மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜி20 அமைப்பின் 18-வது உச்சி மாநாடு டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்று (சனிக்கிழமை) கோலாகலமாக தொடங்கியது. மாநாட்டில் கலந்து கொள்ள வந்துள்ள உலகத் தலைவர்களை பாரத் மண்டபத்தில் உள்ள சர்வதேச கண்காட்சி மண்டபத்தில் வைத்து பிரதமர் மோடி வரவேற்றார்.
உச்சி மாநாடு நடைபெறும் 2 நாளில், முதல் நாள் கூட்டமான இன்று, பிரதமர் மோடி தொடக்க உரையாற்றினார். அப்போது அவர் முன்னால் நாட்டினைக் குறிக்கும் வகையில் வைக்கப்பட்டுள்ள பெயர்ப் பலகையில் பாரத் என்று எழுதப்பட்டிருந்தது. தொடக்க உரையாற்றிய பிரதமர் மோடி, ”COVID தொற்றுநோயைத் தொடர்ந்து, உலகம் நம்பிக்கை பற்றாக்குறையின் புதிய சவாலை எதிர்கொண்டது. துரதிர்ஷ்டவசமாக, போர்கள் இதை மேலும் ஆழமாக்கியுள்ளன. இந்த நம்பிக்கை பற்றாக்குறையின் சவாலையும் நாம் வெல்ல முடியும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
மனித குலத்தின் மிகப்பெரிய ஆபத்தாக வந்த கொரோனா பெருந்தொற்றை நாம் இப்படித்தான் தோற்கடித்தோம். ஜி 20 தலைவர் என்ற முறையில், இந்த உலகளாவிய கூட்டமைப்பின் மூலம் பற்றாக்குறையை நம்பிக்கையை புதிய நம்பிக்கையாக மாற்ற இந்தியா என்ற நாடு முழு உலகையும் அழைக்கிறது.
அனைத்து மக்களுக்கும் உள்ளடங்கிய வளர்ச்சி என்பது தான் இந்தியாவின் கொள்கை. இதை உலக அளவில் எடுத்துச் செல்ல வேண்டும் என விரும்புகிறோம். இதே எண்ணத்தில் தான் ஆப்ரிக்க யூனியனுக்கு ஜி20 அமைப்பின் நிரந்தர உறுப்பினர் உரிமையை இந்தியா வழங்க முன்வந்தது. உங்கள் அனைவரின் ஒப்புதலுடன், ஆப்பிரிக்க ஒன்றியத்தின் தலைவரை G20 இன் நிரந்தர உறுப்பினராக இருக்க அழைக்கிறேன்.
மேலும், “உலகப் பொருளாதாரத்தின் எழுச்சி தொடங்கி உணவு மேலாண்மை முதல் எரிபொருள் மற்றும் உர மேலாண்மை பயங்கரவாதத்திலிருந்து இணையப் பாதுகாப்பு , ஆரோக்கியம் முதல் ஆற்றல் மற்றும் நீர் பாதுகாப்பு வரை அனைத்து சவால்களுக்கும், நாம் உறுதியான பாதையை நோக்கி நகர வேண்டும்.
கோடிக்கணக்கான இந்தியர்கள் இந்த மாநாட்டில் இணைந்தனர், நாட்டின் 60க்கும் மேற்பட்ட நகரங்களில் 200க்கும் மேற்பட்ட கூட்டங்கள் நடத்தப்பட்டன. இந்தியா இதனை மக்கள் மாநாடாகவே நடத்தியது. வளமான எதிர்காலத்திற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது” இவ்வாறு பிரதமர் பேசினார்.
சாமந்தி, செவ்வந்தி, என பல வண்ணப்பூக்கள் டெல்லியின் முக்கிய சாலைகளில் உள்ள மரங்களில் பொருத்தப்பட்டுள்ளன. ஜி 20 இலச்சினையும் மலர்களால் உருவாக்கப்பட்டு, முக்கிய இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. மாநாட்டு மைதானத்தில் இந்தியாவின் கலாசாரம், பாரம்பரியத்தை உலக நாடுகள் தெரிந்து கொள்ளும் வகையில் பல்வேறு மாநிலங்களின் கண்காட்சி அரங்கங்களும் திறக்கப் பட்டுள்ளன.
தமிழகத்தின் பல வகை கைத்தறித் துணி வகைகள், தொன்மையான பொருட்கள், மாமல்லபுரம் கற்சிற்பங்கள், கள்ளக்குறிச்சி மர வேலைப்பாட்டுப்பொருட்கள், நாச்சியார்கோவில் பித்தளை விளக்குகள், தஞ்சாவூர் பொம்மை மற்றும் மயிலாடி கல் பொருட்களும் இதில் இடம்பெற்றுள்ளன.
ஜி20 மாநாடு நடைபெறும் இடத்திற்கு முகப்பில் பிரம்மாண்ட நடராஜர் சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை சுவாமிமலையிலிருந்து டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டது. வண்ண விளக்குள், நீருற்றுகளால் கம்பீரமாக காட்சியளிக்கிறது. சுவாமிமலையைச் சேர்ந்த ஸ்தபதிகள் தே. ராதாகிருஷ்ணன், தேவ.ஸ்ரீகண்டன், தேவ.சுவாமிநாதன் உள்ளிட்டோர் இந்த சிலையை வடிவமைத்தனர்.
28 அடி உயரம் , 21 அடி அகலம், 18 டன் எடை கொண்டது. இந்த நடராஜர் சிலை. இது செம்பு, பித்தளை, இரும்பு, தங்கம், வெள்ளி, வெள்ளீயம், பாதரசம் ஆகிய 8 உலோகங்களை கொண்டு அஷ்டதாதுக்களால் அமைக்கப்பட்டது. இத்துடன் 7 டன் எடையில் நடராஜருக்கான பீடமும் தயாரிக்கப்பட்டது.
முன்னதாக, இந்தியா தலைமையேற்று நடத்திவரும் இரண்டு நாள் ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியின் முன்னால் இந்தியா என்பதற்குப் பதிலாக பாரத் என்ற பெயர்ப் பலகை வைக்கப்பட்டுள்ளது மீண்டும் தேசிய அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவுக்குப் பதிலாக அரசியலமைப்பில் பயன்படுத்தப்பட்டுள்ள பாரத் என்ற பெயரை ஜி 20 மாநாட்டின் பல்வேறு அதிகாரபூர்வ ஆவணங்களில் அரசு பயன்படுத்தியுள்ளது.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஜி 20 மாநாட்டு விருந்தினர்களுக்கு அளிக்கும் சிறப்பு விருந்திற்கான அழைப்பிதழில் பாரத்தின் குடியரசுத் தலைவர் என குறிப்பிடப்பட்டிருந்தது. அதேபோல இந்தோனேசியாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி பயணம் மேற்கொண்ட போதும் அதற்கான குறிப்பில் பாரத்தின் பிரதமர் என்று குறிப்பிடப்பட்டது.
இதனிடையே, ஜி20 நாடுகள் கூட்டமைப்பில் ஆப்பிரிக்க யூனியனை நிரந்த உறுப்பு நாடாக இணைக்கும் நடைமுறை நிறைவேறியது. இதற்கான தீர்மானத்தை பிரதமர் நரேந்திர மோடி மாநாட்டில் முன்மொழிய பின்னர் அது நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry