சனாதனத்தை HIV, தொழுநோயுடன் ஒப்பிட்டு மீண்டும் சர்ச்சைப் பேச்சு! உதயநிதியை காப்பாற்ற ஆ. ராசா-வை களமிறக்கிய திமுக!

0
117
DMK MP A. Raja compares Sanatana Dharma with HIV

நீலகிரி மாவட்ட திமுக வாக்குச்சாவடிகள் நிலை முகவர்கள் கூட்டம், உதகையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. நூற்றுக்கணக்கான முகவர்கள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் பேசிய நீலகிரி எம்.பியும், திமுக துணை பொதுச் செயலாளருமான ஆ.ராசா, “வரும் நாடாளுமன்ற தேர்தல் தேசத்தை காக்க வேண்டிய தேர்தலாகும். தேசத்தை பாதுகாக்கும் பொறுப்பு திமுக தலைவர் தோள் மீது உள்ளது. எனவே, அனைவரும் தேர்தல் பணியை சிறப்பாக செய்ய வேண்டும்.

பிறப்பால், சாதியால் யாரும் உயர்ந்தவர்களும் அல்ல; தாழ்ந்தவர்களும் அல்ல. மதத்தின் பெயராலும், சாதியின் பெயராலும் நாட்டு மக்களைப் பிளவுப்படுத்துவோரை எதிர்க்கும் ஒரே சக்தியாக திமுக இருக்கிறது. உதயநிதி ஸ்டாலின் கட்சியின் இளைஞர் அணி செயலாளராகவும், அமைச்சராகவும் பொறுப்பேற்றபோது ஏற்பட்ட மகிழ்ச்சியை விட டெங்கு, மலேரியா போன்ற நச்சுக் கிருமிகளுடன் சனாதனத்தை ஒப்பிட்டு, இதை ஒழிக்க வேண்டும் என தெரிவித்த கருத்தைக் கேட்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன்.

Also Read : காந்தி பெரிய தலைவரானதற்கு பணம்தான் காரணம்! மீண்டும் சர்ச்சையைக் கிளப்பிய ஆ. ராசா! Hate Speech Of Andimuthu Raja!

இந்தச் சிந்தனை போதும், இன்னும் நூற்றாண்டுகளைக் கடந்தும் இந்த இயக்கமும், தத்துவமும் தழைக்கும். உண்மையில், சொல்லப்போனால் சனாதனம் என்பது கொடிய எய்ட்ஸ் நோயை உருவாக்கும் எச்.ஐ.வி வைரஸைப் போன்றது. பாரபட்சமின்றி ஒழித்துக்கட்ட வேண்டும்” என்று பேசினார்.

முன்னதாக, சென்னையில் வள்ளுவர் கோட்டத்தில் மத்திய அரசின் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய ஆ.ராசா, “அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சு இன்று இந்தியா முழுவதும் விவாதப்பொருள் ஆகியுள்ளது. அந்த விவாதப் பொருளுக்கு விடை சொல்லும் நிகழ்ச்சியாகவும் இது அமைந்திருக்கிறது. ஏனென்றால் சனாதனமும், விஸ்வகர்மா யோஜனாவும் வெவ்வேறு அல்ல.

எனக்கு என்ன விந்தையாக இருக்கிறதென்றால், உதயநிதி ஸ்டாலின் மென்மையாகத்தான் சொன்னார். சனாதனத்தை மலேரியா, டெங்கு போல ஒழிக்க வேண்டும் என்று பேசினார். மலேரியாவையும், டெங்குவையும் சமூகம் அருவருப்பாகப் பார்க்காது. அருவருப்பாகப் பார்க்கும்படி சனாதனத்தைச் சொல்லவேண்டும் என்றால், ஒருகாலத்தில் தொழுநோய் இருந்தது. பிறகு எச்.ஐ.வி இருந்தது. சனாதனம் என்பதை தொழுநோயைப் போல, எச்.ஐ.வியைப் போல, சமூக அவலம் நிறைந்த நோயாகத்தான் பார்க்க வேண்டும்.” இவ்வாறு ஆ. ராசா பேசியுள்ளார்.

Also Read : பாஜகவுக்கு பலம் சேர்க்கும் உதயநிதியின் ‘சனாதன’ கருத்து! I.N.D.I. கூட்டணியில் தனிமைப்படுத்தப்பட்ட திமுக!

இது குறித்து பேசும் அரசியல் ஆர்வலர்கள், “அரசமைப்புச் சட்டத்தின் மீது உறுதியேற்று அமைச்சராக இருக்கும் உதயநிதி, இந்து மதத்தை பொதுவெளியில் விமர்சித்திருப்பது, நாடு முழுவதும் பேசுபொருளாகவும், சர்ச்சையாகவும் மாறி இருக்கிறது. வட மாநிலங்களில் அவருக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த விவகாரத்தில் I.N.D.I. கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிவசேனா உள்ளிட்ட முக்கியக் கட்சிகள் திமுகவை கைவிட்டுவிட்டன. பாஜக இந்த விவகாரத்தை கையிலெடுத்து தேசிய அளவில் அரசியலாக்கி வருகிறது.

எனவே உதயநிதி விவகாரத்தை திசை திருப்ப, மறக்கடிக்க, வழக்கம்போல ஆ. ராசாவை திமுக பலிகடா ஆக்குகிறது. உதயநிதி பேசியதை மறக்கச் செய்யும் விதமாக சனாதனம் குறித்து ஆ.ராசாவை உரத்த குரலில் விமர்சிக்கச் சொல்லி இருப்பார்கள் எனத் தெரிகிறது. அவரும் அதற்கேற்றவாறு, தொழுநோய், ஹெச்.ஐ.வி. எனப் பேசி வருகிறார். ஆ.ராசாவைத் தவிர திமுகவில் உள்ள முக்கியத் தலைவர்கள் வேறு யாரேனும் இதுபோன்று பேசுகிறார்களா? என்பதைக் கவனித்தால் உண்மை புரியும்.

உதயநிதி, ஆ. ராசா ஆகியோரின் பேச்சு பாஜகவுக்கு புதுத்தெம்பைக் கொடுத்துள்ளது. I.N.D.I. கூட்டணி இந்துக்களுக்கு எதிராகவே உள்ளது, இந்து மதத்தை, சனாதன தர்மத்தை தரம் தாழ்ந்து கொச்சைப் படுத்துகிறது என்று ஆந்திரா, கர்நாடகா போன்ற தென் மாநிலங்களிலும், வட மாநிலங்களிலும் பாஜக பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துள்ளது. எனவே I.N.D.I. கூட்டணியில் உள்ள திமுக தலைவர்களின் செயல்பாடு, வரும் மக்களவைத் தேர்தலில் இந்துக்களின் வாக்குகளை பாஜகவுக்கு சாதகமாக ஒருங்கிணைக்கவே உதவும். தமிழ்நாட்டிலே கூட வாக்கு சதவிகிதம் உயர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.” என்று கூறுகிறார்கள்.

Also Read : பாகுபாடு இருக்கும் வரை இட ஒதுக்கீடு தொடர வேண்டும்! ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் கருத்து!

சனாதன தர்மத்தை தொழுநோய், எச்.ஐ.வி.,யுடன் ஒப்பிட்டு பேசிய ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கறிஞர் வினீத் ஜிண்டல் என்பவர் டெல்லி போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், ‘சனாதன தர்மத்தை பின்பற்றுபவன் என்ற அடிப்படையில் ஆ. ராசாவின் பேச்சால் மனம் புண்பட்டுவிட்டது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆ. ராசாவின் சர்ச்சைக் கருத்துக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கருத்துப் பதிவிட்டுள்ள மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான தர்மேந்திர பிரதான், “பெயர் மாறுவதால் ஒன்றின் நோக்கமும் குணமும் மாறாது. சனாதன தர்மம் பற்றிய மூர்க்கத்தனமான கருத்துகளை ஆ.ராசா வெளிப்படுத்தி இருக்கிறார். இண்டியா கூட்டணியின் மூளை மழுங்கிப்போய் இருப்பதையும், அந்தக் கூட்டணிக்கு இந்து மதத்தின் மீது ஆழமான வெறுப்பு இருப்பதையும் ஆ.ராசாவின் பேச்சு காட்டுகிறது.

இந்தியாவின் ஆன்மாவை, உணர்ச்சியை, வேர்களை காங்கிரஸ் கட்சியும் அவர்களது கூட்டணியினரும் எவ்வாறு களங்கப்படுத்துகிறார்கள் என்பதை நாடு கவனித்துக் கொண்டிருக்கிறது. இந்த வெறுப்புணர்ச்சியாளர்களுக்கு, ‘சனாதனம் நித்தியம், சனாதனமே உண்மை’ என்பதை நினைவூட்டுவோம்” என்று தெரிவித்துள்ளார்.

“சனாதன தர்மத்தை அவர்கள் இழிவுபடுத்தி உள்ளார்கள். ராகுல் காந்தி எங்கே தூங்கிக் கொண்டு இருக்கிறார்? அவரை எழுப்ப வேண்டும். திமுகவின் இந்த கருத்தை நீங்கள் ஏற்கிறீர்களா? இது சட்டத்தையும் அரசியல் சாசனத்தையும் மீறிய செயல் இல்லையா? இது வெறுப்புப் பேச்சு இல்லையா? இதற்காக அவர்கள் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டாமா? இந்துஸ்தான் இருக்கும் வரை சனாதன தர்மம் இருக்கும் என்பதை நான் அவர்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்” என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry