மத்திய அரசிடம் மு.க. ஸ்டாலின் சரணாகதி! தகுதி இல்லாதவருக்கு வாக்களித்துவிட்டு மக்கள் அனுபவிப்பதாக ஈபிஎஎஸ் கடும் சாடல்!

0
29
AIADMK general secretary Edappadi K. Palaniswami | Chief Minister M.K. Stalin

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “எந்தவிதத் தகுதியும் இல்லாமல், வாரிசு அரசியலில் தலையெடுத்த ஒருவரிடம், ஆட்சியை ஒப்படைத்ததன் பலனை தமிழக மக்கள் தற்போது அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

பதவிக்கு பெருமை சேர்த்த தலைவர்கள் சிலர்: பேரறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, பதவியால் பெருமை பெற்றவர்கள் சிலர்: அதில் தலையாய நபராக, தற்போதைய திமுக அரசின் பொம்மை முதல்வர் மு.க. ஸ்டாலின் திகழ்கிறார்.

காய்ந்த மாடு கம்பங்கொல்லையில் பாய்வதுபோல், 10 ஆண்டுகால அகோர பசியைத் தீர்க்க, நாலா திசைகளிலும் பாய்ந்து, பல்லாயிரம் கோடிகளை கபளீகரம் செய்துள்ளதாக சமூக ஊடகங்களும், செய்தி ஊடகங்களும் இந்த திமுக அரசை தினந்தோறும் குற்றம் சுமத்தி வருகிறது. ஊழல் சேற்றில் புரளுவதையே தொழிலாகக் கொண்ட, ஊழலின் ஊற்றுக் கண்ணான திமுக, அதன் தலைவர் ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர், மற்றவர்களைப் பார்த்து ஊழல்வாதிகள் என்றும், குற்றவாளிகள் என்றும் புலம்பித் திரிகின்றனர்.

Also Read : பொது சிவில் சட்டத்தால் எந்த விதமான தாக்கத்தை ஏற்படுத்த முடியும்? மத்திய அரசின் முயற்சி பற்றிய விரிவான பார்வை! #UniformCivilCode

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகில் வாழும் இந்த ஆட்சியாளர்கள், தங்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்களில் இருந்து மீள, மத்திய அரசிடம் சரணாகதி படலத்தை தொடங்கி உள்ளார்கள். அதன் முதல்படியாக ஸ்டாலின், தன் கட்சியினர் வாக்களிக்காமல் தேர்வான குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் யார் காலில் விழுந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. ஆனால், அந்தக் கடிதத்தில் எங்கள் மீது விழுந்து பிராண்டுவதை அனுமதிக்க முடியாது. குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய ரகசிய(?) கடிதத்தில், “குற்றவாளிகள் மீது வழக்கு தொடர அனுமதி வழங்குவதில் தேவையற்ற தாமதம்” என்ற தலைப்பில் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக நஞ்சைக் கக்கி இருக்கிறார்.

எம்.ஆர். விஜயபாஸ்கர், கே.சி. வீரமணி ஆகியோர் மீது, தனது ஏவல் துறையைவிட்டு பொய் வழக்கு போட்டுவிட்டு, இவரே நீதிபதியாக மாறி, குற்றம் சுமத்தியவர்களை `குற்றவாளிகள்’ என்று குறிப்பிட்டு ஒரு மோசடி அரசியலை செய்யும் திமுக அரசின் முதல்வர் ஸ்டாலினை கடுமையாகக் கண்டிக்கிறேன்.

லஞ்ச ஒழிப்புத் துறையால் வழக்கு பதிவு செய்யப்பட்டு, 10 ஆண்டுகளாக குற்றவாளி என்று நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையால் வாதாடி வந்த நிலையில், திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, அதே லஞ்ச ஒழிப்புத் துறை, ஆளும் திமுக-வின் அங்கமாகவே மாறி, திமுக அமைச்சர்களை குற்றமற்றவர்கள் என்று விடுதலை வாங்கித் தரும் அவல நிலையை தமிழக மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இதற்குண்டான பதிலை தமிழக மக்கள் அளிப்பார்கள் என்பதை இந்த நிர்வாகத் திறனற்ற திமுக அரசின் பொம்மை முதல்வருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

திமுக ஆட்சியில், தமிழகம் முழுவதும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, வழிப்பறி போன்ற குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக இன்று, தமிழக இளைஞர்கள் போதைப் பொருட்களின் மயக்கத்தில் குற்றச் செயல்களில் ஈடுபடுவது சர்வ சாதாரணமாகி உள்ளது. இதை நான் சொல்லவில்லை. பட்ஜெட் கூட்டத் தொடரில் உள்துறை மானிய கொள்கை விளக்கக் குறிப்பில் இந்த அரசே கூறியுள்ளது.

Also Read : சமூக நீதி பற்றி பேச திமுகவுக்கு என்ன தகுதி இருக்கிறது? மருத்துவத்துறை சீரழிந்து விட்டதாகவும் ஈபிஎஸ் விமர்சனம்!

தடை செய்யப்பட்ட குட்காவை மாலையாக கழுத்தில் தொங்கவிட்டு சட்டசபைக்குள் வந்த அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர், இன்று போதைப் பொருட்களை தடுக்க இயலாத நிலையில், தமிழகம் இன்று போதைப் பொருட்களின் புகலிடமாக மாறியுள்ளது. தன்மீதுள்ள இதுபோன்ற குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பிக்க குடியரசுத் தலைவருக்கு கடிதம் என்ற பெயரில் மனம்போன போக்கில் பிதற்றியுள்ளார்.

ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சட்டத் துறை அமைச்சரே, லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறைக்கு அமைச்சர். அவர், தன் மீதான வழக்குகளை அரசியல் கட்சி சார்பற்ற நேர்மையான வழக்கறிஞர்களை வைத்து விசாரணையை விரைவுபடுத்துவாரா?

எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது, ஸ்டாலினால் குற்றம் சுமத்தப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத் துறை, விசாரணைக்குப் பின் கைது செய்துள்ளது. கைதி எண் பெற்று சிறைத் துறை காவலில் உள்ள ஒருவரை துறையில்லா அமைச்சர் என்று பொம்மை முதல்வர் அறிவித்தது ஏன்?

முதல்வருடைய மகனும், மருமகனும் 30 ஆயிரம் கோடி பணத்தை வைத்துக்கொண்டு செய்வதறியாமல் தவிப்பதாக தற்போதைய அமைச்சர் ஒருவர் பேசிய ஒலி நாடா சமூக ஊடகங்களிலும், காட்சி ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் வெளிவந்த நிலையில், அதைப் பற்றி இதுவரை பொம்மை முதல்வர் எந்த ஒரு நடுநிலை விசாரணைக்கும் உத்தரவிடாமல் இருப்பது ஏன்?

எதிர் வரப்போகும் வழக்குகளில் இருந்து தப்பிக்க அங்கும் இங்குமாக அலைமோதும் ஒருவர், தனது குடும்பம் மற்றும் செந்தில்பாலாஜி மீதுள்ள குற்றங்களை மறைக்க, மாநில சுயாட்சி, திராவிட மாடல் மற்றும் ஆளுநருடன் மோதல் போன்ற உருட்டுகளை நடத்துவது, தன்னை உத்தமர் போல் காட்டிக்கொள்ள வேண்டும் என்பதற்காகவா?

Also Read : தந்தையின் இறப்பும், ஆற்று மணல் கொள்ளையும்! வெளிநாடு வாழ் இந்தியரின் வேதனைக் குரல்!

ஆளுநருக்கு எதிராக குடியரசுத் தலைவருக்கு மண்டியிட்டு மடல் எழுதுவது பற்றி எங்களுக்கு அக்கறையில்லை. இவருடைய சட்டத் துறை மந்திரி ரகுபதி ஆளுநருக்கு எழுதிய கடிதத்தில், எங்கள் முன்னாள் அமைச்சர்கள் பற்றி குறிப்பிட்டதையே மீண்டும் தன் கடிதத்தில் ஸ்டாலின் வாந்தி எடுத்தது ஏன்? மெகா ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து தனது குடும்பத்தையும், அரசையும் காப்பாற்றிக்கொள்ள, விதிவசத்தால் முதல்வரான ஸ்டாலின், கடப்பாரையை விழுங்கி, சுக்கு கஷாயம் குடித்து ஏப்பம் விட்டுவிடலாம் என்று நினைக்கிறார்.

எங்களுக்கு நீதியின்பால் நம்பிக்கை உள்ளது. எங்கள் முன்னாள் அமைச்சர்கள் மீது, திமுக அரசின் ஏவல் துறை மூலம் புனையப்பட்ட வழக்குகள் இன்னும் விசாரிக்கப்படவே இல்லை. அதற்குள் குற்றவாளி என்று குறிப்பிட்டுள்ள திமுக அரசின் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

முதலில், திமுக ஆட்சியின் தற்போதைய அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் என பலர் மீது நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளை அரசியல் கட்சி சார்பற்ற நேர்மையான வழக்கறிஞர்களை அரசு வழக்கறிஞர்களாக நியமித்து, நேர்மையாக நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்ளுங்கள். மற்றவர்கள் மீது குற்றம் சுமத்தும் முன் நீங்களும், உங்கள் சகாக்களும் உத்தமர்களா? என்று சிந்திக்கவும்.

“உப்பை தின்றவன் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும்” என்பது போல், ஜெயலலிதாவின் ஆட்சி மீண்டும் அமையும்போது, உங்கள் அனைவருடைய வழக்குகளும் மீண்டும் திறக்கப்பட்டு, மேல்விசாரணை நடத்தப்பட்டு, சட்டத்தின் முன் நிற்கும் காலம் விரைவில் வரும் என்று திமுக அரசை எச்சரிக்கிறேன்” இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry