மாநிலங்களவையில் உறுப்பினர் அன்புமணி ராமதாஸ், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்திற்காக, மாவட்ட தாது அறக்கட்டளை மூலம் ஐந்தாண்டு முன்னோக்குத் திட்டம் தயாரிக்கச் செய்வதற்கான கொள்கைத் திட்டம் ஏதேனும் உள்ளதா? அத்தகைய திட்டத்தை தயாரிப்பதில், கிராம சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளை இணைத்துக் கொள்வதற்கான வழிகாட்டுதல்கள் ஏதேனும் வழங்கப்பட்டிருக்கின்றனவா? என்று நேற்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த மத்திய சுரங்கம் மற்றும் நிலக்கரித் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி,
இந்தியாவின் எந்தெந்த மாவட்டங்களில் தாதுப் பொருட்கள் வெட்டி
எடுக்கப்படுகின்றனவோ, அந்த மாவட்டங்களில், தாதுக்கள் வெட்டி எடுக்கப்பட்டதால்
பாதிக்கப்பட்ட பகுதிகளின் திட்டமிட்ட மேம்பாட்டுக்காக, ஐந்தாண்டு முன்னோக்கத்
திட்டங்களை தயாரிக்கும்படி அனைத்து மாநில அரசுகளையும் கடந்த 24.06.2022
தேதியிட்ட ஆணை மூலம் சுரங்கத்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டிருக்கிறது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களின் தேவைகளை மதிப்பிடுவதற்கான அறிக்கைகளை தயாரிப்பதில் மாவட்ட தாது அறக்கட்டளைக்கு கிராம சபைகளும், உள்ளாட்சி அமைப்புகளும் உதவி செய்யலாம். சுரங்கத் துறை அமைச்சகம் பிறப்பித்த ஆணையின்படி தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.
Also Read : 14 மாதங்களில் ரூ.20 ஆயிரம் கோடி ஊழல்! நல்ல திட்டங்களை முடக்குவதாக ஈபிஎஸ் விமர்சனம்!
அதுமட்டுமின்றி, கடலூர் மாவட்ட தாது அறக்கட்டளை கீழ்க்கண்ட நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக தமிழக அரசிடமிருந்து பெறப்பட்ட தகவல்கள் மூலம் தெரிய வந்திருக்கிறது.
1. கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி நிறுவனத்தால் பழுப்பு நிலக்கரி மற்றும் பிற தாதுக்கள் வெட்டி எடுக்கப்பட்டதால் ஏற்பட்ட மோசமான விளைவுகளை கருத்தில் கொண்டு பார்க்கும்போது, ஒட்டுமொத்த கடலூர் மாவட்டமும் பாதிக்கப்பட்ட பகுதியாக கடலூர் மாவட்ட தாது அறக்கட்டளையால் அடையாளம் கண்டு அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் அங்கு வாழும் மக்களின் தேவைகள் என்னென்ன? என்பதை உள்ளாட்சி அமைப்புகள் உள்ளிட்ட நிறுவனங்களுடன் திட்ட செயலாக்க அமைப்புகள் கலந்தாய்வு நடத்தி அடையாளம் கண்டுள்ளன.
2. பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர், மருத்துவம், சுகாதாரம், கட்டமைப்பு வசதிகள் போன்ற பொதுமக்களுக்கு உடனடியாக தேவைப்படும் திட்டங்கள் குறித்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Also Read : அரசுப்பள்ளிகளை சீர்குலைக்க திமுக அரசு திட்டம்! தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தில் சீமான் கண்டனம்!
30.06.2022 அன்றைய நிலவரப்படி ரூ.292.15 கோடியில் 170 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றில் ரூ.190.91 கோடி மதிப்பிலான 122 பணிகள் நிறைவடைந்து விட்டன. ரூ.101.25 கோடி மதிப்பிலான 48 திட்டப் பணிகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
தமிழ்நாடு அரசிடமிருந்து பெறப்பட்ட தகவலின்படி, என்.எல்.சி இந்தியா நிறுவனத்திடமிருந்து கடலூர் மாவட்ட அறக்கட்டளைக்கு ரூ.427.81 கோடி பெறப்பட்டுள்ளது. என்.எல்.சி. இந்தியா நிறுவனத்திடமிருந்து ஒட்டுமொத்தமாக பெறப்பட்ட ரூ.447.84 கோடியில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதற்காக ரூ.292.15 கோடி (68.29%) ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதில் ரூ.278.16 கோடி (65.02%) நிதி கடந்த ஐந்தாண்டுகளில் செலவிடப்பட்டுள்ளது.” இவ்வாறு மத்திய சுரங்கம் மற்றும் நிலக்கரித் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி பதிலளித்தார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry