கோவிட்-19லிருந்து மீண்ட ‘Gopi’-யின் அனுபவம்! அசத்தலான சிகிச்சை அளிக்கும் அரசு மருத்துவமனை! தைரியமே முதல் மருந்து!

0
22

கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்ட அனுபவத்தை பகிர்வதே இந்த பதிவு. இதன் மூலம், வாசகர்களாகிய உங்களுக்கு கோவிட்-19 மீதான அச்சம் நீங்குவதுடன், அரசு மருத்துவமனைகள் மீதான நம்பிக்கை அதிகமாகும்.

கடந்த 27-ந் தேதி இரவு 9.30 மணி, உடல் வலி ஆரம்பிக்கிறது. 10 மணிக்கு காய்ச்சல் ஆரம்பம். உடனடியாக தனி அறைக்கு வந்தாயிற்று. தொடக்கமே அமர்க்களமாக இருந்தது. ஒரு மணி நேரத்தில் 100 டிகிரியை தொட்ட காய்ச்சல், மெல்ல 102ஐ எட்டியது. இரவு ஒரு மணியிருக்கும், தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டேன்.

காய்ச்சலைத் தவிர கோவிட்-19 அறிகுறி எதுவுமே இல்லாததால், ஊசி, கொரோனாவுக்கு கொடுக்கும் ஆன்ட்டிபயாடிக், பாராசிடமால் மாத்திரைகளுன் வீட்டுக்கு அனுப்பிவைத்தனர். ஆனாலும், என் மீதான பற்றுதலால், 27-ந் தேதி இரவு தொடங்கி, 28-ந் தேதி இரவு வரை, கடுமையான உடல் வலியுடன், 100-102 டிகிரி வரை காய்ச்சல் இருந்தது. பிறகு என் பால்ய சிநேகிதன் டாக்டர் சக்திவேலை, என் அண்ணன் தொடர்பு கொண்டார். அவர்(ன்) வேறு ஆன்டிபயாடிக் மாத்திரை பரிந்துரைத்தார்(ன்). அதை சாப்பிட்ட பிறகுதான் காய்ச்சல் முடிவுக்கு வந்தது

இதற்கிடையே, 28-ந் தேதி மதியத்திற்கு மேல், தொண்டையில் லேசான மாற்றம் தெரிந்தது. சந்தேகம் வந்ததால், கோவிட்-19, டைபாய்டு, மலேரியா போன்ற டெஸ்டுகளுக்கு தனியார் ஆய்வகத்தில் ரத்தம் கொடுத்தேன். ஆதார் கார்டு ஜெராக்ஸ் எடுத்துக்கொண்டார்கள். மறுநாள், 29-ந் தேதி இரவு 9.15 மணி அளவில் கோவிட்-19 தொற்று உறுதியானது. அந்த செய்தியை கேட்ட நொடி, ஒருவித கலக்கம் ஏற்பட்டது, அது இல்லை என்றுசொன்னால் பொய். கோவிட்-19 பற்றி நிறைய எழுதி, படித்த அனுபவம் இருந்ததால், இதுவும் கடந்துபோகும் என்ற திடமான நம்பிக்கையுடன், அடுத்த கட்டம் பற்றி குடும்பத்தினர் யோசித்தோம்.

உடனடியாக எங்கள் குடும்ப ஆஸ்தான சித்த மருத்துவர் பத்மபிரியாவுக்கு அழைப்பு. டாக்டர் கொரோனா பாஸிடிவ் என்றேன், எனது மன நிலையை மாற்றும் விதமாக, சத்தமான சிரிப்புடன், எங்கபோய் வாங்கிட்டு வந்தீங்க, அதெல்லாம் ஒன்னுமில்லை, உங்களுக்கு தெரியாதா! உங்களுக்கு நீரிழிவும் இருக்கு, அதனால் கவர்மென்ட் ஹாஸ்பிடல் போறதே நல்லது என்றார். அவர் பேசியது எனக்கு மட்டுமல்ல, என் குடும்பத்துக்கே தைரியம் கொடுத்தது. சென்னையில், கிண்டியில் உள்ள கிங்ஸ் இன்ஸ்டிடியூட்டில் அட்மிட் ஆவது என முடிவானது.

அம்மா கண்களில் கண்ணீர். அவரை தைரியடுத்தி படுக்க வைத்தாயிற்று. 30-ந் தேதி காலை ரெடியாகிக் கொண்டிருந்தபோது, சென்னை மாநகராட்சியில் இருந்து அழைப்பு. ஒரு சகோதரி பேசினார். சார்…, உங்களுக்கு கோவிட் பாஸிடிவ், என்ன செய்யப்போறீங்க…! ஹோம் குவாரன்டைனா இல்ல, ஓமாந்தூரார் ஆஸ்பிடல் போறீங்களா…! ரொம்ப மைல்டாதான் இருக்கு, வசதி இருந்தா வீட்டிலயே இருக்கலாம்!  இல்லம்மா, வீட்டில வயதான அம்மா இருக்காங்க, அதனால கிண்டி கிங்ஸ் இன்ஸ்டிடியூட்டில் அட்மிட் ஆக கிளம்பிட்டிருக்கேன் என்று பதில் சொன்னேன்.

15 நிமிஷம் வெயிட் பண்ணுங்க, லெட்டர் கொண்டு வந்து தரேன் என்று சொன்ன அந்த சகோதரி, அதேபோல், அட்மிஷனுக்கான லெட்டருடன் 10-வது நிமிடமே வந்தார்.  10 நாட்களுக்குத் தேவையான துணிகள், தலையணை, போர்வை, தினசரி எடுத்துக்கொள்ளும் மாத்திரைகள், பழங்கள், பிஸ்கட்டுகள் எடுத்துக்கொண்டு கிளம்பியாயிற்று. தேரோட்டியாக பெரிய (அண்ணன்)மகன், வளர்க்கும் தந்தையான அண்ணன் சகிதம் கிங்ஸ் இன்ஸ்டிடியூட்டுக்கு 10 மணிக்கு சென்றேன்.

ஆதார் எண் தொடங்கி அனைத்து தகவல்களும் பெறப்பட்டது. உடனடியாக இசிஜி, சி.டி.ஸ்கேன், கோவிட் ப்ரொஃபைல் ரத்த மாதிரி டெஸ்டுகள் எடுக்கப்பட்டன. சில நல்ல உள்ளங்களின் பரிந்துரையால் 10.30 மணிக்கு தரை தளத்தில், தனி அறை கிடைத்தது. நண்பர் சிவாஇளஞ்செழியன் பரிசளித்த பரமஹம்ஸ் யோகானந்தரின்ஒரு யோகியின் சுயசரிதம்புத்தகத்தை எடுத்துச் சென்றிருந்தேன். அதை படிக்கத் தொடங்கினேன். மகா அவதார் பாபாஜியே உடனிருப்பது போன்றதொரு உணர்வு.

11.45 மணிக்கு ஹாஸ்பிடல் ஊழியர் ரூமுக்கு வந்து 12 மணிக்கு யோகா இருக்கு, செகண்ட் ஃப்ளோர் வந்துடுங்க என்றார். அங்கு ஸ்டிரீம் பிடிப்பதற்கான வசதி இருந்தது. அதைமுடித்தவுடன் சுமார் ஒரு மணி நேரம், யோகா மற்றும் மூச்சுப்பயிற்சி. மிக மிக பயனுள்ள பயிற்சியாக இருந்தது. அதேபோன்று இரண்டாவது தளத்தில் உள்ள நூலகமும் புத்தக பிரியர்களுக்கு வரப்பிரசாதம்.

மூன்றுநாள் தரைதளத்தில் இருந்தேன். அதுவரை பரமஹம்ச யோகானந்தர்தான் கம்பெனி. பின்னர் மூன்றாவது மாடிக்கு மாற்றப்பட்டேன். அங்கும் தனி அறைதான். ஒருவாரம் அங்குதான் இருந்தேன். தினந்தோறும் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் நாராயணசாமி தொடங்கி, டுயூட்டி டாக்டர் வரை ரவுண்ட்ஸ் வருவார்கள். மருத்துவர்களையும், செவிலியர்களையும், தூய்மைப்பணியாளர்களையும் நான் கடவுளுக்கு நிகராவே பார்த்தேனே. சாதாரணமாக சில மணி நேரம் தொடர்ந்து மாஸ்க் அணிவதே எனக்கு சிரமமாக உள்ளது. ஆனால், அவர்கள் உடல் முழுவதையும் மறைக்கும் வகையில் பிபிஇ கிட், மாஸ்க், கண்ணாடி, ஃபேஸ் ஷீல்ட் அணிந்துகொண்டு குறைந்தது எட்டுமணி நேரம் பணியாற்றுகிறார்கள்.

ஹாஸ்பிடலில் தினமும் இருவேளையும் உடலில் ஆக்சிஜன் அளவு பரிசோதிக்கப்பட்டது. நீரிழிவு இருந்ததால், தினமும் காலையில் வெறும் வயிற்றில் சுகர் டெஸ்ட் செய்யப்பட்டது. தொற்று வீரியம் சற்று அதிகமாக இருப்பவர்களுக்கு, கையில் நரம்பு மூலமாக ஆன்டிபயாடிக் மருந்து செலுத்தப்படுகிறது. சர்க்கரை அளவு அதிகம் இருந்தால், இன்சுலின் செலுத்துகிறார்கள்.

தினந்தோறும் காலை மட்டும் சாப்பாட்டுக்குப் பின் எடுத்துக்கொள்ளும் வகையில், அசித்ரோமைஸின் மாத்திரை (5 நாள் மட்டும்) மற்றும் விட்டமின் மாத்திரைகள் கொடுத்தார்கள். சத்தான உணவுதான் பிரதான மருந்தாக இருந்தது. இரு வகையாக காலை டிபன், பிற்பகலுக்கு முழுமையான சாப்பாடு, இரவு ஒரு சுண்டலுடன் இரு வகையான டிபன்.

மூன்று வேளை உணவுக்கு இடையே, இரண்டு முறை(காலை, இரவு)பால், இஞ்சிஎலுமிச்சை கஷாயம், கபசுர குடிநீர், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான ஒருவித கஷாயம்(Immuno Booster), முட்டை, பொட்டுக்கடலை, கறுப்பு மூக்கு கடலை சுண்டல், சூப், பழ ஜுஸ் அல்லது வெள்ளரிக்காய் இவை அனைத்தும் உண்டு.

யோகா, மூச்சுப்பயிற்சி, சத்தான உணவுகள் என, என்னை உடலளலில் தெம்பாகவே வைத்திருந்தார்கள். அம்மா, அண்ணா, மன்னி, வருங்கால அதிகாரி ஹரிஹர் எங்கள் வீட்டு டாக்டர் அவிநாஷ் ஆகியோரை பிரிந்திருகிறோமே, அம்மா கவலையோடு இருப்பாரே என்ற மனக் கவலையை மறக்கச் செய்ய, அருமையான உறவு கிடைத்தது. மென்பொறியாளர் தமிழ்வாணன், பிரபல கார்தொழிற்சாலை மேலாளர் ராமலிங்கம், மாநகர போக்குவரத்துக்கழக கிளை மேலாளர் ராம்குமார், தலைமைக் காவலர் வினோத் என, சில நாட்களே பழகினாலும், வெள்ளந்தியான அன்பை வெளிப்படுத்தி தம்பிகளாக என் மனதில் நிறைந்துவிட்டனர்.

ஹாஸ்பிடலில் காலாற நடப்போம், வட்டமேசை மாநாடு போடுவோம், பெரும்பாலும் எங்கள் பேச்சு கோவிட் பற்றியதாக இருக்காது. கிரிக்கெட், மாரத்தான், உள்ளூர் அரசியல், உலக அரசியல், அவரவர்கள் வேலைத் தன்மை, என எங்கள் விவாதம் பரந்துபட்டு இருக்கும். ஆதலால், நாங்கள் எங்களை நோயாளிகளாகவே கருதவில்லை. இதுவே ஒரு மிகப்பெரிய மருந்துதான்.

இதற்கிடையே, நண்பன் ராஜேஷ்பாபு(கோவிட் அனுபவசாலி)ஃபோன் செய்வான். டேய் என்ன, அங்கேயே செட்டில் ஆகறமாதிரியா, சீக்கிரமா வந்து வெப்சைட் வேலைய பாரு, நீ ஒன்னும் நோயாளி இல்லை என்று இயல்பாக தைரியம் சொல்வான். அடுத்து நண்பன் சிவசுப்ரமணியன். அவனுக்கே உரித்தான இயல்புடன், எப்படிடா இருக்க, உடம்ப பாத்துக்கோ, அம்மா, அண்ணா, மன்னி, பசங்ககிட்ட பேசினியா, ஒன்னும் கவலைப்படாத, ஆண்டவன் இருக்கான் என தைரியமூட்டுவான். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க டிப்சும் கொடுப்பான். ஆன்மிகம் பற்றி அளவளாவுவான்.

அதேபோல, மெகா டிவி எம்.டி. திருமதி ஜெயந்தி தங்கபாலு, அவ்வப்போது வாஞ்சையுடன் உடல் நலன் பற்றி விசாரிப்பார். மருத்துவ மற்றும் இதர செலவுக்கென பெருந்தொகையை கொடுத்து உதவினார். உறவினர்கள் செல்லி அக்கா, கிருபா, யோகேஷ், சவும்யா, அகிலா பாலாஜி, சதீஷ் ராமநாதன், ஆற்காடு சிக்கந்தர், கடலூர் பாஷா, புதுக்கோட்டையார் கணேசன், நண்பர் அறிவழகன், நடிகரும், இயக்குநருமான அண்ணன் ஈ. ராம்தாஸ், அலுவலக நண்பர்கள் ரஷீத், சிவாஇளஞ்செழியன், சாந்தாராம், கண்ணன், நாதன், தம்பி பரத் மற்றும் வி.எம். சுப்பையா, அருண்ராஜ், தம்பி மணிகண்டன்  மற்றும் பலர் அவ்வப்போது பேசி தைரியமூட்டுவார்கள்.

இப்படி 30-ந் தேதி முதல் நேற்று(8-ந் தேதி) வீடு திரும்பும் வரை பத்து நாட்கள் இனிதாகவே இருந்தது. சிகிச்சைக்காக ஒரு ரூபாய் கூட செலவு செய்யவில்லை”. தொற்று பாதிக்கப்பட்டதை நேற்றுதான் முகநூலில் பதிவிட்டேன். நண்பர்கள் பலரும் விரைவில் நலம்பெற வேண்டி பிரார்த்தித்துள்ளனர். அவர்களுக்கு என் நன்றி. கோவிட்-19 தீர்க்க முடியாத நோய் அல்ல. சந்தேகம் தென்பட்டால் உடனடியாக பரிசோதனை செய்து சிகிச்சை எடுத்துக்கொண்டால், அதிலிருந்து மீள்வது வெகு எளிது. கோவிட்-19 பொறுத்தவரை தைரியம்தான் முதல் மருந்து. அரசு மருத்துவமனையை நம்பிச் செல்லுங்கள், நலமோடு திரும்பலாம்.

கட்டுரையாளர்:- கி. கோபிநாத்

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry