தென் மண்டல அமைப்பாளராகிறார் மு.க. அழகிரி மகன்! துரைமுருகன், கனிமொழி பரிந்துரை! 

0
161

மு.. அழகிரி, தனிக் கட்சி தொடங்க உள்ளதாக பலவிதமான ஹேஷ்யங்கள் உலா வந்தாலும், அதற்கு சாத்தியமே இல்லை என்றே உறுதியாக நம்பப்படுகிறது. அதேநேரம், அவரது மகன் துரை தயாநிதிக்கு திமுகவில் உயர் பதவி வழங்குவதற்கான பேச்சுவார்த்தைகள் இறுதிகட்டத்தில் உள்ளன.

முன்னாள் மத்திய அமைச்சரும், கலைஞரின் மூத்த மகனுமான மு..அழகிரியை புதிய அரசியல் கட்சி துவங்குமாறு பாஜக வலியுறுத்துவதாக ஒருபுறம் கூறப்படுகிறது. மறுபுறம், கலைஞர் திமுக என்ற கட்சியை ஆரம்பித்து, அவர் ரஜினியுடனோ, பா...வுடனோ கூட்டணி அமைப்பார் என்றும் தகவல்கள் வெளியாகின. ஆனால், இதில் எதுவுமே உண்மையில்லை என்றே தெரிகிறது.

கட்சி ஆரம்பித்து, அதை வழிநடத்தும் அளவுக்கு அவரது ஆரோக்கியம் பலமாக இல்லை என்றே கூறப்படுகிறது. வீட்டில் ஓய்வில் இருக்கும் அவர், பழைய பாடல்களை கேட்டபடியும், கிரிக்கெட் பார்த்தபாடியும் குடும்பத்துடன் நேரத்தை செலவழித்து வருகிறார். நெருங்கிய ஆதரவாளர்களைக் கூட அதிகம் சந்திப்பதில்லை என்று தெரிகிறது. அழகிரியின் ஆதரவாளர்களை, அவரது மகன் துரை தயாநிதிதான்  அரவணைத்துச் செல்கிறார்.

அண்மையில், மு.. அழகிரியிடம், துரைமுருகன் தொலைபேசியில் பேசியதாகவும், உடல்நலம் குறித்து விசாரித்த அதேவேளையில், சமாதானப்படுத்தும் விதமாக, கட்சி பற்றியும் விவாதித்ததாக தகவல்கள் வெளியாகின. ஆனால், அந்த உரையாடல், துரை தயாநிதியை மையப்படுத்தியே இருந்ததே கூறப்படுகிறது. முரசொலி அறக்கட்டளையில் அழகிரி மகன் துரை தயாநிதியை சேர்க்க ஸ்டாலின் குடும்பத்தினர் திட்டவட்டமாக மறுத்துவிட்ட நிலையில், இந்தப் பேச்சுவார்த்தை முக்கியத்துவம் பெறுவதாக திமுகவினர் கூறுகின்றனர்.

அதாவது, உதயநிதிக்கு கட்சியில் இளைஞரணி செயலாளர் பொறுப்பு கொடுக்கப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ள அழகிரி, தனது மகனுக்கு, தான் வகித்த, தென் மண்டல அமைப்பாளர் பதவியை வழங்குமாறு துரைமுருகனிடம் வலியுறுத்தியதாக தெரிகிறது. தான் மீண்டும் முழுவீச்சில் செயல்பட உடல்நிலை அனுமதிக்காது என்பதால், மகனுக்கு பதவி கொடுத்தே ஆக வேண்டும் என்றும் அழகிரி கூறியுள்ளார்

இதுகுறித்து ஸ்டாலின், கனிமொழி, செல்வி செல்வம்  ஆகியோரிடம் துரைமுருகன் விவாதித்துள்ளார். இதற்கு, ஸ்டாலின் தவிர்த்து மற்ற இருவரும் அப்போதே சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஸ்டாலின் தனது குடும்பத்திடம் விவாதித்ததாகவும், அவர்கள் திட்டவட்டமாக மறுத்ததாகவும் தெரிகிறது. அதாவது, உதயநிதிக்கு போட்டியாக துரை தயாநிதி வர நாமே வழி ஏற்படுத்தக்கூடாது என்பதே அவர்களது வலியுறுத்தலாக இருந்துள்ளது.

எனவே, இந்த விவகாரத்தில் இதுவரை எந்தவொரு இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை. ஆனால், கடந்த மாதம் பிறந்தநாள் கொண்டாடிய துரை தயாநிதியை வாழ்த்தி, மதுரையில் அதிக அளவில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அதில் தென் மண்டல இளவரசனே என்ற வாசகமும் இடம்பெற்றிருந்தது. இதன் மூலம் திமுக தலைமைக்கு தனது பலத்தை அவர் உணர்த்தியதாக, அழகிரி ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.

உடல்நிலை காரணமாக, தனது தந்தை மு..அழகிரியால், அரசியல் ரீதியாக பெரிய அளவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாத நிலையில், தான் இறங்கி அடிக்க வேண்டும் என்ற முடிவில் துரை தயாநிதி உறுதியாக இருக்கிறார். தனக்கு பதவி கொடுக்க திமுக தலைமை மறுத்தால், தேர்தல் நேரத்தில் கடுமையான குடைச்சல் கொடுக்கவும் அவர் தயாராகி வருவதாகவே கூறப்படுகிறது. துரை தயாநிதி எப்போதாவது போடும் அரசியல் ட்வீட்டுகள் பெரும் களேபரத்தை உண்டாக்கிவிட்டுத்தான் ஓயும். எனவே அவர் அரசியலில் பெரிய ரவுண்ட் வருவது உறுதி என்ற நம்பிக்கையுடன் ஆதரவாளர்கள் காத்திருக்கின்றனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry