வயநாடு பேரழிவுக்கு காரணமான சாலி ஆறு! பாண்டியாறு – புன்னம்புழா திட்டத்தை நிறைவேற்றாததன் பலனை அனுபவிக்கும் கேரளா!

    0
    119
    The death toll in the Wayanad landslides has mounted to over 300 and the injured to 264, the Kerala health department said, as the rescue operations entered Day 4 on Friday, August 2. Getty Image.

    சமீபத்தில் வயநாடு மாவட்டத்தில் உள்ள சூரல்மலை, முண்டகை, உள்ளிட்ட மூன்று கிராமங்களில் ஏற்பட்ட பேரழிவுக்கு காரணம், மழைக்காலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் சாலியாறு தான். சாலியாற்றில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கு தான், மேற்கண்ட 3 கிராமங்களில் ஏற்பட்ட பெரு நிலச்சரிவுக்கு காரணம் என்று கேரளத்தின் சூழலியல் ஆர்வலர்களே ஒப்புக் கொள்கிறார்கள். இன்று காலை 10 மணி நிலவரப்படி, 276 உடல்கள் சாலியாற்றில் இருந்து தான் மீட்டெடுக்கப்பட்டிருக்கிறது.

    சாலியாற்றுக்கு நீலகிரி மாவட்டத்தில் இருந்து செல்லும் தண்ணீரை தடம் மாற்றி, கீழ் பவானிக்கு கொண்டு வந்து சேர்க்க வேண்டும். அதனால் வெள்ள காலங்களில் கேரளாவில் ஏற்படும் பேரழிவை தடுக்கலாம். ஆனால் கேரளாவின் காதுகளில் அது இதுவரை ஏறவே இல்லை என்பதுதான் துயரின் மிச்சமாக முடிந்திருக்கிறது. கேரளாவில் அரபிக் கடலை நோக்கி ஓடும் பெரும்பாலான ஆறுகளுக்கு பாசனம் கிடையாது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

    அப்படி ஓடும் ஆறுகளில் ஒன்று தான் சாலியாறு. தமிழகத்தில் தோன்றி கேரளாவின் வயநாடு மாவட்டத்திற்குள் பெருக்கெடுத்து ஓடும் சாலியாற்றின் மூலம், நீலகிரி மாவட்டம் நடுவட்டம் மற்றும் ஓவேலி பள்ளத்தாக்கு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் தொடங்குகிறது. மலப்புறம் மாவட்டத்தில் உள்ள நிலம்பூரிலிருந்து, கூடலூருக்குள் நுழையும் நுழைவாயில் அருகே, இரும்பு பாலத்தில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரும் இந்த சாலியாற்றுக்கு தான் சென்று சேருகிறது.

    கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்திற்கும்- கேரளாவிற்குமமிடையே சாலியாறு தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து கொண்டுதான் இருக்கிறது. 2006 ஆம் ஆண்டு இந்தத் திட்டம் குறித்து முழுமையான கருத்துருவை தமிழகம் வெளியிட்ட பின்னரும், கேரளா இதுவரை அதை கண்டு கொள்ளவே இல்லை. காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் மரியாதைக்குரிய பொறியாளர் சுப்பிரமணியம் தலைமையில் ஒரு குழு, 2006 ஆம் ஆண்டு பாண்டியாறு புன்னம்புழா திட்டம் தொடர்பாக உருவாக்கப்பட்ட கருத்துருவை எடுத்துக்கொண்டு, டெல்லியில் மத்திய நீர்வள கமிட்டியிடம் கொடுத்தும் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை.

    2006 கருத்துருவின்படி பாண்டியாற்றின் குறுக்கே சிறிய மற்றும் பெரிய அணைகள் கட்டுவதோடு, ஆங்காங்கே அந்த ஆற்றோடு சேரும் சிற்றோடைகளையும் இணைத்து, சுமார் 21 கிலோமீட்டர் தொலைவிற்கு சுரங்கம் அமைத்து மோயாற்றுக்கு கொண்டு சென்று, அங்கிருந்து தண்ணீரை கீழ் பவானிக்கு திருப்ப வேண்டும் என்கிற நம்முடைய கனவுக்கு எதிராகத்தான் இதுவரை கேரளம் இருந்திருக்கிறது.

    Also Read : வயநாடு நிலச்சரிவு! இஸ்ரோ புகைப்படங்களால் வெளியான பகீர் உண்மை! எச்சரிக்கையை புறக்கணித்ததா கேரள அரசு? 86,000 சதுர மீட்டர் நிலம் குளோஸ்!

    ஆண்டு ஒன்றிற்கு 14 டிஎம்சி தண்ணீர் செல்லும் இந்தப் பாண்டியாறு, பவானி அணைக்கு திருப்பி விடப்பட்டால், கிட்டத்தட்ட ஒரு லட்சம் ஏக்கருக்கு மேல் பாசன வசதி பெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. கூடுதலாக மீதமுள்ள தண்ணீரை பவானி கூடுதுறையில் காவிரி ஆற்றோடு கலக்கச் செய்து, டெல்டாவிற்கும் ஒரு வாய்ப்பை கொடுக்க முடியும். கூடலூருக்கு மேற்கே ஓவேலி பள்ளத்தாக்கு பகுதியில் உற்பத்தியாகும் இந்த பாண்டியாறு மேற்கு நோக்கி முப்பது கிலோ மீட்டர் தொலைவுக்கு தமிழக எல்லைக்குள் ஓடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    கூடுதலாக பாண்டியாறை பம்பிங் எதுவும் செய்யாமலேயே, நம்மால் இயற்கையான முறையில், கூடலூருக்கு கிழக்கேயுள்ள தெப்பக்காடு அருகே மோயாற்றுடன் இணைக்க முடியும் என்பதையும் வல்லுநர்கள் நிரூபித்திருக்கிறார்கள். என்னதான் தமிழகம் கத்தினாலும் எங்கள் காதுகளில் ஏறாது என்கிற மலையாள அரசியல்வாதிகளின் பிடிவாதத்தாலேயே இந்த பேரழிவு நிகழ்ந்திருக்கிறது என்றால் மிகையில்லை.

    Also Read : கோரிக்கைகளைக் கேட்டால் கோரத்தாண்டவமாடுவதா? ஐபெட்டோ அண்ணாமலை ஆவேசம்!

    வெறுமனே நிலத்தடி நீர்மட்டத்தை சீராக வைத்திருக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே இந்த சாலியாறு கேரளாவில் ஓடிக்கொண்டிருக்கிறது என்பது எத்தனை பெரிய துயரம். 30 கிலோமீட்டர் தமிழக எல்லைக்குள் ஓடும் இந்த பாண்டியாறு, தன்னோடு இணையும் கிளை ஆறுகளோடு இணைந்து, புன்னம்புழா என்கிற பெயரில் ஆராட்டுபாறை எனும் இடத்தில் கேரளவிற்குள் நுழைந்து சாலியாற்றோடு இணைகிறது.

    தமிழக நினைத்தால் கேரளாவின் அனுமதி இன்றியே பாண்டியாற்றை மறித்து அணை கட்ட முடியும். காரணம் பாண்டியாறு பன் மாநில நதிகளின் பட்டியலில் இல்லாததாகும். ஆனாலும் தமிழகம் பொறுமை காத்து வருகிறது. கேரளாவில் உள்ள சூழலியல் ஆர்வலர்களும், இயற்கையின் மேல் பற்று கொண்டவர்களும் இணைந்து, அடிக்கடி வெள்ளப்பெருக்கிற்கு உள்ளாகும் சாலியாற்றில் சென்று கலக்கும் பாண்டியாறு தண்ணீரை, தமிழகத்திற்கு திருப்ப வேண்டும் என்று கோரிக்கை வைக்க வேண்டும். மத்திய நீர்வள கமிஷனும் இந்த விஷயத்தில் தலையிட்டு, உடனடியாக தமிழகம் 2006 ஆம் ஆண்டு பாண்டியாறு – புன்னம்புழா தொடர்பாக உருவாக்கிய கருத்துருவை கவனத்தில் கொண்டு, களத்திற்கு வர வேண்டும்.

    கட்டுரையாளர் : ச.பென்னிகுயிக். M.A., M.Phil., B.Ed., ஒருங்கிணைப்பாளர் –  பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம், மாநிலச் செயலாளர் – தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம்.

    Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry