நாய்கள் கடிப்பதற்கு முன் என்னவிதமான சிக்னல் கொடுக்கும்? நாய் கடித்துவிட்டால் உடனடியாக என்ன செய்ய வேண்டும்? Dog bite prevention!

0
102
What are possible complications from a dog bite? | Representational Image

4.30 Minute(s) Read : ஒரு நாய் அச்சுறுத்தலுக்கு ஆளானாலோ, தன்னை பாதுகாத்துக் கொள்ள நினைத்தாலோ, கடிப்பதுதான் ஒரே வழி என முடிவெடுக்கலாம். அந்தச் சூழலை சமாளிக்க அது வெறித்தனமாக மாறும்.

மனிதர்கள் வளர்க்க ஆரம்பிக்கும் முன்பு வரை நாய்களும் காட்டு விலங்குகளாகவே இருந்துள்ளன. எனவே அந்த மிருகத்தின் மரபணு இன்றளவும் அதனுள் இருக்கும். பிற விலங்குகளைப் போலவே, காட்டில் இருந்தபோது நாய்களும் கூட்டமாக வேட்டையாடி வந்துள்ளன. பொதுவாக நாய்களின் குணங்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

முன் வரிசை நாய்கள் கூட்டத்தை வழிநடத்தும் திறன் பெற்றிருக்கும், சுதந்திரமாக செயல்படும், சவால்களைக் கண்டு பயப்படாது, துணிந்து நிற்கும். இவை எக்ஸ்ட்ரோவர்ட் நாய்கள். நடுவரிசையில் வரும் நாய்களுக்கு கூட்டத்தில் இருந்து தானும் பிரிந்து, தனக்குப் பின்னால் வருபவற்றின் வழியையும் மாற்றிவிடாதிருக்க சமநிலையான மனதுடன் சேர்ந்து செல்ல வேண்டும் என்ற பொறுப்பு இருக்கும். அவை எத்தனை அன்புத் தொல்லைகள் கொடுத்தாலும் அதை சாதாரணமாக எடுத்துக் கொண்டு விளையாடும்.

கடைசி வரிசையில் வரும் நாய்கள் தங்களுக்குப் பின்னால் வரும் நுண்ணிய சத்தங்களைக் கூட கவனித்து உடனடியாக தாக்கிவிடத் தயாராக இருக்கும். உணர்ச்சி மிக்கதாக இருக்கும். அது எப்போதும் விழிப்போடு இருக்கும் என்பதால் அது எளிதில் பிறரைத் தாக்கிவிடும். இந்த ரக நாய்கள் இன்ட்ரோவர்ட் பண்புடன் இருக்கும். என்னதான் செல்லப் பிராணியாக வளர்த்தாலும் அது ஒரு விலங்கு என்பதால் அதன் அடிப்படை குணம் அப்படியேதான் இருக்கும். அது எப்போது தூண்டப்படுகிறது என்பதைப் பொறுத்தே நமக்கான ஆபத்து வெளிப்படும்.

Also Read : தாய்ப்பாலில் மைக்ரோ பிளாஸ்டிக்! ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்! Microplastics Found in Human Breast Milk!

உயிர்வாழ உணவு தேடுவதுதான் தெருநாய்களின் முக்கியமான குறிகோள். அதற்காக அவை புத்திசாலித்தனமாகச் செயல்படும். தெரு நாய்களுக்குள் ஒரு கட்டமைப்பு இருக்கும், எல்லைகள் இருக்கும். அங்கு யாரேனும் வந்துவிட்டால், ஆபத்து நேரிடுமோ என குரைக்கும். தன் கூட்டத்தைச் சேர்ந்த சக நாய்களையும் சூழல் குறித்து எச்சரிக்கும்.

அதேநேரம் வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களுக்கு, சரியான நேரத்தில் உணவு கிடைக்கும். ஆனாலும் உளவியல் மற்றும் உணர்வு ரீதியாக அவை பிரச்னைகளை சந்திக்கலாம். எதைப் பார்த்தாலும் ஏற்படும் பய உணர்வு அவைகளை எதிர்வினையாற்றச் செய்யும். மேற்சொன்ன மூன்று வகை குணங்களில் நீங்கள் வளர்ப்பது எந்த வகை நாய் என்பதை அறிந்து அதற்கேற்ப பழக வேண்டும்.

அதாவது, வீடுகளில் வளர்க்கும் நாயை, உரிமையாளர்கள் செல்லமாகக் கொஞ்சுவார்கள். சில நேரம் கோபித்துக் கொள்வார்கள். இதனால் அந்த நாய்கள் உணர்வுச் சமநிலையை இழக்கும். அப்போது உரிமையாளர்கள், பொதுவாக மனிதர்கள் மீது நம்பிக்கையையும், மரியாதையும் அவை இழந்துவிடும். அப்போது நாய்கள் எப்படி வேண்டுமானாலும் நடந்துகொள்ளக்கூடும். இதை நாய்கள் வெளிப்படுத்தும்.

என்ன மாதிரியான சூழலில் தனது நாய் அசௌகரியத்தை உணர்கிறது என்பதை அதன் உரிமையாளர் கவனிக்க வேண்டியது அவசியம். அதை மீண்டும் மீண்டும் அசௌகரியமான சூழலுக்கு உட்படுத்தும்போது, வெறித்தனமாக நடந்து கொண்டால் மட்டும்தான் மனிதர்கள் கேட்பார்கள் என அந்த நாய் நினைத்துக் கொள்ளலாம்.

அப்போது அது குரைக்கலாம், பிராண்டலாம், கடிக்கவும் செய்யலாம். நாய் கடித்துவிட்டதே என, வெகுதொலைவில் கொண்டு சென்று விட்டுவிட்டு வந்துவிட்டால், உரிமையாளர் மட்டுமல்ல, மனிதர்கள் மீதான நம்பிக்கையை அது சுத்தமாக இழந்துவிடும். அந்த நாயால் கடிபடுவோர் எண்ணிக்கை அதிகரிக்கும்.

நாய் சாதாரண மனநிலையில் இருக்கும்போது கொட்டாவி விடும், கண் இமைக்கும், தனது மூக்கை நாக்கால் துடைக்கும். செல்லக் கோபம் அல்லது சாதாரணமான அதிருப்தி வந்தால் தலையைத் திருப்பிக்கொண்டு செல்லும். உடலைத் திருப்பிக் கொள்ளும். தரையில் அமர்ந்தபடி, தனது காலை நாக்கால் நக்கும். அருகில் சென்றால் விலகிச் செல்லும்.

அதேநாய் நடுத்தர மனநிலைக்கு வரும்போது, உடலை வளைத்து காதை பின்னால் நீட்டியிருக்கும்.
நின்றபடி, பின்னுடலை உயர்த்தி வளைத்து முன் உடலை குனிந்து நீட்டி, வாலை பின்பக்கமாக உள்ளடக்கி ஒளித்துக் கொள்ளும். மல்லாந்து படுத்தபடி காலைத் தூக்கிக் கொண்டிருக்கும். நாய் மிகவும் கோபத்தில் இருக்கிறது என்றால், முறைத்தபடியே நின்று உற்றுப் பார்க்கும். பற்களை கோரமாகக் காட்டி உறுமும். சத்தமாகக் குரைக்கும். பாய்ந்து வந்து கடிக்கும்.

மனிதர்களை விரட்டினால்தான் நாம் பிழைக்க முடியும் என்ற மனப்பாங்கு வருவதால்தான் தெரு நாய்கள் பலரைத் துரத்துகின்றன. நாய் கடிக்க வரும்போது, கையில் கிடைத்த பொருட்களை வைத்து தற்காத்துக் கொள்ள வேண்டும். நாய் உங்களது அந்தரங்கப் பகுதி அருகே வந்துவிடாமல் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

நாய் துரத்தி கடிக்க வரும்போது கத்தக் கூடாது. கத்தினால் மனிதர்களுக்கு எப்படி பிடிக்காதோ, அதேமாதிரிதான் நாய்களுக்கு அது வெறியைத் தூண்டும். பயப்படாதது போல் நடிக்க வேண்டும். ஆர்ப்பாட்டம் செய்யாமல் அமைதியாக நிற்க வேண்டும். பயந்துவிட்டால், உங்கள் உடல் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்காது. நாய் கடிக்கும்போது அதை அடிப்பது, உதைப்பது போன்ற காரியங்களில் ஈடுபட்டால் அது மிகவும் கோபமடையும். அதனால் பல் ஆழமாகப் பதியும். ரேபீஸ் கிருமித் தொற்றும் உடலில் ஆழமாக இறங்கும்.

நாய் வளர்க்கப்படும் வீட்டுக்குச் சென்றால், அந்த கடிக்குமா? என முதலில் உரிமையாளரிடம் விசாரிக்க வேண்டும். உங்களிடம் பழகலாமா? வேண்டாமா? என்பதை நாய்தான் முடிவு செய்யும். வாலை ஆட்டிக் கொண்டு உங்களிடம் வருவது, உங்களை முகர்ந்து பார்ப்பது, அருகில் வந்து அமர்ந்து கொள்வது போன்ற அறிகுறிகள்தான் உங்களை அது ஏற்றுக்கொண்டதாக அர்த்தம்.

பொதுவாக, ரேபீஸ் பாதித்த நாய்களிடம் மிக மிக கவனமாக இருப்பது அவசியம். இந்த பாதிப்பு உள்ள நாய்கள் ஒன்று மிக அமைதியாக இருக்கும். அல்லது மிக ஆக்ரோஷமாக இருக்கும். ரேபீஸ் பாதித்த நாய் நம்மைக் கடித்தால் ரேபீஸ் வைரஸ், உடல் ரத்த ஓட்டத்தில் கலந்து நரம்புகளின் வழியே மூளையை அடைந்து பின் உயிரைப் பறிக்கும்.

Also Read : கடிப்பதற்கு முன்பாக பாம்பு எப்படி எச்சரிக்கும்? எந்தெந்த பாம்பு என்னவிதமான பாதிப்பை ஏற்படுத்தும்? Identifying venomous snakes!

எனவேதான் வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களுக்கு ஆண்டு தோறும் சரியாக அதே நாளில் ரேபீஸ் தடுப்பூசி கட்டாயம் போட வேண்டும். ஒரு முறை போட்டுவிட்டோம் என விட்டுவிடக்கூடாது. தடுப்பூசி போட்ட வீட்டு நாயாக இருந்தாலுமே, அது கடித்து, அதன் பல் தோலைக் கிழித்து பதிந்துவிட்டால் மனிதர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

நாய் கடித்தால் அதை பாம்புக்கடி போன்றே ஆபத்தானதாகக் கருத வேண்டும் என்று மருத்துவர் அமலோற்பவநாதன் பிபிசி பேட்டியில் கூறியிருக்கிறார். மேலும், “நாய் கடித்தவுடன் உடனடியாக சோப்பு போட்டுக் கழுவிவிட்டு, அடுத்த சில மணி நேரங்களுக்குள் தடுப்பூசி போட்டுவிட வேண்டும். அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் இதற்கான ஊசி இருக்கும்.

நாய்கடித்தால் அதற்குத் தேவையான அனைத்து தடுப்பூசிகளும் போட வேண்டும். ஒரு ஊசி போட்டுவிட்டோம், மூன்று ஊசிகள் போட்டுவிட்டோம், இன்று வேலை இருக்கிறது, நாளை பார்த்துக் கொள்ளலாம் என எக்காரணம் கொண்டும் தள்ளிப் போடக்கூடாது என்றும் மருத்துவர் அமலோற்பவநாதன் கூறுகிறார். இரவாக இருந்தாலும் என்ன வேலை இருந்தாலும் கடித்த உடன் தாமதிக்காமல் ஊசி போடவேண்டியது மிகமிக முக்கியம்.

நாய்கள் முகத்தில் நக்கி விளையாட அனுமதிக்கும்போது, அதன் எச்சிலில் உள்ள வைரஸ் காயம் பாதித்த தோல் மீது பட்டாலும், ரேபீஸ் வைரஸ் உடலுக்குள் செல்லும். வெறிபிடித்தநாய் கடித்தது என்றால் பெரிய மருத்துவமனைகளில் இம்யூனோகுளோபின் போட்டுக் கொள்ள வேண்டும். பாம்பு விஷம் உடனே கொல்லும். ரேபீஸ் வைரஸ் மெல்லக் கொல்லும். ஆனால் இரண்டுமே கொல்லக்கூடியது,” என்கிறார் அவர்.

Also Read : சாராயத்துக்குக் குறைவில்லாத இணைய போதை! மாணவர்கள், இளைஞர்களை அச்சுறுத்தும் ‘இன்டெர்நெட் அடிக்‌ஷன் டிஸார்டர்’! What Is Internet Addiction Disorder?

மனிதர்களின் நரம்பு மண்டலத்தில் ரேபீஸ் வைரஸ் பாதித்திருந்தால், தண்ணீர் குடிக்கும்போது புறையேறி இருமலாக வரும். தண்ணீர் மீது வெறுப்பும் பயமும் வரும். இந்த ஹைட்ரோஃபோபியா வந்துவிட்டால், உயிர் பிழைப்பது கடினம். ரேபீஸ் வைரஸ் உடலில் புகுந்து 7 – 15 நாட்கள் முதல் இந்த அறிகுறி தென்படலாம். எனவே, நாய்களை வளர்ப்போரும், அதனோடு பழக முயல்வோரும் மிகவும் பொறுப்போடு இருக்க வேண்டும். நாய் மட்டுமல்ல, பூனை பிரண்டினாலும் கூட ரேபீஸ் பரவலாம் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

நாய் கடித்துவிட்டால் உடனடியாக என்ன செய்ய வேண்டும்?

  • நாய் பிரண்டினாலோ, கடித்தாலோ, அந்த இடத்தில் ஓடும் நீரில் 15 நிமிடங்கள் வரை சோப்பு போட்டுக் கழுவ வேண்டும். இது காயத்தில் இருந்து வைரஸை நீக்க வழிவகுக்கும்.
  • கடிபட்ட இடத்தில் கிருமி நாசினி பூச வேண்டும். இது ரசாயனம் மூலம் ரேபீஸ் வைரசை செயல் இழக்கச் செய்யும்.
  • காயத்தைச் சுற்றிலும், அதன் ஆழம் வரையிலும் இம்யூனோகுளோபின் ஊசி போட வேண்டும். இது அந்த வைரசை அழிக்க உதவும். 0, 3, 7 மற்றும் 21 அல்லது 28 ஆகிய நாட்களில் தடுப்பூசிகளைத் தொடர்ந்து போட வேண்டும்.
  • நாய்க்கு என்ன ஆனது என 10 நாட்களாவது கண்காணிக்க வேண்டும். ரேபீஸ் பாதித்த நாயாக இருந்தால் 10 நாட்களில் இறந்துவிடும்.
  • கர்ப்பிணிகளை நாய்கடித்தால் உடனடியாக ஊசி போட்டுக் கொள்ள வேண்டும். தவறினால், கருவில் உள்ள குழந்தைக்கும் ரேபீஸ் பாதித்துவிடும்.
  • காயத்தை வெறும் கைகளால் தொடக்கூடாது. காயத்தின் மீது மண்ணை வைக்கக் கூடாது, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் போடக்கூடாது.
  • தேங்காய் எண்ணெய் வைக்கக் கூடாது, மூலிகைகள், சாக்பீஸ், வெற்றிலை வைக்கக் கூடாது.
  • காயம் பட்ட இடத்தில் எரிச்சல் இருந்தால், அந்த வைரஸ் எளிதில் நரம்புக்குள் நுழைய வழிவகுத்துவிடும். காயத்துக்குக் கட்டு போடவோ, தையல் போடவோ கூடாது.

With BBC Input

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry