செஸ் வரியால், பெட்ரோல், டீசல் விலை உயருமா? என்ன சொல்கிறது மத்திய பட்ஜெட்?

0
16

பெட்ரோல், டீசல் விலை உச்சத்தை தொட்டு விட்ட நிலையில், அவற்றின் மீது கூடுதல் வரி போடப்படுவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்  பட்ஜெட் உரையில் அறிவித்தார். இதனால் பெட்ரோல், டீசல் விலை உயருமா என்பதை பார்க்கலாம்.

நிதிநிலை அறிக்கையை நேற்று தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன், “நாட்டில் விவசாய உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான கூடுதல் நிதிகளை வழங்குவதற்காக புதியவேளாண் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வரிகொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டில் வேளாண் உற்பத்தி அதிகரிக்கும். கட்டமைப்புகளை மேம்படுத்துவதன் வாயிலாக, விளைபொருட்களை பதப்படுத்த முடியும். இதன் மூலம் விவசாயிகளின் வருவாய் அதிகரிப்பதோடு, அவர்களின் வாழ்க்கைத் தரமும் மேம்படும்.

வேளாண் வரியானது ஒரே சீராக இருக்காது. வெவ்வேறு தயாரிப்புகளுக்கு மாறுபடும். பெட்ரோல், டீசல், கச்சா பாமாயில், கச்சா சோயாபீன் எண்ணெய், ஆல்கஹால், தங்கம், வெள்ளி, ஆப்பிள், பட்டாணி போன்ற பொருட்களுக்கு வேளாண் வரி விதிக்கப்படும். ஆல்கஹால் பானங்களுக்கு 100% செஸ் வசூலிக்கப்படும். சில பொருட்கள் மீது செஸ் வரி விதிக்கப்படும் அதே வேளையில், கூடுதல் வரி காரணமாக நுகர்வோர் பாதிக்கப்படால் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுஎன்றார்.

இதனால் பெட்ரோல், டீசல் விலை கணிசமாக உயரும் என்ற கருத்து பரவலாக முன்வைக்கப்பட்டது. திமுக தலைவர் மு.. ஸ்டாலின் உள்ளிட்டோர் கூட பட்ஜெட்டை முழுமையாக உள்வாங்காமல், விலை உயர்வுக்கு அரசு வழிவகுத்துள்ளதாக குற்றம்சாட்டியிருந்தனர். ஆனால், பெட்ரோல், டீசல் மீது செஸ் வரி விதித்த மத்திய அரசு, பெட்ரோல், டீசல் மீதான அடிப்படை கலால் வரி மற்றும் சிறப்பு கூடுதல் கலால் வரியை உடனடியாக குறைத்துள்ளது.

செஸ் விதிப்பால் ஏற்படும் விலை உயர்வை ஈடு செய்ய, பெட்ரோல் மீதான அடிப்படை கலால் வரி, லிட்டருக்கு ரூ.2.98-இல் இருந்து ரூ.1.40 காசுகளாகவும், டீசலுக்கு, ரூ.4.83-இல் இருந்து, ரூ. 1.80 காசுகளாகவும் மாற்றி அமைக்கப்படுகிறது. எனவே, வேளாண் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வரியால், பெட்ரோல், டீசல் விலை உயரும் என்று மக்கள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. செஸ் வரி விதிக்கப்பட்ட அளவுக்கு, அடிப்படை கலால் வரி குறைக்கப்பட்டுள்ளதால், பெட்ரோல், டீசல் விலையில் எப்போதும் போன்ற தினசரி மாற்றங்கள் மட்டுமே நடக்கும்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry