமாராகவும் வெப்பத்தின் தாக்கம் இருக்கும்.
கோடைக்கால நோய்கள்
வியர்க்குரு, சின்னம்மை, சரும நோய்கள், காய்ச்சல் போன்றவற்றால் கோடைக்காலங்களில் பவரும் அவதிப்படுவார்கள். அவற்றில் முதன்மையானது, சிக்கன்பாக்ஸ் என்று சொல்லக்கூடிய சின்னம்மை. வெளியில் வேலை செய்பவர்களுக்கும், டூ வீலரில் அலைபவர்களுக்கும் இது எளிதில் தொற்றும். பாதிக்கப்பட்ட ஒருவரிடமிருந்து, தூசு மற்றும் புகை மண்டலம் வழியாக எளிதாக மற்றவர்களுக்கும் பரவிவிடும். உடம்பில் நீர்ச்சத்துக் குறைந்தாலும் சின்னம்மை ஏற்படும். இவை, ஒரு வாரத்தில் தாமாகவே மறைந்துவிடும். வேப்பிலைகளை விரித்து அதன்மீது படுப்பது, வேப்பிலை, மஞ்சள் கலந்த நீரில் குளிப்பது, வேப்பங்கொழுந்தை அரைத்துக் குடிப்பது போன்றவற்றை கடைபிடித்தால் கொப்புளங்களால் ஏற்படக்கூடிய அரிப்பு நீங்கும்.
அடுத்து, கோடைக் கால காய்ச்சல். இதை உருவாக்கும் வைரஸ்கள், கோடையில் அதிக ஆக்டிவ்வாக இருக்கும். சளி, இருமல், காய்ச்சல் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். அடுத்து வியர்க்குரு, வேனல் கட்டிகள். உடலின் வெப்பநிலை அதிகரிப்பதால், உடலில் உள்ள நீர்ச்சத்து, விரைவாக வற்றிவிடும். இதனால் உடலின் வெப்பநிலை அதிகரித்து, அவை உடம்பில் வேனல் கட்டிகளையும் முகத்தில் பருக்களையும் ஏற்படுத்தும்.
வியர்வை உடம்பில் தங்குவதால் வியர்க்குரு ஏற்படுகிறது. ஆகையால், வியர்வையை உடம்பில் தங்க விடாதபடி முகத்தை வெறும் நீரால் கழுவுவது, உடம்பை ஈரமான துணியால் துடைத்துக் கொள்வது, தினமும் இரண்டு முறை குளிப்பது, வெளியில் செல்லும்போது வியர்க்குரு பவுடர் போட்டுச் செல்வது போன்றவற்றை செய்வதன் மூலம் வியர்க்குருவிலிருந்து தப்பிக்கலாம். வியர்வை காரணமாக ஜலதோஷம் பிடிக்கும். தலைப்பகுதியில் ஏற்படும் வியர்வையின் ஈரம்தான் இதற்கு காரணம். எனவே, வியர்வையை துடைத்துக்கொண்டே இருக்க வேண்டும்.
அடுத்தாக சருமப் பிரச்சனைகள். இறுக்கமான ஆடைகள், உள்ளாடைகளால் சருமத்தில் வியர்வை தேங்கி, படர்தாமரை, அரிப்பு, தோல் வீங்குதல் (படர்தாமரை பரவும் இடங்களில் தோல் வீங்கி சிவப்பது) போன்ற பாதிப்புகள் உண்டாகும். உடலை மறைக்கும் பருத்தி ஆடைகளை அணிவது, தோல் வீங்கிய பகுதிகளை கையால் தொந்தரவு செய்யாமல் இருப்பது, முடிந்தவரை உடலைத் தூய்மையாக வைத்திருப்பது, படர்தாமரைக்கான க்ரீம்களை மருத்துவர் ஆலோசனையோடு தடவுவது ஆகியவற்றை மேற்கொண்டாலே இதிலிருந்து தப்பிவிடலாம்.
வெயில் காலத்தில் படுத்தி எடுக்கும் அடுத்த பிரச்னை சூடுபிடித்தல். அடிவயிறு வலிப்பதுதான் சூடுபிடித்தலின் அறிகுறி. அப்படி வலித்தால், அடிவயிற்றில் தொப்புளை சுற்றி நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் தடவுவது, கூடுமானவரை குளிர்ச்சியான உணவுகளை எடுத்துக்கொள்வது, தண்ணீர் அதிகம் அருந்துவது போன்றவற்றை செய்து நிவாரணம் பெறலாம். அடுத்து நீர்க்கடுப்பு. சிறுநீர் போகும் பொழுது சொல்ல முடியாத அளவிற்கு கடுப்புடன் கூடிய வலி ஏற்படும். அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும். இதற்கு வெந்தயத்தை, மோருடன் அல்லது தண்ணீரில் கலந்து சாப்பிடுவது, இளநீர் அல்லது எலுமிச்சை ஜுஸ் அருந்துவதன் மூலம் நிவாரணம் பெறலாம்.
மருத்துவர்கள் அட்வைஸ்!
கோடையில் உடம்புக்குத் தேவையான முக்கிய உணவும் மருந்தும் தண்ணீர்தான். சாதாரண நாட்களில் ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீர் பருக வேண்டும் என்றால், கோடையில் 5 – 6 லிட்டர் தண்ணீர் உடம்புக்குத் தேவைப்படும். இதை பின்பற்றினாலே, கோடைகால நோய்களில் இருந்து தப்பிக்கலாம். அதேபோல், எண்ணெய் சேர்த்த உணவுகள், அசைவ உணவுகளுக்கு முற்றிலும் தடை போடுங்கள்.
அதிக காரம் இல்லாத உணவுகளை சாப்பிடுவதுடன், தர்பூசணி போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்களை உண்ணவேண்டும். நுங்கு, இளநீர் , வெள்ளரிக்காய், மோர் போன்ற குளிர்ச்சியான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். ஆவியில் வேகவைத்த காய்கறிகள், இயற்கையிலேயே குளிர்ச்சியான உணவுகள், பழங்கள், இளநீர், தண்ணீர் போன்றவற்றை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும். குழந்தைகள் வெளியில் சுற்றுவதை தவிர்க்க வேண்டும். பெரியவர்களும் அநாவசியமாக வெளியே செல்வதைத் தவிர்த்து முடிந்தவரை வீட்டிலேயே இருப்பது நல்லது. சன் ஸ்டிரோக் போன்ற கோடை கால நோய்கள் தொடர்பான அவரச உதவிக்கு 104 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தமிழக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜோதிடம் என்ன சொல்கிறது?
இந்த நாள்களில் வழக்கத்தைவிட வெப்பம் அதிகமாக இருக்கும். வெப்பம் அதிகரிக்கும்போது இயல்பாகவே மனித சக்தி அதிகமாகச் செலவாகும். எனவே, உடல் உழைப்பை அதிகம் கோரும் சில செயல்களை இந்த நாள்களில் செய்வதை நம் முன்னோர்கள் தடை செய்தனர்.
அக்னி நட்சத்திரத்தில் செய்யக் கூடாதவை
* செடிகள், மரங்கள் வெட்டுவது அக்னி நட்சத்திரத்தில் செய்யக்கூடாது.
* நிலம், வீடு வகைகள் ஆரம்பிக்க கூடாது(வீடு கட்டுவது).
* விதை விதைத்தல் செய்யக்கூடாது.
* கிணறு வெட்டக்கூடாது.
* புதுமனை புகுதல் கூடாது.
* தீட்சை எடுத்தல் செய்யக்கூடாது.
* மொட்டை அடித்தல், காது குத்துதல் செய்யக்கூடாது.
* வாகனம் ஏறுதல் அதாவது வாகனம் வாங்குவது போன்றன செய்யக்கூடாது.
* கோவில் கும்பாவிஷேகம் செய்வது சிறப்பானது அல்ல.
* கூரை வேயக்கூடாது.
அக்னி நட்சத்திரத்தில் செய்யக் கூடியவை
* பூணுல் போடுவது செய்யலாம்.
* திருமண பொருத்தம் பார்க்கலாம்.
* மாப்பிளை பெண் வீட்டுக்கு செல்லலாம்.
* திருமண நிச்சயம் செய்யலாம்.
* ஒப்புதல் தாம்பூலம் செய்யலாம்.
* திருமணம் செய்யலாம்.
* மஞ்சள் நீராட்டு விழா செய்யலாம்.
* யாகங்கள் செய்யலாம்.
* சத்திரங்கள் கட்டலாம்.
* வாடகை வீடு குடி போகலாம்.
அக்னி நட்சத்திர காலகட்டத்தில் அறுவடை செய்யப் பட்ட வயல்வெளிகளில் வெப்பத்தின் காரணமாக வெடிப்புகள் ஏற்படும். அதன்வழியாக பூமியின் வெப்பம் வெளியேறும். அந்தப் பிளவுகளில், காய்ந்த இலைகளும் சருகுகளும் நுழைந்துவிடும். அக்னி நட்சத்திரம் முடிந்து, வைகாசி பிற்பகுதியில் வீசும் காற்றால் பூமி குளிரும்.
அதனையொட்டி மழை பெய்தால், நிலத்தின் வெடிப்புகள் மூடப்பட்டுவிடும். இதனை ” *கர்ப்ப ஓட்டம்*’ என்பார்கள். இந்த முறையில் இயற்கையாகவே வயலுக்கு நல்ல உரம் கிடைக்கிறது. அடுத்த வேளாண்மைக்கு வயல் வளம் பெற்று விடுகிறது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry