ஆம்பூரில் பற்றி எரிந்த காலணி தொழிற்சாலை! ஐ.டி. ரெய்டு நடந்த நிலையில் நேரிட்ட விபத்தால் சர்ச்சை!

0
88

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த சின்னவரிக்கம் பகுதியில் உள்ள ஃபரிதா காலணி தொழிற்சாலை தீப்பற்றி எறிந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஃபரிதா காலணி தொழிற்சாலையில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு காலணிகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வரும் இந்த தொழிற்சாலையில், நேற்று இரவு 7 மணி அளவில் உதிரிபாகங்கள் வைக்கப்பட்டிருந்த குடோனில் தீப்பற்றி இருக்கிறது. பிறகு தொழிற்சாலை முழுவதும் தீ பரவி கொழுந்து விட்டெறிந்துள்ளது.

இதையடுத்து தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். ஆம்பூர், வாணியம்பாடி, பேரணாம்பட்டு, குடியாத்தம், ஆலங்காயம் நாட்றம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சென்ற தீயணைப்பு வாகனங்கள் மற்றும் டிராக்டர் மூலம் தண்ணீர் வரவழைக்கப்பட்டு, காவல்துறையினர் மற்றும் கிராம மக்கள் உதவியுடன் 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். தொழிற்சாலையில் வைக்கப்பட்டிருந்த ரசாயனப் பொருட்களும் தீயில் எரிந்ததால் ஏற்பட்ட புகை மூட்டத்தால் கிராம மக்கள் மூச்சுத் திணறலுக்கு உள்ளாகினர்.

இந்த தீ விபத்தில் சுமார் 5 கோடி மதிப்பிலான காலணி மற்றும் தோல் உதிரிபாகங்கள் எரிந்து நாசமானதாகக் கூறப்படுகிறது. தீ விபத்து ஏற்பட்ட ஃபரிதா நிறுவனத்திற்கு சொந்தமான 15க்கும் மேற்பட்ட இடங்களில், வரி ஏய்ப்பு செய்ததாக கடந்த மாதம் 23-ம் தேதி தொடங்கி ஐந்து நாட்கள் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியிருந்தனர். இந்நிலையில் அந்த நிறுவனத்தில் திடீரென தீப்பற்றி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry