தமிழகத்துடன், புதுச்சேரியை இணைக்க விரும்புகிறாரா நாராயணசாமி? மக்கள் மத்தியில் பீதி!

0
8

துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, புதுச்சேரியை தமிழகத்துடன் இணைக்க முயற்சிக்கிறார் என்று முதலமைச்சர் நாராயணசாமி தொடர்ந்து கூறிவருகிறார். ஒரு மாநில முதலமைச்சரே இதுபோன்ற குற்றச்சாட்டு கூறுவதை சாதாரணமாக கடந்து போய்விட முடியாது.

சட்டமன்றத்துடன் கூடிய ஒரு யூனியன் பிரதேசத்தை, ஒரு மாநிலத்துடன் இணைப்பது சாதாரண காரியமா? மிகப்பெரிதான, மக்கள் உணர்வோடு பிணைந்ததொரு விஷயத்தை, ஒரு முதலமைச்சரே எப்படி போகிறபோக்கில் கூறுகிறார்? இது சரியா? என்பது பற்றி புதுச்சேரி மாநில அரசியல் தலைவர்கள் சிலரிடம் வேல்ஸ் மீடியாக சார்பாக பேசினோம்.

என். ஆர். காங்கிரஸ் தலைவர் என். ரங்கசாமியிடம் கேட்டபோது, “ஆட்சியை திறம்பட நடத்த முடியாமல், நாராயணசாமி மோசமான ஆட்சியை கொடுத்துக்கொண்டிருக்கிறார், யார் மீதாவது குற்றம்சுமத்துவதையே வேலையாகக் கொண்டிருக்கிறார்என சுருக்கமாக முடித்துக்கொண்டார்.

சட்டமன்ற அதிமுக குழு தலைவர் அன்பழகனிடம் பேசினோம். “புதுச்சேரியை தமிழகத்துடன் இணைக்க ஆளுநர் முயற்சிக்கிறார் என முதலமைச்சர் நாராயணசாமி கூறுவது, அவரது தேர்தல் தோல்வி பயத்தையே காட்டுகிறது. தான் முதலமைச்சர் என்பதையே மறந்து மக்கள் மனதில், குழப்பம், அச்சம் மற்றும் பீதியை ஏற்படுத்த அவர் முயற்சிக்கிறார். பிரிவினைவாத எண்ணத்தை உருவாக்குகிறார்.

மத்திய அரசு அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் மீது தேச விரோத வழக்கு பதிவுசெய்ய வேண்டும். எந்த ஆதாரமும் இல்லாமல் அவர் பேசுகிறார். திட்டமிட்டு குழப்பத்தை ஏற்படுத்துகிறார். மத்திய அரசு, புதுச்சேரி அரசை கலைக்க வேண்டும். மக்கள் மத்தியில் வீணாண குழப்பத்தை ஏற்படுத்தி, பிரிவினை எண்ணத்தை தூண்டும், காங்கிரஸ் கட்சியின், புதுச்சேரி பிரிவின் அங்கீகாரத்தை ரத்து செய்யுமாறு, தேர்தல் ஆணையத்திடம் கடிதம் கொடுக்க உள்ளோம்என அன்பழகன் கூறினார்.

புதுச்சேரி மாநில பாஜக துணைத்தலைவர் ரவிச்சந்திரனிடம் பேசியபோது, “முதலமைச்சர் பொய்யைத் தவிர வேறு எதையுமே சொல்வதில்லை. தனது இயலாமையை மறைக்க, ஆளுநரை குற்றம்சாட்டுகிறார். இவரது ஆட்சியில் சற்றேறக்குறைய 8 மில்கள் மூடப்பட்டுவிட்டன. ஆட்சியில் ஊழல் நிறைந்துள்ளது, சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது, பல் இடங்களில் குடிநீர் பிரச்சனை இருக்கிறது, தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதி எதையுமே நிறைவேற்றவில்லை. இதையெல்லாம் மறைக்கவே, முதலமைச்சர் இவ்வாறு பேசுகிறார்என்றார்.

என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகரான வீரா என்கிற வீராசாமியிடம் கேட்டபோது, “மற்றவர்களை குறை கூறாமல், மத்திய அமைச்சராக இருந்தபோது புதுச்சேரி நாராயணசாமி என்ன செய்தார் என சொல்லட்டும்? மத்தியிலும், மாநிலத்திலும் அவர்களது ஆட்சி இருந்தபோது, மாநிலத்தின் கடன்களை தள்ளுபடி செய்திருக்கலாமே? சுயநலவாதியான அவருக்கு மக்கள் கஷ்டத்தைப் பற்றி எதுவும் தெரியாது, ஆளுமைத்திறன் அல்லாதவர். மாநில இணைப்பு என்ற சாத்தியமில்லாத ஒன்றைக்கூறி இயலாமையை திசை திருப்புகிறார். மேல்மட்ட அரசியல் செய்யும் அவர், மாநில நலனை அடகுவைத்து, மக்களையும்,  சொந்த கட்சியினரையும் நாராயணசாமி ஒடுக்கிறார்என்று குறை கூறினார்.

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, கேரளா வசம் சென்ற தேவிகுளம், பீர்மேடு, சித்தூர், நெய்யாற்றங்கரை போன்ற தமிழர்கள் அதிகம் வசிக்கும் ஊர்களை தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்பது இன்னமும் கோரிக்கை அளவிலேயே உள்ளது. சில ஊர்களுக்கே இப்படி என்றால், தனது ஆளுகையில் உள்ள புதுச்சேரியை, தமிழகத்துடன் இணைக்க முயற்சி நடப்பதாக முதலமைச்சர் நாராயணசாமி ஏன் கூறுகிறார்? அதிமுக அன்பழகன் கேட்பது போல ஆதாரத்தை வெளியிட வேண்டாமா? என மக்கள் கேட்கிறார்கள்.  அதேநேரம் அரசியலுக்காக முதலமைச்சர் இப்படியானதொரு விஷயத்தை விதைத்திருந்தால், அது வருந்தத்தக்கதே.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry