பிற்காலத்தில் தான் என்னவாக ஆக வேண்டும் என்பதை மிகச் சிறுவயதில் ஒருவன் தீர்மானித்து விட்டால், அதில் இருந்து இம்மியளவும் விலகாமல் பயணித்தால், அந்த இலக்கை நிச்சயம் அடைந்தே தீருவான் என்பதற்கு அடையாளம்தான் தான் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ’உங்களில் ஒருவன்’ சுயசரிதை நூல் வெளியீட்டு விழா சென்னையில் நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்றது. காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி நூலை வெளியிட்டார். கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா, ராஷ்டிரீய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழாவில் ஏற்புரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், “திராவிட மாடல் கோட்பாட்டை இந்தியா முழுமைக்கும் விதைப்பதை எனது பணியாக மேற்கொள்வேன். எனது தத்துவம் என்பதற்கு ‘திராவிட மாடல்’ என்று பெயர். ‘மாடல்’ என்பது ஆங்கிலச் சொல்தான். அதைத் தமிழில் சொல்வதாக இருந்தால் ‘திராவிடவியல் ஆட்சிமுறை’தான் எனது கோட்பாடு. அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சி தான் என்னுடைய கோட்பாட்டு நெறிமுறை ஆகும். கல்வியில் – வேலைவாய்ப்பில் – தொழில் வளர்ச்சியில் – சமூக மேம்பாட்டில் – இந்த நாடு ஒரு சேர வளர வேண்டும். அந்த வளர்ச்சி என்பது அனைத்து சமூகங்களையும் மேம்படுத்துவதாக அமைய வேண்டும்.
அனைத்து தேசிய இனங்களுக்கும் சரிநிகர் உரிமை தரப்பட வேண்டும் என்பதுதான் திராவிடவியல் கோட்பாடு. இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் ஆகும். அதைத்தான் அரசியல் அமைப்புச் சட்டமும் சொல்கிறது. அனைத்து மாநிலங்களும் அதிக அதிகாரம் கொண்ட சுயாட்சித் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். இந்த மாநிலங்களின் ஒன்றியமான இந்திய அரசானது கூட்டாட்சி முறைப்படி செயல்பட வேண்டும் என்பதுதான் திராவிடவியல் கோட்பாடு.
கூட்டாட்சித் தத்துவத்தின் நெறிமுறைகள் குறித்து சகோதரர் ராகுல்காந்தி அவர்கள் அதிகம் பேசத் தொடங்கி இருப்பதற்கு நான் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் கொண்ட வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும். அதற்கு அகில இந்தியக் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளும் – அனைத்து மாநிலக் கட்சிகளும் குரல் கொடுக்க வேண்டும். திராவிட இயக்கமும் திரையுலகமும் பிரிக்க முடியாதவை. அதேபோல் கோபாலபுரமும் கோடம்பாக்கமும் பிரிக்க முடியாதவை. தலைவர் தொடங்கி – இன்று உதயநிதி வரை அது தொடர்ந்து வருகிறது. இவ்வாறு அவர் உரையாற்றினார்.
முன்னதாக நூலை வெளியிட்டு உரையாற்றிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, “இளமையாக இருப்பது எப்படி என்பது பற்றி ஸ்டாலின் ஒரு புத்தகம் எழுத வேண்டும். ஸ்டாலினுக்கு 69 வயது என்றபோது என் தாயார் நம்பவே இல்லை, கூகுள் செய்து பார்த்தார். எப்படி இளமையாக இருக்கிறேன் என்று ஸ்டாலின் இன்னொரு புத்தகம் எழுத வேண்டும்.
ஒரு அருமையான புத்தகத்தை வழங்கிய என் அண்ணன் ஸ்டாலினுக்கு வாழ்த்துகள். தமிழ்நாட்டிற்கு வருவது எனக்கு எப்போது மகிழ்ச்சியான விஷயம் தான். நாடாளுமன்றத்தில் என்னை அறியாமல் பத்திரிகையாளர்களிடம் ‘நான் தமிழன்’ என்று கூறினேன். எனது ரத்தம் தமிழ் மண்ணில் கலந்திருக்கிறது, நான் தமிழன் என்று சொல்லி கொள்ள அனைத்து உரிமைகளும் எனக்கு உள்ளது. தமிழ்நாடு வருவது எனக்கு எப்போதும் எனக்கு மகிழ்ச்சி தரக்கூடியது; இதனை நான் மேலோட்டமாக சொல்லவில்லை, மனதின் அடி ஆழத்திலிருந்து சொல்கிறேன்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாழ்க்கை நீண்ட நெடிய போராட்டம் நிறைந்தது என்பதால் சுயசரிதை நூலை எழுதி உள்ளார்.பிரதமர் தமிழகம் வரும்போதெல்லாம் பொருள் புரியாமல் பேசுகிறார். எல்லா மாநிலங்களை பற்றியும் புரிந்து கொள்ளாத தன்மையில் தான் பிரதமர் மோடி இருக்கிறார். ஜம்மு காஷ்மீர் மக்கள் தங்களை தாங்களே ஆள முடியாத சூழல் உள்ளது. இந்திய எப்படி இருக்க வேண்டும் என தீர்மானிக்க நீங்கள் யார்? மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.
கற்பனையான உலகில் பாஜக வாழ வேண்டாம். அவர்களை எதிர்க்க எங்களுக்கு தெரியும். நீட் விலக்கு வேண்டுமென தமிழ்நாடு தொடர்ந்து கூறுவதை கேட்க மறுக்கிறீர்கள் என்றால் அவர்கள்மீது என்ன மதிப்பு வைத்துள்ளீர்கள் தமிழ்நாடு என்பது வெறும் இரண்டு வார்த்தைகள் அல்ல, 3 ஆயிரம் ஆண்டுகள் தொன்மையானது. தமிழ்நாட்டில் 3,000 ஆண்டுகளாக வேறு எந்த கொள்கைகளையும் திணிக்க முடியவில்லை” என்றார். இவ்வாறு ராகுல்காந்தி உரையாற்றினார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry