14 மாதங்களில் ரூ.20 ஆயிரம் கோடி ஊழல்! நல்ல திட்டங்களை முடக்குவதாக ஈபிஎஸ் விமர்சனம்!

0
80

தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர் கட்சித்தலைவரும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சேலத்திலிருந்து இருந்து சென்னை வருவதற்காக, ஓமலூர் வழியாக, தருமபுரி சென்றார். ஓமலூர் சட்டசபை தொகுதி அதிமுக சார்பில்,  தீவட்டிப்பட்டியில் பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அங்கு நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “சேலம் மாவட்டம் அ,தி.மு.க., கோட்டை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் தி.மு.க., அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருக்கலாம், ஆனால் சேலம் மாவட்டத்தை பொறுத்தவரைக்கும் அ.தி.மு.க. தான் ஆட்சியில் இருப்பதாக மக்கள் கருதுகின்றனர்.

அதிகமாக ஏழைகள் வசிக்கும் பகுதியில் அம்மா கிளினிக் ஏற்படுத்தி பொது மக்களுக்கு சிகிச்சை ஏற்பாடு செய்த அரசதான் அம்மா அரசு. இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத ஸ்டாலின், அ.தி.மு.க. கொண்டு வந்த திட்டம் என்பதாலும், மக்களிடம் அதிக அளவில் வரவேற்பு இருப்பதாலும் அதை மூடி உள்ளார். நல்ல நல்ல திட்டங்களுக்கு மூடு விழா நடத்துவதற்குத் தான் இந்த அரசாங்கம் வந்ததே தவிர, மக்களுக்கு நன்மை செய்ய வரவில்லை. இந்த ஆட்சி, மக்கள் விரோத ஆட்சி.

தி.மு.க. கட்சி அல்ல, கார்ப்பரேட் கம்பெனி. குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பதவியில் உள்ளனர். இந்த மக்கள் விரோத ஆட்சி விரைவில் வீட்டுக்கு போவது உறுதி. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. அனைத்து துறைகளிலும் ஊழல் நடைபெறுகிறது. ஆட்சி பொறுப்பேற்று, 14 மாதங்களில், 20 ஆயிரம் கோடி ஊழல் செய்த ஒரே கட்சி தி.மு.க. தான். மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி மலர அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.” இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக எடப்பாடி பழனிசாமி தனது தொகுதியில் 1.95 கோடி ரூபாய் மதிப்பிலான முடிவுற்ற திட்டங்களைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து எடப்பாடியை அடுத்த வெள்ளாளபுரம் பகுதிக்குச் சென்று மேட்டூர் அணை உபரிநீரை 100 ஏரிகளில் நிரப்பும் திட்டம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

Also Read : இடுக்கி, முல்லைப் பெரியாறு அணைகள்! கேரளாவின் பொய் பரப்புரைகள்! அம்பலப்படுத்தும் விவசாயிகள் சங்கம்!

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எடப்பாடி பழனிசாமி, விவசாயிகளுக்கு மிகுந்த பயன் அளிக்கக்கூடிய வகையில் மேட்டூர் அணையின் உபரி நீரை மேட்டூர் ஓமலூர் எடப்பாடி சங்ககிரி ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட 100 ஏரிகளில் நிரப்பும் திட்டம் கொண்டுவரப்பட்டது.

ஆனால், அதிமுக ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டம் என்ற காரணத்தால் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு அரசு இத்திட்டத்தைத் துரிதமாகச் செயல்படுத்தவில்லை. ஆட்சி பொறுப்பேற்ற 14 மாத காலத்தில் இத்திட்டத்தினை நிறைவேற்றி இருந்தால் தற்போது மேட்டூர் அணையின் உபரிநீரை 100 ஏரிகளுக்கு நிரப்பி இருக்க முடியும்.

Also Read : அரசுப்பள்ளிகளை சீர்குலைக்க திமுக அரசு திட்டம்! தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தில் சீமான் கண்டனம்!

திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற காலத்திலிருந்து நிர்வாகத் திறமையற்ற அரசாகவே செயல்பட்டு வருகிறது. அரசும், காவல் துறையும் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தத் தவறிவிட்டதால் தற்கொலைகளும், போதைப் பொருள் புழக்கமும் அதிகரித்து விட்டது. மேலும் ஆன்லைன் சூதாட்டத்திற்குத் தடைவிதிக்க வேண்டும் எனப் பலமுறை சட்டமன்றத்தில் வலியுறுத்தியும் இதுவரை தடை விதிக்கப்படாததால் பலர் தங்கள் இன்னுயிர்களை இழக்க நேரிடுகிறது. கூட்டணிக் கட்சிகள் வலியுறுத்தியும் கூட ஆன்லைன் சூதாட்டத்திற்குத் தடை விதிக்க மக்கள் கருத்தைக் கேட்க வேண்டும் என்று முதலமைச்சர் கூறுவது வேடிக்கையாக உள்ளது.” இவ்வாறு அவர் கூறினார்.

தருமபுரியில் ஈபிஸ் பேச்சைக் கேட்க இன்று கூடியிருந்த பெருந்திரளான மக்கள் கூட்டம்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஈபிஎஸ்-ஐ வரவேற்க கூடிய கூட்டத்தின் ஒரு பகுதி.
திருப்பத்தூரில் ஈபிஎஸ் நிகழ்ச்சிக்காக திரண்ட பல்லாயிரக்கணக்கானோர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry