வார ராசிபலன்! கண்ணுக்கெட்டிய வரை பிரச்னையாவே இருந்தா..! எதார்த்தாம பேசினாக்கூட அது பதார்த்தமா முடியுமாம்…!

0
108
Weekly Horoscope: Check Astrological prediction from October 2nd to 8th October 2023

இந்த வார ராசிபலன் – அக்டோபர் 2ல் இருந்து அக்டோபர் 8வரை – மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்களை துல்லியமாகக் கணித்துத் தந்திருக்கிறார் ‘ஜோதிட சிரோன்மணி’ பிரசன்ன ஜோதிடர் ஆர்.கே.வெங்கடேஸ்வரர்.

மேஷம் : எந்தக் காரியத்தையும் தைரியத்துடன் செய்து முடிக்கும் மேஷ ராசிக்காரர்களே, இதுவரை ராசிக்கு 6ல் இருந்த ராசிநாதன் செவ்வாய், 6ம் தேதிக்கு பிறகு 7ம் வீடான சுக்கிரனின் துலாம் வீட்டிற்கு பெயர்ச்சியாகிறார். கடந்த ஒன்றரை மாதமாக கடன் தொல்லை, புதிய நபர்களால் பிரச்னைகள், உடல் உபாதைகள், சகோதரர்களால் வருத்தம் என அனைத்து வழிகளிலும்  மன உளைச்சலில் இருந்த உங்களுக்கு தற்போது விடிவு காலம் பிறக்கும். கடன்கள் கட்டுக்குள் வரும். எதிர்ப்பு காட்டியவர்கள் விலகி செல்வார்கள். தாயார் மீது பாசம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக வாங்க வேண்டும் என்று ஆசைப்பட்டதை தாயார் வாங்கி கொடுத்து மகிழ்ச்சி அடைவார். இளைஞர்களுக்கு காதல் எண்ணம் மேலோங்கும். சிலருக்கு காதல் கைக் கூடும். திருமணத்திற்கு நீண்ட நாட்களாக முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வரன் அமைந்து திருமண தேதி முடிவாகும். சந்திராஷ்டமம் இந்த வாரம் இல்லை.

ரிஷபம் : அழகும், புத்திசாலித்தனமும் கொண்ட ரிஷப ராசிக்காரர்களே, தண்ணீர் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு அனுகூலமான வாரம். விவசாயிகளுக்கு லாபம் அதிகரிக்கும். எள், உளுந்து பயிரிட்டவர்களுக்கு எதிர்பார்த்ததைவிட நல்ல வருவாய் கிடைக்கும். செக்கு எண்ணெய், ஆயில் மில் உரிமையாளர்களுக்கு புதிய ஆடர்கள் வந்து சேரும். தாய், மனைவி வழியில் அசையும், அசையா சொத்துக்கள் சேர்க்கை உண்டு. வாடகை கார் ஓட்டுநர்கள், வாகனங்களை வாங்கி விற்கும் தொழில் செய்பவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். வாழ்க்கை துணைக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்படும் என்பதால், சிறிய பிரச்னையாக இருந்தாலும் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. இந்த வாரம் சந்திராஷ்டமம் இல்லை என்றாலும், 8ம் தேதி நீண்ட தூர பயணங்களால் அலைச்சல் ஏற்படும். புதிதாக அறிமுகமாகும் நபர்களிடம் சற்று கவனமாக இருங்கள்.

Also Read : பஞ்சாங்கம் என்றால் என்ன? எது சரியானது… திருக்கணிதப் பஞ்சாங்கமா, வாக்கியப் பஞ்சாங்கமா?

மிதுனம் : பேச்சில் கெட்டிக்காரரான மிதுன ராசிக்காரர்களே, ராசிநாதன் புதன் ராசிக்கு 4ல் வலுப்பெறுவதால் மிதுன ராசி மாணவ, மாணவிகளுக்கு அனுகூலமான வாரம். கணக்கு, அக்கவுண்ட்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவுகளில் ஆர்வம் அதிகரிக்கும். தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறுவீர்கள். உயர்கல்வியில் விரும்பிய பாடப்பிரிவுகள் எதிர்பார்த்த கல்லூரியில் கிடைக்கும். ஜெராக்ஸ், புத்தகம், பேனா விற்பனை கடை வைத்திருப்பவர்கள், இ-சேவை மையம், கம்ப்யூட்டர் சென்டர் உரிமையாளர்களுக்கு லாபகரமான வாரம். பங்குச்சந்தை ஆலோசகர், முதலீட்டாளர்களுக்கு எதிர்பார்த்த அளவுக்கு லாபம் கிடைக்கும். அரசு ஒப்பந்தங்களுக்கு முயற்சி செய்தவர்களுக்கு சாதகமான பதில் வந்து சேரும். சொந்த தொழில், வியாபாரம் செய்ய அரசு வங்கியில் குறைந்த வட்டியில் கடன் கிடைக்கும். சந்திராஷ்டமம் இந்த வாரம் இல்லை என்றாலும், 3, 4, 5 ஆகிய தேதிகளில் செலவுகள் அதிகரிக்கும்.

கடகம் : கற்பனை சிந்தனைகளில் மூழ்கி கிடக்கும் கடக ராசிக்காரர்களே, தன ஸ்தானத்தில் சுக்கிரன் இருப்பதாலும் ராசிநாதன் சந்திரன் லாப ஸ்தானத்தில் இருப்பதாலும் வருமானம் அதிகரிக்கும். தாயார், சகோதரி, மனைவி என்று குடும்பத்தில் உள்ள பெண்கள் வழியில் ஆதாயம் உண்டு. உணவு பொருட்கள் தயாரிப்பு, விற்பனையில் உள்ளவர்களுக்கு லாபம் எதிர்பார்த்ததைவிட கூடுதலாக கிடைக்கும். இளைஞர்களுக்கு முக வசீகரம் ஏற்படும். ஃபேஷன் டிசைனிங் துறையில் உள்ளவர்களின் திறமை வெளிப்படும். உயர்கல்வியில் ஃபேஷன் டிசைனிங், ஓவியம், அழகு கலை தொடர்பான படிப்புகளில் படிக்கும் வாய்ப்பு அமையும். அனைத்தும் சாதகமாக இருந்தாலும் அஷ்டம சனியின் பாதிப்புகளால் சில பிரச்னைகளை சந்திக்க நேரிடும். பிறப்பு ஜாதகத்தில் யோகமான தசா, புத்தி நடப்பில் இருப்பவர்கள் தடைகளை தாண்டி வருவார்கள். மோசமான தசா, புத்தி நடப்பில் இருப்பவர்களுக்கு சற்று கடினமான காலக்கட்டம் இது. சந்திராஷ்டமம் இந்த வாரம் இல்லை.

Also Read : பத்துப் பொருத்தம் பார்த்தும் விவாரத்து ஆவது ஏன்? ஜோதிடம் பொய்யா?, ஜோதிடர்களுக்கு கணிக்கத் தெரியவில்லையா? Part – 1

சிம்மம் : அன்பு, மரியாதை, தெய்வ பக்தி என அனைத்தும் நிறைந்த சிம்ம ராசிக்காரர்களே, ராசிநாதன் சூரியன்,  பாக்கியாதிபதி செவ்வாய் ஆகியோர் தன ஸ்தானத்தில் இருப்பதால் சுய முயற்சியால் குடும்ப தேவைகளை திட்டமிட்டு பூர்த்தி செய்வீர்கள். ஆடம்பரமா? அத்தியாவசியமா? என்று யோசித்து செயல்படுவீர்கள். சிலருக்கு நீண்ட தூர பயணங்களால் அலைச்சல் உண்டாகும். நிர்வாகம் சார்ந்த படிப்புகளில் ஆர்வம் அதிகரிக்கும். கோபத்தை குறைத்து கொள்ளுங்கள். பேச்சில் நிதானத்தைக் கடைபிடித்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.   நீண்ட நாட்களாக பயன்படாமல் இருந்த நிலங்கள் மூலம் வருமானம் கிடைக்கும். பேச்சாளர்கள், மேடை நாடக கலைஞர்கள், பல குரல்களில் பேசுபவர்களின் திறமைகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும். உறவினர்கள், நண்பர்களுடன் இணைந்து கூட்டு தொழில் செய்யும் எண்ணத்தை தள்ளிப் போடுவது நல்லது. கூட்டு தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் கவனமாக இருங்கள். சந்திராஷ்டமம் இந்த வாரம் இல்லை.

கன்னி : சிறந்த நிர்வாகத் திறன் கொண்ட கன்னி ராசிக்காரர்களே, ராசிநாதன் புதன் ராசியில் பலம் பெற்று உடன் சூரியன் இருப்பதால் நிர்வாக திறமை மேலோங்கும். பேச்சில் கெட்டிக்காரத்தனம் வெளிப்படும் என்றாலும் 3, 8க்கு உடைய செவ்வாய் இணைந்து உள்ளதால் நண்பர்கள், உறவினர்கள் விஷயங்களில் சற்று கவனமாக இருங்கள். தாயார் வழியில் பிரச்னைகள் ஏற்படும் என்பதால் அனுசரித்து செல்லுங்கள். வேகமாக எந்தவொரு செயலையும், முடிவையும் மேற்கொள்ள வேண்டாம். ஒவ்வொரு செயலையும் நிதானமாக பலமுறை சிந்தித்து செய்யுங்கள். குறிப்பாக 2ம் தேதி வரை சந்திராஷ்டமம் என்பதால் அன்றாட செயல்களை தவிர்த்து புதிய முயற்சிகளை செய்ய வேண்டாம். கடன் வாங்கி ஆடம்பர செலவுகளை செய்ய நேரிடும் என்பதால் முடிந்தவரை கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. 6, 7 ஆகிய தேதிகளில் நீர் தொடர்பான தொழில், உணவு பொருட்கள் சார்ந்த தொழிலில் இருப்பவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும்.

Also Read : ஜோதிடப்படி யாருக்கு ஹார்ட் அட்டாக் மரணம் வரும்..? நடிகர் மாரிமுத்து மரணமும், சோஷியல் மீடியா வதந்தியும்!

துலாம் : கடுமையாக உழைக்க கூடிய துலாம் ராசிக்காரர்களே, ராசிநாதன் சுக்கிரன் லாப ஸ்தானத்தில் இருப்பதால் எதிர்பார்ப்புகள் அனைத்தும் பூர்த்தியாகும். வாழ்க்கை துணைக்கு நல்ல வேலை வேண்டும் என்ற உங்களின் நீண்ட நாள் கனவு நனவாகும். அசையும், அசையா சொத்துக்கள், வாகனங்கள், பயணங்கள் மூலம் ஆதாயம் உண்டு. வாசனை பொருட்கள் உற்பத்தி, விற்பனையில் உள்ளவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். சினிமா, மேக்கப் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு அனுகூலமான வாரம். சிலருக்கு அழகான ஆண் குழந்தை பிறக்கும். கல்லூரி, அலுவலகத்தில் உள்ள பெண் தோழிகளுடன் சண்டை, கருத்து வேறுபாடுகள் ஏற்படும் என்பதால் கவனமாக இருங்கள். 3, 4, 5 ஆகிய தேதிகளில் சந்திராஷ்டமம் என்பதால் தொழில், வியாபரத்தில் புதிய முயற்சி, கூடுதல் முதலீடுகளை தவிர்ப்பது நல்லது.

விருச்சிகம் : தைரியமும், துணிச்சலும் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களே, ராசிநாதன் செவ்வாய் லாப ஸ்தானத்தில் சூரியனும் இணைந்து புதன் வீட்டில் இருப்பதால் ஆன்லைன் தொடர்பான செயல்கள் மூலம் ஆதாயம் அடைவீர்கள். நீண்ட நாட்களாக அலைந்து திரிந்தும் கிடைக்காமல் நிலுவையில் இருந்த காப்பீட்டு தொகை, சம்பளம், தொழிலாளர் வைப்பு நிதி, கிராஜுவிட்டி போன்றவை கைக்கு கிடைக்கும். செக் மோசடி, கூட்டு தொழிலில் ஒப்பந்தங்கள் தொடர்பான வழக்கு சுமூகமாக முடிவுக்கு வரும். பங்குச்சந்தை ஆலோசகராக இருப்பவர்களுக்கு அனுகூலமான வாரம். பங்குச்சந்தையில் முதலீடு, இன்ட்ரா டே டிரேடிங் ஓரளவுக்கு கைக் கொடுக்கும். இருப்பினும் கடன் வாங்கி பங்குச்சந்தையில் முதலீடு செய்வதை தவிர்ப்பது நல்லது. 6, 7 ஆகிய தேதிகளில் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் பொருட்களால் மன உளைச்சல் ஏற்படும்.

Also Read : ரஜினிகாந்த் முதல் யோகி பாபு வரை வெற்றிபெறுவதன் ரகசியம் இதுதானா? யார் இந்த கரணநாதன்?

தனுசு : புகழப்படும் காரியங்களை செய்வதில் ஆர்வம் கொண்ட தனுசு ராசிக்காரர்களே, ராசிநாதன் குரு வக்கிரமாக இருப்பதால் உங்களுடைய எண்ணங்கள், செயல்களில் மாற்றம் தென்படும். காதல் சிந்தனைகளால் அன்றாட செயல்களில் தடுமாற்றம் இருக்கும். 3, 4, 5 ஆகிய தேதிகளில் தாயாருக்கு உடல் நலக்குறைவு ஏற்படும் என்பதால் சற்று கவனமாக இருங்கள். தாயாருடன் கருத்து வேறுபாடுகள், மனக்கசப்பு உருவாகும் என்பதால் சற்று அனுசரித்து செல்லுங்கள். முக்கியமான பொருளை மறந்துவிட்டு அவதிப்பட நேரிடும். அடுத்தவர்களிடம் கொடுத்த பணம், வாங்கி கடன் விவரங்களை டைரியில் எழுதி வைத்து கொள்வது நல்லது. உறவினர்கள், நண்பர்களுக்கு பண உதவி செய்யும் விஷயத்தில் சிந்தித்து செயல்படுங்கள். 8ம் தேதிக்கு பிறகு சந்திராஷ்டமம் என்பதால் முக்கியமான வேலைகளை முன்கூட்டியே திட்டமிட்டு செய்து முடித்து விடுங்கள்.

மகரம் : யாரையும் நம்பாத குணம் கொண்ட மகர ராசிக்காரர்களே, பேச்சில் நிதானமாக இருப்பது நல்லது. மற்றவர்களிடம் முன்னுக்கு பின் முரணாக பேசுவதை தவிர்த்து விடுங்கள். எவ்வளவு கஷ்டப்பட்டாலும் உழைப்புக்கு ஏற்ற ஊதியமும் இல்லை, அங்கீகாரமும் இல்லையே என்ற ஆதங்கம் வெளிப்படும். முயற்சிகள் அனைத்தும் வீணாகும் என்பதால் அன்றாட செயல்களை தவிர்த்து புதிய விஷயங்களில் இறங்க வேண்டாம். வாழ்க்கை துணைக்கும் உங்களுக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் ஏற்படும் என்பதால் கவனமாக இருங்கள். சிறுநீரகக் கோளாறு ஏற்படும் என்பதால் பெண்கள் உடல் நலனில் அக்கறை செலுத்துவது நல்லது. தந்தை வழியில் ஆதாயம் உண்டு. அரசியல்வாதிகளுக்கு முக்கிய பொறுப்புகள் தேடி வரும். சிலருக்கு அரசாங்கத்தில் முக்கிய துறையில் பிரதிநிதியாக செயல்பட வாய்ப்பு அமையும். சந்திராஷ்டமம் இந்த வாரம் இல்லை.

Also Read : நாய்கள் கடிப்பதற்கு முன் என்னவிதமான சிக்னல் கொடுக்கும்? நாய் கடித்துவிட்டால் உடனடியாக என்ன செய்ய வேண்டும்? Dog bite prevention!

கும்பம் : நன்கு சிந்தித்து செயல்படும் குணம் கொண்ட கும்ப ராசிக்காரர்களே, ஜென்ம சனியின் பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து உங்களின் தன்னம்பிக்கை, மன வலிமையை சீண்டி பார்க்கும். நண்பர்கள், உறவினர்களின் உண்மை முகம் தெரியவரும். துரோகம், ஏமாற்றத்தை சந்திக்க நேரிடும். எதிர்பார்த்த இடங்களில் இருந்து உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். வருமானம் தடைப்படும். பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு பணத்தின் அருமையை உணரும் நேரம் இது. சுய ஜாதகத்தில் மோசமான தசா, புத்தி நடப்பில் இருப்பவர்களுக்கு கடன் தொல்லை, வம்பு வழக்கு, எதிரிகளால் மனதில் நிம்மதி பாதிப்பு, நோய்களால் அவதிப்படும் நிலை என கண்ணுக்கெட்டிய வரை பிரச்னைகள் மட்டுமே நிறைந்து இருக்கும். யோகமான தசா, புத்தி நடப்பில் இருப்பவர்களுக்கு பிரச்னைகளின் அளவு சற்று குறைவாக இருக்கும். சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு நெய் தீபம் ஏற்றுவது, விநாயகர் மற்றும் சிவ வழிபாடு செய்வதுடன் காகத்திற்கு எள், வெல்லம் கலந்த சாதத்தை வைப்பது போன்றவற்றால் ஜென்ம சனியின் பாதிப்புகளில் இருந்து ஓரளவு தப்பித்து கொள்ளலாம்.

மீனம் : ஆடைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்ட மீன ராசிக்காரர்களே, ராசிநாதன் குரு வக்கிரமாக இருப்பதாலும், 2ல் ராகு பகவான் இருப்பதாலும் பேசும் போது ஒருமுறைக்கு பலமுறை யோசித்து பேசுவது நல்லது. நீங்கள் எதார்த்தமாக பேச அதன் மூலமாக பிரச்னைகள் ஏற்படும் என்பதால் கவனமாக இருங்கள். சனிபகவான் ஏழரை சனியில் விரைய சனியாக இருப்பதால் கைநிறைய சம்பாதித்தாலும், பணப்புழக்கம் அதிகரித்தாலும் எதிர்காலத்திற்காக ஒரு ரூபாய் கூட சேமித்து வைக்க முடியாத நிலை ஏற்படும். தேவையில்லாத விஷயங்களில் கவனம் செலுத்துவதை தவிர்ப்பது நல்லது. புதிய முயற்சிகளில் இறங்கினால் கையிருப்பு காலியாகும். புதிதாக அறிமுகமாகும் எதிர்பாலினத்தவரால் பிரச்னைகளை சந்திக்க நேரிடும் என்பதால் கவனமாக இருங்கள். சந்திராஷ்டமம் இந்த வாரம் இல்லை.

தொடர்புக்கு:- ‘ஜோதிட சிரோன்மணி’ ஆர்.கே.வெங்கடேஸ்வரர். ஸ்ரீ மாருதி ஜோதிட ஆராய்ச்சி மையம், சென்னை. astrovenkataeswar@gmail.com, அலைப்பேசி – 91590 13118.

ஜோதிடம் தொடர்பான சந்தேகங்கள், கேள்விகளை astrovenkataeswar@gmail.com என்ற மெயிலுக்கு அனுப்பினால், வரும் நாட்களில் வேல்ஸ் மீடியா இணைய இதழில் பதில்கள் வெளியாகும்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry