அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகி விட்டது. ஓபிஎஸ் பொருளாளர் மட்டும்தான். எடப்பாடி, தலைமை நிலைய செயலாளராக தான் நீடிப்பார் என்று சி.வி.சண்முகம் கூறினார்.
இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளரும், தஞ்சை மாவட்டத்தின் மாவட்ட செயலாளருமான வைத்திலிங்கம் சில கருத்துகளை சொல்லி இருக்கிறார். இந்த பொதுக்குழு கூட்டம் முறையாக கூட்டப்படவில்லை. இதற்கு சட்டப்பூர்வமான அங்கீகாரம் இல்லை, அதேபோல் பொதுகுழு உறுப்பினர்களை வைத்து பொதுக்குழு நடத்தப்படவில்லை, கூலி ஆட்களை வைத்தும் அடி ஆட்களை வைத்தும் நடத்தப்பட்டது என சொல்லி இருக்கிறார்.
அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேனை முறைப்படி தேர்வு செய்யப்படவில்லை என்றும் வைத்திலிங்கம் சொல்லி இருக்கிறார். இந்த பொதுக்குழுவில், நடந்து முடிந்த அமைப்பு தேர்தலை அங்கீகரிக்காததால் தேர்வு செய்யப்பட்டவர்களின் பதவி செல்லாது என்றும் சொல்லி இருக்கிறார். மீண்டும் பொதுக்குழுவை கூட்டுவதற்கு அதிகாரம் இல்லை என்றும் சொல்லி இருக்கிறார். அதேபோல் தேவையற்ற வார்த்தைகளை கருத்துகளை சொல்லி இருக்கிறார். எப்போதும் போல அதிமுக நடத்தும் கூட்டத்தில் ரவுடித்தனமாக பேசுவதை போல பேசியிருக்கிறார்.
வைத்திலிங்கம் எழுப்பியுள்ள ஐந்து கேள்விகளுக்கு நாங்கள் பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம். பொதுக்குழு கூட்டும் அதிகாரம் யாருக்கு இருக்கிறது என்று விதி 19ல் சொல்லப்பட்டு இருக்கிறது. பொதுக்குழுவை பொதுச்செயலாளர், இப்போது அது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று மாற்றப்பட்டு இருக்கிறது, அவர்கள் பொதுக்குழுவை கூட்டலாம். ஆண்டுக்கு ஒரு முறை கண்டிப்பாக அதிமுக பொதுக்குழு கூட்டப்பட வேண்டும்.
தேவைக்கேற்ப பொதுக்குழுவை கூட்டும் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு உண்டு. இல்லை என்றால் மொத்த பொதுக்குழு உறுப்பினர்களில் ஐந்தில் ஒன்று 2665 உறுப்பினர்கள் கையொப்பமிட்டு கொடுத்தால் அவர்களின் வேண்டுகோளை ஏற்று, கொடுக்கப்பட்ட தேதியில் இருந்து 30 நாட்களுக்குள் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் பொதுக்குழுவை அவசியம் கூட்ட வேண்டும். ஆகவே அவர் சொல்லி இருக்கும் கருத்து முழுக்க முழுக்க தவறு.
23ம் தேதிக்கு முன்பு வரை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இருந்த, தற்போது இந்த கழகத்தின் பொருளாளராக இருக்கின்ற ஓ.பன்னீர்செல்வம், கழகத்தின் முன்னாள் இணை இருங்கிணைப்பாளராக இருந்த, தற்போது எதிர்கட்சி தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிசாமியும் முறைப்படி கையொப்பமிட்டு 2665 பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் 2.6.2022 அன்று கடிதத்தை அனைவருக்கும் 15 நாள் கால அவகாசம் கொடுத்து 23.6.2022 அன்று சென்னை ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் காலை பொதுக்குழு கூடும் என்று கையொப்பமிட்டு கொடுத்தது யார்?
இன்றைக்கு குற்றச்சாட்டை சொல்லி இருக்கும் முன்னாள் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், அவர் தலைவராக ஏற்றுக்கொண்டு இருக்கிற ஓ.பன்னீர்செல்வம் கையெழுத்திட்டு கொடுத்த கடிதம் இல்லை என்கிறாரா, இல்லை போலி என்கிறாரா? இதை முறையற்ற கூட்டம் என்று சொன்னால் நீதிமன்றத்தில் அதிகாலை 3 மணி அளவிற்கு விசாரிக்கப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கை, இவர்களை சார்ந்த வழக்கறிஞர்கள் எங்களுக்கு பொதுக்குழுவை கூட்டுவதற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று சொன்னார்களா இல்லையா? தீர விசாரித்து, அனைத்து சட்ட விதிகளையும் சொல்லப்பட்டு, என்ன சொன்னார்கள் பொதுக்குழுவை கூட்டுவதற்கு அதிகாரம் உண்டு.
ஒரு கட்சியின் உட்கட்சி விவகாரத்தில் நீதிமன்றங்கள் தலையிட அதிகாரம் இல்லை. பொதுக்குழு நடத்த நிபந்தனைகளோடு, தெளிவாக உத்தரவு போடப்பட்டது. பொதுக்குழுவுக்கு வந்த அனைவரிடமும் கையெழுத்து வாங்கப்பட்டது. 1.1.2021ல் செய்யப்பட்ட சட்ட விதி திருத்தங்களுக்கு நேற்றைய பொதுக்குழுவில் அங்கீகாரம் பெறாததால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டது. அதிமுகவில் இனி ஓ.பன்னீர்செல்வம் பொருளாளராகவும், எடப்பாடி பழனிசாமி தலைமை நிலைய செயலாளர் பதவியில் நீடிக்கின்றனர். அதிமுக கட்சியை அழிக்க நினைத்தவர் ஓபிஎஸ். அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்கியவர் ஓபிஎஸ்”. இவ்வாறு அவர் கூறினார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry