பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது! மதிமுகவை கதறவிடும் தேர்தல் ஆணையம்!

0
66
Election Commission refuses to allot Pambaram symbol to MDMK

மதிமுகவிற்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள மதிமுகவிற்கு, திருச்சி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் துரை வைகோ போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டு, வேட்புமனுவும் தாக்கல் செய்துள்ளார். ஆனால், மதிமுகவிற்கு தேர்தல் ஆணையம் அக்கட்சியின் பம்பரம் சின்னத்தை ஒதுக்கவில்லை.

இதையெதிர்த்து அக்கட்சி பொதுச்செயலாளர் வைகோ உயர்நீதிமன்றத்தை நாடினார். அப்போது, ”தங்களது கட்சிக்கு 5.97 சதவிகிதம் அதாவது சுமார் 6 சதவிகித வாக்கு வங்கி உள்ளது. எனவே கட்சியின் பம்பரம் சின்னத்தையே தங்களுக்கு ஒதுக்க வேண்டும்” என வாதிடப்பட்டது. ஆனால், மதிமுகவிற்கு இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டால் மட்டுமே பம்பரம் சின்னம் ஒதுக்கப்படும், அதோடு அக்கட்சிக்கு 5.4 சதவிகித வாக்கு வங்கி மட்டுமே உள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இதையடுத்து, இன்று காலை 9 மணிக்குள் சின்னம் ஒதுக்குவது குறித்து முடிவெடுக்குமாறு, தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், மதிமுகவிற்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது என, அக்கட்சி வழக்கறிஞர்களுக்கு தேர்தல் ஆணையம் மின்னஞ்சல் மூலம் தெரிவித்துள்ளது.

கடந்த தேர்தலை போன்று இந்த முறையும் மதிமுக வேட்பாளர், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என திமுக முதலில் வலியுறுத்தியது. ஆனால், அதனை மதிமுக தலைமை முழுமையாக நிராகரித்தது. மேலும், உயிரே போனாலும் எங்கள் சின்னத்தில் மட்டுமே போட்டியிடுவோம், இல்லையென்றால் வேறு சின்னத்தில் போட்டியிடுவோம். ஆனால் உதயசூரியன் சின்னதில் போட்டியிடமாட்டோம்” என துரை வைகோ உறுதிபடக் கூறியிருந்தார்.

இந்நிலையில், மதிமுகவிற்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. இதையடுத்து, துரைவைகோ எந்த சின்னத்தை கொண்டு, திருச்சி தொகுதியில் களம் காண உள்ளார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதேநேரம் சுயேட்சை சின்னத்தில் துரைவைகோ போட்டியிட திமுக சம்மதிக்குமா? அல்லது உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என வற்புறுத்துமா என்பது விரைவில் தெரிந்துவிடும். இதனால் திமுக – மதிமுக உறவில் விரிசல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.