காமராஜ் வீடு உள்பட 49 இடங்களில் ரெய்டு! அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என எடப்பாடி கண்டனம்!

0
196

முன்னாள் அமைச்சர் வேலுமணி, மற்றும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோருக்கு நெருக்கமானவர்களாக கருதப்படும் வடவள்ளி சந்திரசேகர், அருப்புக்கோட்டை செய்யாதுரை, மணல் ஒப்பந்ததாரர் ஆறுமுகசாமி மகன் செந்தில்குமார் ஆகியோரின் இல்லம், அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த இரண்டு தினங்களாக சோதனைகள் நடைபெற்று வந்த நிலையில், தற்போது டெல்டா மாவட்டத்தில் முக்கிய பிரமுகரான முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜை லஞ்ச ஒழிப்புத்துறை குறி வைத்திருக்கிறது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள காமராஜ் வீடு, மன்னார்குடி நகர அதிமுக செயலாளர் உள்ளிட்ட மேலும் ஐந்து பேரின் வீடுகளில் தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை செய்து வருகின்றனர். காவல் துணைக் கண்காணிப்பாளர் சத்தியசீலன் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் காலை 5 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

மன்னார்குடி முதல் தெருவில் உள்ள அதிமுக நகரச் செயலாளரும், ஆர்.காமராஜின் உறவினரான ஆர்.ஜி. குமார், வேட்டை திடலில் உள்ள காமராஜின் நண்பர் சத்தியமூர்த்தி தஞ்சாவூரில் உள்ள ஆர் காமராஜ் சம்மந்தியின் வீடு, நன்னிலத்தில் உள்ள காமராஜ் வீடு, தஞ்சையில் காமராஜ் புதிதாக கட்டி வரும் மருத்துவமனை, சென்னையில் உள்ள அவரது வீடு, மதுரை, கோவை உட்பட காமராஜ் தொடர்புடைய மொத்தம் 49 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைகள் நடைபெற்று வருகின்றன.

வருமானத்திற்கு அதிகமாக 58.44 கோடி ரூபாய் சொத்து சேர்த்துள்ளதாக ஆர். காமராஜ் மீது வழக்குப் பதிவு செய்துள்ள லஞ்ச ஒழிப்புத்துறையினர், இது தொடர்பாக ஆர்.காமராஜ், அவரது மகன்கள் இனியன், இன்பன் உள்ளிட்ட ஆறு பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மன்னார்குடியில் வடக்கு வீதியில் உள்ள காமராஜின் இல்லத்திற்கு முன்பாக திரண்டுள்ள அதிமுக தொண்டர்கள் இந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், திமுக அரசை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதுபோன்ற அரசியல் பழிவாங்கும் செயல்களில் ஈடுபடுவதை நிறுத்திவிட்டு மக்கள் பணிகளில் கவனம் செலுத்த வேண்டுமென இந்த விடியா அரசை வலியுறுத்துகிறேன் என்று எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry