அரசு பொறியியல் கல்லூரிகளில் ஜெர்மன், பிரெஞ்சு, ஜப்பானிய மொழி வகுப்பு! 10 கல்லூரிகளை தேர்வு செய்தது DOTE!

0
91

அரசு பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு ஜெர்மன், பிரெஞ்சு மற்றும் ஜப்பானிய மொழிகளை வரும் கல்வி ஆண்டிலிருந்து கற்பிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்துடன்(TNSDC) இணைந்து, அரசு நடத்தும் பொறியியல் கல்லூரிகளில் முறையான உள்கட்டமைப்பை உருவாக்கி, பிறமொழி வகுப்புகளை நடத்த தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் (DOTE) முடிவு செய்துள்ளது.

ஐந்து வெளிநாட்டு மொழிகளில் பயிற்சி அளிப்பதே அரசின் திட்டமாக இருக்கிறது. எனினும் முதல் கட்டமாக ஜெர்மன், பிரஞ்சு, ஜப்பானிய மொழிகள் மட்டும் கற்பிக்கப்படும் எனவும், ரஷியன் மற்றும் மாண்டரின் ஆகியவை பின்னர் கற்பிப்பது என்றும் தமிழக அரசு தீர்மானித்துள்ளது. சோதனை முயற்சியாக 10 அரசு பொறியியல் கல்லூரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

கோயம்புத்தூர், சேலம், திருநெல்வேலி, காரைக்குடி, போடிநாயக்கனூர், தருமபுரி, பர்கூர், திருச்சி, செங்கிப்பட்டி (தஞ்சாவூர்) மற்றும் வேலூர் ஆகிய இடங்களில் இருந்து தலா ஒரு கல்லூரி தேர்வு செய்யப்பட்டு, அங்கு வெளிநாட்டு மொழிப் பயிற்சி மையங்கள் நிறுவப்பட உள்ளன. இரண்டாம் கட்டமாக அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வெளிநாட்டு மொழி பயிற்சி அளிக்கப்படும்.

வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வாய்ப்புகளை கருத்தில் கொண்டே வெளிநாட்டு மொழிகளை கற்பிப்பது என முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தொழில்நுட்பக் கல்வி இயக்குநரக அதிகாரிகள் கூறுகின்றனர். பயிற்சி அளிக்கும் நிறுவனத்தை TNSDC நிர்வாக இயக்குனர், TNSDC மற்றும் DOTE அதிகாரிகளைக் கொண்ட குழு தீர்மானிக்க உள்ளது.

இறுதி ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கு ஆன்லைன், ஆஃப்லைன் மற்றும் தேவைகளைப் பொறுத்து வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. சர்வதேச தரத்திற்கு இணையாக, பாடத்திட்டம் அனைவருக்கும் பொதுவானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

சர்வதேசச் சந்தையில் வேலைவாய்ப்புகளைப் பெற வெளிநாட்டு மொழிகளைக் கற்றுக்கொள்வதன் முக்கியத்துவம் குறித்து மாணவர்களிடையே DOTE விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளது. வெளிநாட்டு மொழி வகுப்புகள் மாணவர்களின் பொறியியல் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்காது, ஆனால் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு கற்பிக்கப்படுவதாக இருக்கும்.

With Inputs from DT Next

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry