தமிழ்நாட்டில் நிலத்தடி நீர்மட்டம்! ஒரே ஆண்டில் இப்படி மாறிவிட்டதா? தமிழக அரசு விளக்கம்!

0
107

தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்குவதற்கான மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்காக, 4 நாட்கள் தொடர் விடுமுறைக்குப் பின்னர் சட்டப்பேரவை மீண்டும் கூடியது. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. துறையின் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பதிலளித்தார். பின்னர் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பு வெளியிடப்பட்டது.

அதில், “மாநில அளவிலான வறட்சி கண்காணிப்பு மையம், இந்திய வானிலை ஆய்வு மையம், தேசிய தொலையுணர்வு மையம், தேசிய பயிர் நிலவரங்கள் முன்கணிப்பு மையம், மாநில நீர்வள ஆதார மையம், வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை ஆகியவற்றின் உள்ளீடுகளை பெற்று மாநில அளவில் வறட்சி நிலையை மாநில மற்றும் மாவட்ட அளவிலான வறட்சி கண்காணிப்பு மையம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காலத்தில் முறையே 17 சதவீதம் மற்றும் 59 சதவீதம் கூடுதலாக மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது. மாநில நீர்வளத் துறையின் நிலத்தடி நீர்மட்ட ஆய்வுகளின்படி, பிப்ரவரி 2021-ல் இருந்த நீர்மட்டத்துடன் ஒப்பிடும்போது, கடந்த பிப்ரவரி 2022ல் 26 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் 0.24 முதல் 4.59 மீட்டர் வரை அதிகரித்துள்ளது.

இதர 12 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் 0.12 முதல் 0.47 மீட்டர் குறைந்துள்ளது. மாவட்ட அளவிலான வறட்சி கண்காணிப்பு மையமானது மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஓர் அங்கமாக செயல்படும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் உருவாக்கப்பட்டுள்ளது. இம்மையமானது மாவட்ட ஆட்சியரைத் தலைவராக கொண்டு அவரது கட்டுப்பாட்டில் செயல்படுகிறது” என்று அந்த கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry