உடனடியாக அனைத்து கட்சிக் கூட்டத்தைக் கூட்டுங்கள்! காவிரி விவகாரத்தில் விவசாயிகளை வஞ்சிப்பதா? என தமிழக அரசுக்கு ஈபிஎஸ் கேள்வி!

0
28
எடப்பாடி பழனிசாமி | கோப்புப் படம்

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், “திமுக அரசு கும்பகர்ணன் போல் தூங்கிவிட்டு, மேட்டூர் அணையில் இருந்த நீரையெல்லாம் காலி செய்தபின், பெயருக்கு மத்திய அரசை காரணம் காட்டி காலதாமதம் செய்ததைத் தவிர, காவிரி நீர்ப் பிரச்னைக்கு எந்தஒரு துரும்பையும் கிள்ளிப்போடவில்லை.

டெல்டா விவசாயிகள் உள்ளிட்ட தமிழக மக்கள் மீது அரசின் முதல்வர் ஸ்டாலினுக்கு அக்கறை இருந்திருந்தால், கடந்த ஜூன் மாதத்தில், கர்நாடகத்தில் தனது கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டபோது, அணைகளில் தண்ணீர் அதிகமாக இருந்த சமயத்தில், அவர்களுடன் நட்பாகப் பேசி காவிரியில் தண்ணீரை திறந்தவிடச் செய்திருக்கலாம்.

I.N.D.I.கூட்டணிக் கூட்டம் பாட்னாவில் கூடியபோது, தில்லியில் ஆம் ஆத்மி கட்சி, தன் மாநில மக்கள் நலனில் அக்கறைகொண்டு, எவ்வாறு நிபந்தனை அடிப்படையில் கூட்டணியில் அங்கம் வகிக்க சம்மதித்ததோ, அதேபோன்று, காவிரியில் காங்கிரஸ் அரசு தண்ணீரைத் திறந்து விட்டால்தான் கூட்டணியில் அங்கம் வகிப்போம் என்ற நிபந்தனையை விதித்திருக்கலாம்.

இதையும் படிக்க : ஆசிரியர் சங்கங்களின் போராட்டக் களமாக மாறிவிட்ட டிபிஐ வளாகம்! கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற அரசு தவறலாமா என ஐபெட்டோ கேள்வி?

காவிரி டெல்டா பகுதி நெற்பயிர்கள் தண்ணீரின்றி கருகி, நிலங்கள் பாலைவனமான நிலையில், I.N.D.I. கூட்டணியின் சார்பில் பெங்களூருவில் கூட்டிய கூட்டத்திற்கு வரமாட்டேன்! எனவும், என் மாநில மக்கள் நலனே முக்கியம் எனவும், “நானும் ஒரு டெல்டாகாரன்தான்” எனவும் தெரிவித்து, ஸ்டாலின் பெங்களூரு கூட்டத்தில் கலந்துகொண்டதைத் தவிர்த்திருக்கலாம்.

அதை விட்டுவிட்டு, தும்பைவிட்டு வாலை பிடிப்பதுபோல், இது எதையும் செய்யாமல் ஒன்றிய அரசு என வாய் வீரம் காட்டிவிட்டு, மத்திய அரசின் பின்னால் ஒடி ஒளிந்துகொண்டு, தமிழக மக்களை வஞ்சிப்பது ஏற்கத்தக்கதல்ல. காவிரி பிரச்னையில் கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு வக்காலத்து வாங்குவதைத் தவிர்த்து, திமுக அரசு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும்.

விவசாயிகள் மீது இனிமேலாவது அக்கறை கொண்டு, காவிரி நீர்ப் பிரச்னையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் கூட்டத்தை உடனடியாகக் கூட்டி, தமிழக மக்களின் உரிமையைக் காத்திட, காவிரி நீரை விரைந்து பெற்றிட, ஒரு உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று இந்த திமுக அரசை வலியுறுத்துகிறேன்.” இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry