ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபத் யசோ நாயக் தலைமையிலான அமைச்சர்கள் குழு, எம்.பி.பி.எஸ். படிப்புக்கான கால அளவை குறைக்கும் பரிந்துரையை மத்திய அரசுக்கு அளித்துள்ளது.
அமைச்சர்கள் குழுவில், ஜிதேந்திர சிங், அஷ்வினி குமார் சவுபே, ரத்தன் லால் கட்டாரியா, தேபஸ்ரீ சவுத்ரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்தக் குழுவானது, எம்.பி.பி.எஸ். படிப்பை (இன்டர்ன்ஷிப் சேர்த்து) 4.5 வருடமாக குறைக்கலாம் என பரிந்துரைத்துள்ளது.
54 மாத எம்.பி.பி.எஸ். படிப்பை, இந்திய மருத்துவ கவுன்சில் ஏற்கனவே 50 மாதங்களாக குறைத்துள்ள நிலையில், இவ்வாறு பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. 2 ஆண்டுகள் கிராமங்களில் பணிபுரிந்தால்தான் பட்டம் வழங்க வேண்டும் என்ற முக்கிய பரிந்துரையும் அதில் இடம்பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல், மருத்துவப் படிப்பை எவ்வாறு நெறிப்படுத்தலாம் என்பதற்கான மூன்று மாதிரிகளையும் அமைச்சர்கள் குழு எடுத்துரைத்துள்ளது.
முதல்மாதிரி
நான்கு ஆண்டுகள் படிப்பும், 6 மாதம் இன்டர்ன்ஷிப் பயிற்சியும் பெற வேண்டும். இதன்படி, முதல் ஆண்டில் அனாடமி, பிசியாலஜி, பயோ கெமிஸ்டிரி பாடங்கள் இடம்பெறும். அடுத்த ஒன்றரை ஆண்டுகள் medicine, surgery, pediatrics and anesthesiology ஆகிய சிறப்புப் பிரிவுகளை படிக்க வேண்டும். கடைசி ஒன்றரை ஆண்டுகள், மாணவர்கள் ஏற்கனவே தேர்ந்தெடுத்த OBG, surgery, pediatrics, internal medicine உள்ளிட்ட சிறப்புப் படிப்புகளை படிக்க வேண்டும்.
இரண்டாவது மாதிரி
எம்.பி.பி.எஸ். முடித்தவுடன், மாணவர்கள் காலவிரயம் செய்யாமல், தங்களது விருப்பம் மற்றும் NEXT (National Exit Exam as already proposed by the government) தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில், speciality and superspeciality பிரிவில் முதுகலை பட்டப்படிப்பில் சேரலாம். இது மெரிட்டில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு மட்டும் பொருந்தும்.
மூன்றாவது மாதிரி
இதற்கு ஆரம்பநிலை நுழைவுத் தேர்வே போதுமானது. எம்.பி.பி.எஸ். உடன் சேர்த்து M.D. அல்லது M.S. முதுகலையும் படிக்க முடியும். ஒருங்கிணைந்த இந்தப் பட்டப்படிப்புக்கான காலம் ஆறு ஆண்டுகள். 4-வது ஆண்டில், முதுகலை சிறப்புப் பாடப்பிரிவை தேர்வு செய்ய வேண்டும். இதில் இன்டர்ன்ஷிப் கிடையாது. தேவையான கிளினிக்கல் அனுபவத்துடன், குறிப்பிட்ட சிறப்புப் பிரிவில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவராக வெளியே வர முடியும்.
கிராமப் பகுதிகளில் கட்டாயப் பணி
கிராமப்பகுதிகளில் இரண்டாண்டு கட்டாயமாக பணி செய்தால் மட்டுமே எம்.பி.பி.எஸ். பட்டம் வழங்கவேண்டும் என்பதை கட்டாயமாக்குமாறும், அமைச்சர்கள் குழு பரிந்துரைத்துள்ளது. கிராமப்பகுதிகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை இருக்கும் நிலையில், வசதிக் குறைவால் மருத்துவர்கள் நகர்ப்புறங்களில் பணியாற்றுவதையே விரும்புவதாகக் கூறும் அமைச்சர்கள் குழு, ஏற்கனவே இருக்கும் விதியானது, மருத்துவக் கல்வியை முடித்தபிறகு, கிராமங்களில் பணியாற்றுவதை கட்டாயமாக்கவில்லை என்று தெரிவித்துள்ளது.
அரசு மருத்துவக்கல்லூரிகளில் இளங்கலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்பை முடிப்பவர்கூட, அதிக ஊதியத்துக்காக தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றுவதையே விரும்புவதாக அமைச்சர்கள் குழு கருத்து தெரிவித்துள்ளது. இதைச் சரிசெய்ய, எம்.பி.பி.எஸ். அல்லது ஒருங்கிணைந்த MD/MS முடித்த ஒருவர் மருத்துவராக பதிவு செய்ய, கிராமப் பகுதிகளில் கட்டாயமாக 2 ஆண்டுகள் பணியாற்றயிருக்க வேண்டும் என்பதையும் அந்தகுழு வரையறுக்கிறது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry