இட்லி மாவு இல்லாத சமயத்தில், கோதுமை மாவைக் கொண்டு செய்யக்கூடிய இட்லியைப் பற்றி தெரிந்துகொள்வோம். இந்த கோதுமை இட்லி செய்வதற்கு சுலபமாகவும், சற்று வித்தியாசமாகவும் இருக்கும். இதை காலை உணவின் போதோ அல்லது இரவு உணவின் போதோ செய்யலாம். இந்த கோதுமை இட்லிக்கு தேங்காய் சட்னி, தக்காளி சட்னி சரியான சைடு டிஷ்ஷாக இருக்கும்.
கோதுமை இட்லி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதை செய்து பார்த்து சுவைத்து எப்படி இருந்தது என்று பதிவிடுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கோதுமை மாவு – 2 கப்
* எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
* கடலைப் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
* உளுத்தம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு – 1 டீஸ்பூன்
* சீரகம் – 1/2 டீஸ்பூன்
* இஞ்சி – 1 சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை – சிறிது (பொடியாக நறுக்கியது)
* கேரட் – 1 (துருவியது)
* கொத்தமல்லி – சிறிது (பொடியாக நறுக்கியது)
* உப்பு – 1/2 டீஸ்பூன்
* அதிக புளிப்பில்லாத தயிர் – 1/2 கப்
* தண்ணீர் – 1 1/2 கப்
* சமையல் சோடா – 1/4 டீஸ்பூன்
* எண்ணெய் – சிறிது.
செய்முறை:
* வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 கப் கோதுமை மாவை சேர்த்து, மாவு லேசாக நிறம் மாறி நல்ல மணம் வரும் வரை வறுக்கவும். பின் அதை இறக்கி ஒரு பாத்திரத்தில் மாற்றி ஆற வைக்க வேண்டும்.
* அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடலைப் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும். பிறகு கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அடுத்து பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும். பிறகு துருவிய கேரட்டை சேர்த்து அதிகம் வதக்காமல் ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கிக் குளிர வைக்கவும். இதையடுத்து வறுத்து வைத்துள்ள கோதுமை மாவை எடுத்து, அதில் 1/2 டீஸ்பூன் உப்பு, தயிர் சேர்த்து, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி, இட்லி மாவு பதத்திற்கு கட்டிகளின்றி, கையால் கிளறி விட வேண்டும்.
* அதன் பின்னர் சிறிது சமையல் சோடாவையும் சேர்த்து கிளறவும். பின்னர் வதக்கி வைத்துள்ள பொருட்களை அதனுடன் சேர்த்து நன்கு கிளறிவிட வேண்டும். பிறகு ஒரு இட்லி பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, நீரை கொதிக்க வைக்க வேண்டும்.
* பின்னர் இட்லி தட்டை எடுத்து, அதன் குழிகளில் லேசாக எண்ணெய் தடவி, கலந்து வைத்துள்ள மாவை ஊற்றி, இட்லி பாத்திரத்தினுள் வைத்து, 10 நிமிடம் வேக வைத்து எடுத்தால், சுவையான கோதுமை இட்லி தயார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry