உ.பி.யைத் தொடர்ந்து குஜராத் கல்வி மாடல்! இதுதான் திராவிட மாடல் ஆட்சியா? அமைச்சருக்கு ஆசிரியர்கள் கேள்வி?

0
1775

திராவிட மாடல் அரசு ஆட்சி பொறுப்பேற்று மே 7ம் தேதியுடன் ஓராண்டு நிறைவடைகிறது. ஆனால் உத்தரப்பிரதேச கல்வி நிர்வாக அமைப்பு தமிழ்நாட்டிலிருந்து இன்னமும் ரத்து செய்யப்படவில்லையே? என தமிழக ஆசிரியர் கூட்டணி கேள்வி எழுப்பி இருக்கிறது.

தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவரும், ஐபெட்டோ அகில இந்திய செயலாளருமான வா. அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “மே 7-ஆம் தேதி, முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெறுகிறது. வரவேற்று மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறோம்.

வா. அண்ணாமலை

அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்றும், மே 7 ஆம் தேதியுடன் ஓராண்டு ஆகப்போகிறது. ஆனால் கல்வியமைச்சராக பொறுப்பேற்று 12 மாதங்கள் ஆகியும், ஆசிரியர் சங்கங்கள் அளித்த கோரிக்கைகளில் ஏதாவது ஒன்றுக்காக அவர் தீர்வு கண்டு இருக்கிறாரா?, கல்வி அமைச்சர் தான் இதற்குப் பதில் சொல்லவேண்டும்.

நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம், நல்ல மனது அவரிடம் இருப்பதை நாங்கள் உணர்கிறோம். ஆனால் செய்ய முடியவில்லையே…? பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் நினைத்தது எதையும் செய்ய முடியாத நிலையில் இருக்கிறார் என்பதை உணர முடிகிறது. அதிகாரம் முழுவதும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் கரங்களில் உள்ளது. பள்ளிக் கல்வித்துறைக்கு சுமார் 37 ஆயிரம் கோடி நிதியை ஒதுக்கி விட்டு, பள்ளிக்கல்வித்துறையை கல்வியமைச்சர் கட்டுப்பாட்டில் இல்லாமல் வைத்திருப்பது வேதனை அளிக்கிறது.

உத்திரப்பிரதேச மாநிலக்காரர்கள் தமிழ்நாட்டை எண்ணி மகிழ்ச்சி அடைய வேண்டிய ஒரு செயல் உள்ளது. என்ன தெரியுமா?, யோகி அரசின் உத்தரப்பிரதேச கல்வி நிர்வாக அமைப்பு அடிபிறழாமல் அப்படியே தமிழ்நாட்டில் 4 ஆண்டுகளாக தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு வருகிறது. இது அவர்களுக்கு தெரிய வில்லை போலும். திராவிட மாடல் அரசு தமிழ்நாட்டில் பொறுப்பேற்று 12 மாதங்கள் நிறைவு செய்யப் போகிறது. இன்னமும் உத்தரப்பிரதேச கல்வி நிர்வாக அமைப்பு அரசாணைகள்: 101,108ஐ ரத்து செய்ய முடியவில்லையே?

உத்தரப்பிரதேச அரசுக்கு ரசிகர்களாகிக் கொண்டிருக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், அடுத்து குஜராத் மாடல் கல்வி அமைப்பை அமல்படுத்த உள்ளார்கள். என்ன செய்யப்போகிறார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்? அரசாணை 101,108 ஆகியவை உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும் என தொடர்ந்து ஓராண்டு காலமாக எதிரொலித்துக் கொண்டு வருவதைக் கேளாமல், அமைச்சர் பாராமுகமாக இருப்பது ஏன்?

சட்டப்பேரவையில் முதலமைச்சர் அவர்களின் குரல் ஆசிரியர் சமுதாயத்தைப் பற்றி எதிரொலிக்கும் என்று காத்துக் கொண்டிருக்கிறோம். ஐ.ஏ.எஸ் .அதிகாரிகள், ஆசிரியர்களை எவ்வளவு சித்திரவதை செய்து தாக்குதல் நடத்தினாலும், அவற்றை எல்லாம் தாங்குகிற சக்தி நமது ஆசிரியர் சமுதாயத்திற்கு உண்டு என்று இன்னமும் நமது அரசு நகர்ந்து கொண்டிருப்பதை வேதனை உணர்வுடன் எத்தனை நாள் தான் பொறுத்துக் கொள்ள முடியும்?” இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry