பாஜகவுக்கு பலம் சேர்க்கும் உதயநிதியின் ‘சனாதன’ கருத்து! I.N.D.I. கூட்டணியில் தனிமைப்படுத்தப்பட்ட திமுக!

0
85
Udhayanidhi Stalin's remark on Sanatana dharma has divided the Opposition I.N.D.I.A bloc.

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சரான உதயநிதி, டெங்கு, மலேரியா மற்றும் கொரோனாவைப் போல, சனாதன தர்மமும் ஒழிக்கப்பட வேண்டியது எனக் கூறி இருந்தார். இந்து மதம் குறித்த அவரது கருத்து வட மாநிலங்களில் கடும் கண்டனங்களையும், விமர்சனங்களையும் ஏற்படுத்தி வருகிறது.

இதுதொடர்பாக டெல்லியில் காவல்நிலையம் ஒன்றில் அளிக்கப்பட்ட புகார் மீது இன்னும் வழக்குகள் பதிவாகவில்லை. பிஹாரின் முசாபர்பூர் மாவட்ட நீதிமன்றத்தில், மூத்த வழக்கறிஞர் சுதிர் ஓஜா என்பவர் உதயநிதி மீது வழக்கு தொடுக்க மனு அளித்துள்ளார். இந்த மனுவின் விசாரணை வரும் 14ந் தேதி நடைபெற உள்ளது.

சனாதன தர்மம் குறித்த வெறுப்புப் பிரச்சாரத்தை மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின் மீது தாமாக முன்வந்து வழக்குப் பதிய வேண்டும் என முன்னாள் அதிகாரிகள், நீதிபதிகள் மற்றும் இராணுவ வீரர்கள் உட்பட 262 பிரபலங்கள் அடங்கிய குழு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளது.

Also Read : ‘One Nation, One Election’க்குத் தயாராகும் பாஜக! சாதக, பாதகங்கள் என்னென்ன? முழுமையான அலசல்!

அதில், உதயநிதியின் பேச்சு, மதநல்லிணக்கத்தை குலைப்பதுடன், மத வன்முறையை தூண்டுவதாக உள்ளது. இதுபோன்ற வெறுப்புப் பேச்சுகள் குறித்து உச்சநீதிமன்றம் சமீபத்தில் கவலை தெரிவித்தது. சனாதான தர்மத்தின் முக்கியத்துவத்தை மாண்பமை நீதியரசர் அறிந்திருக்கிறார், அதைக் குறைத்து மதிப்பிட முடியாது. உதயநிதி ஸ்டாலின் தனது பேச்சில் வெறுப்பை மட்டும் வெளிப்படுவில்லை, மன்னிப்புக் கேட்க மறுத்து தன்னை நியாயப்படுத்திக் கொண்டுள்ளார்.

உதயநிதியின் “வெறுக்கத்தக்க பேச்சு” இந்திய அரசியலமைப்பின் அடிப்படை மதிப்புகளை குலைப்பதாக உள்ளது. முதலமைச்சரின் மகனும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது, சட்டத்தின் ஆட்சியை குறைத்து மதிப்பிடுவதாகவே இருக்கிறது.

புகார்தாரருக்காகக் காத்திருக்காமல், வெறுப்புப் பேச்சுக் குற்றங்களுக்கு எதிராக மாநில அரசுகள் தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி தமிழக அரசின் நடவடிக்கைகள் அமையவில்லை. தமிழக அரசு “சட்டத்தின் ஆட்சியை மிகவும் குறைவாக மதிப்பிட்டுள்ளது அல்லது கேலிக்கூத்தாக்கியுள்ளது. எனவே, சட்டத்தின் பொறுப்பை உறுதி செய்யும் வகையில், உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து அவமதிப்பு வழக்கை முன்னெடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Also Read : பொது சிவில் சட்டம், ‘ஒரே நாடு – ஒரே தேர்தல்’ மசோதா! பாஜகவின் பலே அரசியல் கணக்கு! பரபரக்கும் டெல்லி!

இந்த நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் “சனாதன தர்மம்” குறித்த சர்ச்சை கருத்துகளுக்காக பாரதிய ஜனதா கட்சி கண்டனம் தெரிவித்துள்ளதுடன், இதை தேசியப் பிரச்சனையாகவும் மாற்றியுள்ளது. ராகுல் காந்தியின் நிலைப்பாடு குறித்து பாஜக கேள்வி எழுப்பிய நிலையில், இந்த விவகாரத்தில் I.N.D.I. கூட்டணி கட்சிகள் (Indian National Developmental Inclusive Alliance) பிளவுபட்டுள்ளன.

Sanatana Dharma Row: How Udhayanidhi Stalin’s Remark Reflects On ‘INDIA’ Bloc

எதிர்க்கட்சியான I.N.D.I. கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா (யுபிடி) மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் உதயநிதி ஸ்டாலினின் ‘சனாதன தர்மம்’ பற்றிய கருத்தை ஏற்க மறுப்பதுடன், கண்டனமும் தெரிவித்துள்ளன.

திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜி, யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் தெரிவித்துள்ள கருத்தில், மக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பேச வேண்டாம் என்றும், தான் சனாதன தர்மத்தை மதிக்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ”தமிழக மக்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. அவர்களுக்கு எனது பணிவான வேண்டுகோள் என்னவென்றால், ஒவ்வொரு மதத்திற்கும் தனித்தனி உணர்வுகள் உள்ளன. இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு, இது ஒரு ஜனநாயக நாடு. அதே நேரத்தில், வேற்றுமையில் ஒற்றுமை என்பது நமது தோற்றம். எனவே, நான் சனாதன் தர்மத்தை மதிக்கிறேன். நாங்கள் கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் என எல்லா இடங்களுக்கும் செல்கிறோம். எந்த ஒரு பிரிவினரையும் புண்படுத்தும் எந்த விஷயத்திலும் நாங்கள் ஈடுபடுவது கிடையாது.

Also Read : சாராயத்துக்குக் குறைவில்லாத இணைய போதை! மாணவர்கள், இளைஞர்களை அச்சுறுத்தும் ‘இன்டெர்நெட் அடிக்‌ஷன் டிஸார்டர்’! What Is Internet Addiction Disorder?

‘கண்டனம்’ என்று கூறுவதற்கு பதிலாக, அனைவருக்கும் எனது பணிவான வேண்டுகோள் என்னவென்றால், பெரிய பிரிவினரையோ அல்லது சிறிய பிரிவினரையோ புண்படுத்தும் எந்த கருத்தையும் நாம் தெரிவிக்கக்கூடாது. வேற்றுமையில் ஒற்றுமையை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.” என்று கூறியுள்ளார்.

அதேநேரம், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் குணால் கோஷ், “அனைத்து மதங்களையும் நாம் மதிக்க வேண்டும். சனாதனம் குறித்து யார் கூறியிருந்தாலும் நாங்கள் கண்டனம் தெரிவிக்கிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பிரச்னை குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், ‘சமதர்ம சமுதாயம் என்பதே காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு. ஒவ்வொரு கட்சிக்கும் கருத்து சொல்ல உரிமை உண்டு’ என்று மழுப்பலாகக் கூறியிருக்கிறார்.

ஆனால், காங்கிரஸைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரான கரண் சிங், சனாதன தர்மத்தை பல கோடி மக்கள் பின்பற்றுகிறார்கள், உதயநிதியின் கருத்தை ஏற்க முடியாது என்று தெரிவித்துள்ளார். மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான கமல்நாத், உதயநிதியின் கருத்தை ஏற்க இயலாது என்று குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சத்தீஸ்கர் துணை முதல்வர் டி.எஸ்.சிங்தேயோ, “சனாதன தர்மம் என்பது ஒரு நிறுவப்பட்ட வாழ்க்கை முறை மற்றும் ஒரு மத வெளிப்பாடு. அது முழுமையாக மதிக்கப்பட வேண்டும்.” என்கிறார்.

காங்கிரஸ் தலைவரில் ஒருவரான ஆச்சார்யா பிரமோத் கூறும்போது, “இந்துக்களை அவமதிக்க தலைவர்களிடையே போட்டி உள்ளது. 1000 ஆண்டுகளாக ‘சனாதன தர்மத்தை’ அழிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதை யாராலும் அழிக்க முடியவில்லை” என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ரஷீத் ஆல்வி, “இந்த நாடு அனைத்து மதங்களையும் மதிப்பதாக அறியப்படுகிறது, நமது அரசியலமைப்பு மதச்சார்பற்றது, ஏனெனில் பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் நம் நாட்டில் இருப்பதால் நாடு ஒற்றுமையாக இருக்க வேண்டும், ஆனால் கடந்த 9 ஆண்டுகளில் பாஜக, மதத்தை அரசியலாக்கியதே இதுபோன்ற கருத்துகளுக்கு காரணம். உதயநிதி பேசியது தவறு, ஆனால் மதத்தை அரசியலாக்குவதற்கு பாஜக தலைவர்கள்தான் காரணம்” என்கிறார்.

Also Read : ஆளும்கட்சிப் பிரமுகர்களால் சட்டம் ஒழுங்கு சீர்கேடு! பொம்மை முதல்வரின் திறமையின்மையால் தமிழகம் தலைகுனிவு!

படையெடுப்பாளர்களால் சனாதனிகள் நீண்ட காலமாக தாக்குதல்களை எதிர்கொண்டுள்ளனர். சனாதன தர்மத்திற்கு எதிராக இழிவான கருத்துகளை கூறும் எவரும், அது எதைக் குறிக்கிறது என்பதை அறியாதவர் என சிவசேனா(உத்தவ் தாக்கரே) கட்சியைச் சேர்ந்த பிரியங்கா திரிவேதி கூறியுள்ளார்.

ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த சஞ்சய் சிங் கூறும்போது, “இந்தியாவில் பல்வேறு மதங்கள், சாதிகள், மொழிகள் உள்ளன. அனைவரும் ஒன்றாக வாழ்வதுதான் அழகு. உதயநிதியின் பேச்சைப் பொறுத்தவரையில், இந்தியாவில் எல்லா மதத்தையும் மதிக்க வேண்டும், பிறர் மதத்தைப் பற்றி யாரும் கருத்து சொல்லக் கூடாது” என்று குறிப்பிட்டுள்ளார்.

Also Read : Chennai Air Pollution! சென்னையில் எகிறும் காற்று மாசு! தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட ஆய்வில் பகீர் தகவல்!

டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், ஒருவரது மதத்தை ஒருவர் மதிக்க வேண்டும், ஒருவர் மதத்தை பற்றி தவறாக பேசுவது சரியல்ல என, உதயநிதி ஸ்டாலினின் ‘சனாதன தர்மம்’ கருத்து பற்றி கூறியுள்ளார்.

I.N.D.I. கூட்டணியில் இருக்கும் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம் போன்ற கட்சிகளும் திமுகவின் சனாதனக் கருத்தில் இருந்து விலகியே இருக்கின்றன. ”சர்ச்சைக்குரிய மற்றும் துரதிர்ஷ்டவசமான” தனது கருத்துக்கு உதயநிதி ஸ்டாலின் மன்னிப்புக் கேட்க வேண்டுமென அந்த இரு கட்சிகளும் அறிவுறுத்தியுள்ளன.

2024ஆம் ஆண்டில், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் சட்ப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த விவகாரத்தைக் பலமாகக் கையிலெடுத்திருக்கும் பா.ஜ.க., ‘I.N.D.I. கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் தி.மு.க-வைச் சேர்ந்த உதயநிதி’ என்கிற ரீதியில் கொண்டுபோகிறது.

வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு, I.N.D.I. கூட்டணியின் முக்கியக் கட்சியான திமுகவே, ‘சனாதனம்’ என்ற அரசியல் ஆயுதத்தை எடுத்து கொடுத்திருப்பதாகவே தெரிகிறது. தமிழ்நாடு போன்ற சில தென் மாநிலங்களில் உதயநிதியின் கருத்து பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்பதால், I.N.D.I. கூட்டணி இந்துக்களுக்கு எதிரானது என வட மாநிலங்களில் பாஜக அழுத்தமாகப் பிரச்சாரம் செய்ய உதயநிதியின் சனாதனக் கருத்து உதவுகிறது. இந்தியாவில் சனாதன தர்மத்தை பின்பற்றும் 80% மக்களை ஒழிப்பதற்கு உதயநிதி அழைப்பு விடுப்பதாக பாஜக பிரச்சாரத்தை முன்னெடுக்கிறது.

2021 சட்டப்பேரவைத் தேர்தலின்போது மு.க. ஸ்டாலினும், உதயநிதியும் கையில் வேல் ஏந்தியதை மறந்துவிட்டார்களா? என வினவும் அரசியல் நோக்கர்கள், 9 ஆண்டுகளுக்கும் மேலாக பாஜக மத்தியில் ஆட்சியில் இருக்கும் நிலையில், தேசிய அரசியலின் தன்மை புரியாத ஒருவர் எழுதிக்கொடுத்ததை உதயநிதி ஸ்டாலின், கம்யூனிஸ்ட் கட்சியின் தமுஎகச மாநாட்டில் படித்துள்ளார். அதே மாநாட்டில் அவருக்கு முன்பாகப் பேசிய திராவிடர் கழகத் தலைவர் வீரமணி, சனாதன தர்மமும், இந்து மதமும் ஒன்றே என்று தெளிவாகக் கூறினார். அப்படியிருக்கும்போது, சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டுமென உதயநிதி பேசியது இந்து மதத்தை அழிக்க வேண்டும் அல்லது இந்துக்களை அழிக்க வேண்டும் என்றுதானே பொருள்படும். உதயநிதி அரசியலில் இன்னமும் பக்குவப்பட வேண்டும் என்பதையே அவரது நடவடிக்கைகளை காட்டுகின்றன என்று கூறுகின்றனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry