இடுக்கி, முல்லைப் பெரியாறு அணைகள்! கேரளாவின் பொய் பரப்புரைகள்! அம்பலப்படுத்தும் விவசாயிகள் சங்கம்!

0
171

கேரளாவின் மிகப்பெரிய அணையான இடுக்கி அணையிலுள்ள, மூன்றாவது ஷட்டரை 70 மீட்டர் உயர்த்தி, 50 கன அடி தண்ணீரை காலை 10 மணி அளவில் கேரளா அரசு திறந்துள்ளது.

இதுகுறித்து பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இடுக்கி அணையின் மொத்த கொள்ளளவான 2,043 அடியில், 2382.88 அடி வரை நீர் வந்து சேர்ந்ததால், இடுக்கி அணையை பெயரளவிற்கு கேரள அரசு திறந்து வைத்திருக்கிறது.

இடுக்கி அணையில் இருந்து திறக்கப்படும் இந்த நீர், அதற்கு கீழே உள்ள இடமலையாறு அணையில் தேக்கி வைக்கப்படும் என்றும் கேரளா நீர்வளத்துறை அமைச்சர் ரோஸி அகஸ்டின் அறிவித்திருக்கிறார்.

Also Read : நெல் கொள்முதலை கார்ப்பரேட்டுகளிடம் தாரைவார்ப்பதா? கொந்தளிக்கும் விவசாய சங்கங்கள்!

ஆனால் சம்பந்தமே இல்லாமல் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மேலாக, இடுக்கி முதல் எர்ணாகுளம் மாவட்டம் வரை, முல்லைப் பெரியாறு அணை உடைந்து தண்ணீர் வருவதைப் போல ஒரு அச்சத்தை கேரள‌ அரசியல்வாதிகள் விதைத்திருந்தார்கள்.

அன்வர் பாலசிங்கம், பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம்

இந்திய வானிலை ஆய்வு மையத்தால் ஆரஞ்சு அலட் விடுக்கப்பட்டிருக்கும், இடமலையாறு அணையில் தான், இடுக்கி தண்ணீரைத் தேக்க போகிறோம் என்று அமைச்சர் அறிவித்ததில் இருந்தே இவர்களுடைய உள்நோக்கத்தை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. அதிலும் அரை மீட்டர் தண்ணீர் இடமலையாறு அணையில் உயர்ந்தாலே, ரெட் அலர்ட் கொடுக்க வேண்டிய காலகட்டத்தில் அமைச்சர் இதை அறிவித்திருக்கிறார்.

ஆனால் கேரள மாநில மக்கள், முல்லைப் பெரியாறு அணை மீது பெரிய அச்சம் கொள்ள வேண்டும் என்பதற்காக, இடுக்கி அணைக்கு கீழே உள்ள தாலுகாக்களில், 29 அவசரகால முகாம்களை அமைத்திருக்கிறது கேரள மாநில அரசு. இடுக்கி அணையிலிருந்து வெறும்
50 கன அடி தண்ணீர் மட்டுமே திறந்து விட்ட நிலையில், என்ன யோக்கியதையில் எர்ணாகுளம் மாவட்டத்திற்கு எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது என்று நமக்கு தெரியவில்லை.

இடுக்கி அணை

இதற்கிடையில் கேரள தொழில்துறை அமைச்சரான ராஜீவ், இன்று காலை இடுக்கி அணை அருகே உள்ள செருதோனியில் உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் நடத்திய கலந்துரையாடலில், இடுக்கி அணை திறக்கப்படுவதால் இடுக்கி அணைக்கு கீழே உள்ள ஊர்களைச் சேர்ந்த யாரும் அச்சப்படத் தேவையில்லை என்று கொளுத்தி போட்டு இருக்கிறார்.

ஏற்கனவே கடந்த எட்டு மாதங்களுக்கு மேலாக ஆபரேஷன் வாகினி மூலம் இடுக்கிக்கு கீழே ஆலுவா வரை உள்ள ஆறுகளை எல்லாம் சுத்தப்படுத்தி விட்ட நிலையில், தண்ணீர் எங்கும் தேங்கப் போவதில்லை, விரைவாக வழிந்து ஓடக்கூடிய நிலை இருக்கிறது. ஆனாலும் பெரியாறு அணையை குறித்து அச்சம் கொள்ள வேண்டும் என்பதற்காகவே, தேவையற்ற பரபரப்புகளை கேரள மாநில அரசும், ஊடகங்களும் பரப்பிக் கொண்டிருக்கிறது.

இடுக்கி அணையொட்டிருக்கக் கூடிய செருதோனியில் இருந்து கிளம்பும் தண்ணீர், தடியம்பாடு, கரும்பன் பகுதியை தாண்டி பெரியாறு பள்ளத்தாக்கில் பாய்ந்து, கீரித்தோடு, பணங்குட்டி செல்கிறது. அங்கே பனம்குட்டி ஆற்றுடன் இணைந்து பாம்புளா அணையோடு கலக்கிறது. அங்கிருந்து கீழ் பெரியாறு வழியாக நேரியமங்கலம் சென்று பூதத்தான் கட்டு அணையில் தண்ணீர் விழுகிறது.

அங்கிருந்து இடமலையாருக்கு சென்று, ஆலுவா நகரத்தில் இரண்டாகப் பிரிந்து இடுக்கி அணை நீர் அரபிக் கடலுக்கு செல்லுகிறது. முல்லைப் பெரியாற்றில் இருந்து திறக்கப்படும் உபரி நீர், கிட்டத்தட்ட 18 துணை ஆறுகளுடன் இடுக்கி அணையில் கலக்கிறது. பெரியாறு அணையில் இருந்து இடுக்கி அணை வரை உள்ள 18 துணை ஆறுகளும் கேரளாவில் தோன்றுபவை என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

முல்லைப் பெரியாறு அணை

கடந்த 2018 ஆம் ஆண்டு பெரியாறு அணையிலிருந்து நாம் கேரளாவை நோக்கி திறந்து விட்ட அதிகபட்ச தண்ணீர், 25 ஆயிரம் கன அடி. அந்தத் தண்ணீர் இடுக்கி அணைக்கு செல்லும்போது 80 ஆயிரம் முதல் ஒரு லட்சம் கன அடியாக உயர்ந்திருந்தது.

அது எப்படி முல்லைப் பெரியாறில் திறந்துவிட்ட 25,000 கன அடி தண்ணீர் இடுக்கி அணைக்கு செல்லும்போது ஒரு லட்சம் கனஅடியாக மாறியது என்றால், நமது பெரியாறு தண்ணீர் போக மீதமுள்ள 75 ஆயிரம் கன அடி தண்ணீர், பெரியாறு அணைக்கும் இடுக்கி அணைக்கும் இடைப்பட்ட பகுதிகளில் இருந்து ஓடிவரும் சிற்றாறுகளில் வந்த தண்ணீரே ஆகும். ஆனால் பழியை சுமந்தது முல்லைப் பெரியாறு அணை.

தங்கள் வசதிக்காக ஒரு அணை மீது ஒட்டுமொத்தமான பழியையும் சுமத்தி, 42 ஆண்டுகளாக குளிர் காய்ந்து கொண்டிருக்கும் மலையாள சகோதரர்களுக்கு பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் சார்பாக ஒரு வேண்டுகோளை வைக்கின்றோம்.

Also Read : லிங்க தீட்சை பெற்ற ராகுல் காந்தி! கர்நாடக தேர்தலுக்கான நாடகமா?

முல்லைப்பெரியாறு என்பது முழுக்க முழுக்க தமிழகத்திலேயே தோன்றும் ஒரு நதி. மொத்த தண்ணீரில், பத்து முதல் 15 விழுக்காடு வேண்டுமானால் அதில் கேரள மாநில தண்ணீராக இருக்கக்கூடும். ஆனால் அதையும் கூட நீங்கள் பல்வேறு தடுப்பணைகளின் மூலம் இடுக்கி அணைக்கு கொண்டு செல்வதை எங்களால் நிரூபிக்க முடியும்.

அப்படி தமிழகத்திற்கு சொந்தமான ஒரு நதியின் பெயரை, கேரள மாநிலத்தின் ஐந்து மாவட்டங்களில் ஓடும் பல்வேறு நதிகளுடைய ஒட்டுமொத்த பெயராக மாற்றி அழைப்பது என்பது உசிதமான செயல் அல்ல. செருதோனி அணை தண்ணீரை செருதோனியாற்று தண்ணீர் என்றும், இடமலையாற்று அணை தண்ணீரை, இடமலையாறு தண்ணீர் என்று குறிப்பிடுங்கள்.

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகத்தை நோக்கி வரும் தண்ணீர் வைகை அணையில் தேக்கப்பட்டாலும், வைகை அணைக்குக் கிழக்கே உள்ள ஆற்றுக்கு பெயர் முல்லைப் பெரியாறு அல்ல, வைகை ஆறு. இந்த யோக்கியதையை நீங்களும் கடைப்பிடிக்க வேண்டும் என்று விரும்புகிறோம்.

Also Read : ஒரு லிட்டர் பசு கோமியம் 4 ரூபாய்! சத்தீஸ்கர் காங்கிரஸ் அரசு கொள்முதல்!

எங்கோ இருக்கும் காலடி நகராட்சி, பெரும்பாவூர் நகராட்சி, ஆலுவா நகராட்சி, கொச்சி புறநகர் பகுதிகளில் எல்லாம், இதோ பெரியறு அணையிலிருந்து வெள்ளம் வந்து கொண்டிருப்பதாக தண்டோரா அடித்துக் கொண்டிருக்கிறார்கள், திருத்திக் கொள்ளுங்கள்.

இதனிடையே, முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக இருப்பது போலவும், அது உடைந்துவிட்டால் என்னவாகும் என்பது போலவும் கிராஃபிக்ஸ் காட்சிகளுடன் கேரளாவைச் சேர்ந்த ஒருவர் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த பாடலை தமிழகத்தில் விவசாயிகள் மத்தியில் அம்பலப்படுத்தியுள்ள பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கத்தினர், இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry