ஹெல்மெட் விவகாரத்தில் கிரண்பேடியின் செயல்பாடு அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. போக்குவரத்து செயலாளர் அனுப்பியிருக்கும் சுற்றறிக்கை, அரசு ஊழியர்களை மனப்புழுக்கத்தில் ஆழ்த்தி இருக்கிறது. இது கண்டிப்பாக தேர்தலில் எதிரொலிக்கும்.
புதுச்சேரியில், சரியில்லாத தலைமையால் பாஜக திண்டாடும் நிலையில், மோடி மீதான ஈர்ப்பால் கிடைக்கும் வாக்குகளை சிதறடித்துவருகிறார் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி. ஹெல்மெட் விவகாரத்தில் இவர் காட்டிய அதிரடியால், அதிர்ந்துபோனது வாகன ஓட்டிகள் மட்டுமல்ல, பாரதிய ஜனதா கட்சியும்தான்.
Also Read : ஹெல்மெட் விவகாரத்தில் பாஜக மீது மக்கள் கடும் அதிருப்தி! தீட்டிய மரத்தில் கூர்பாயும் கிரண்பேடி!
கட்டாய ஹெல்மெட்டுக்கு ஆளுநர் உத்தரவிட்ட நிலையில், மத்திய அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்று முதலமைச்சர் நாராயணசாமி செயல்படுகிறார் என புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநாதன் கூறினார். இவரேதான் வாகன ஓட்டிகளிடம் அபராதம் விதிக்க வேண்டாம் என ஆளுநரை சந்தித்து கடிதம் அளித்தார். ஆயிரம் ரூபாய் அபராதம், ஓட்டுநர் உரிமம் பறிப்பு பற்றி ஆளுநர் சொல்லியிருக்கிறாரா? இல்லையா?, உத்தரவு பிறப்பித்தது நாராயணசாமியா? கிரண்பேடியா? என்பதை இந்த வீடியோவைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
தேர்தல் நேரத்து தலைவலியை தீர்க்கும்விதமாக, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வரை அபராதம் போடுவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டார். இந்த விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம் போடுகிறது என்ற குற்றச்சாட்டையும் அவர் கூறினார். முதலமைச்சரின் இந்த உத்தரவு சட்டவிரோதம் என கிரண்பேடி விமர்சித்துள்ள நிலையில், போக்குவரத்துச் செயலாளர் அசோக்குமார் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், அரசு ஊழியர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். ஊழியர்கள் ஹெல்மெட் அணிந்து வருகிறார்களா? இல்லையா? என்பதை சம்பந்தப்பட்ட அலுவலகத்தின் அதிகாரி தினமும் கண்காணிக்க வேண்டும். இதற்காக ஒரு பதிவேடு தயார் செய்து, ஊழியரின் பெயர், அவர் என்ன பொறுப்பில் இருக்கிறார்?, அலுவலகத்திற்கு காரில் வந்தாரா, இரண்டு சக்கர வாகனத்தில் வந்தாரா? இரண்டு சக்கர வாகனம் எனில் ஹெல்மெட் அணிந்து வந்தாரா? என்பதை குறிப்பிட்டு கையொப்பம் வாங்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இதுபற்றி அரசு அதிகாரி ஒருவரிடம் பேசியபோது, “தலைக்கவசம் உயிர்க்கவசம் என்பதை நாங்கள் மறுக்கவில்லை. ஹெல்மெட் அணிவது, அந்த நபருக்கு மட்டுமின்றி, அவரது குடும்பத்திற்கும் நல்லதுதான். ஆனால், ஆளுநர் கிரண்பேடி அதை நடைமுறைப்படுத்தும் விதமும், அதற்கு மாநில பாஜக ஆதரவு தெரிவிப்பதும் முகம் சுளிக்க வைக்கிறது.
வருகைப்பதிவேடு போன்று, ஹெல்மெட் பதிவேட்டை பராமரிப்பதுதான் எங்கள் வேலையா? இதுபோன்ற விசித்திரமான பதிவேடுகளை கண்காணிக்க உத்தரவிடுவதன் மூலம், ஆளுநர் எங்களை அடிமையாக நினைப்பதாகவே கருதுகிறோம். இதில் காட்டும் அக்கறையை, பழுதான சாலைகளை செப்பனிடுவதில் காட்டலாமே? மக்கள் நலனில் அக்கறை இருந்தால், அபராதம் விதிப்பதற்கு பதிலாமாக, போர்க்கால அடிப்படையில் சாலைகளை செப்பனிடலாம்.
அரசு சார் நிறுவனங்களில் ஊழியர்களுக்கு ஊதியப் பிரச்சனை இருக்கிறது. அவர்களிடம் கெடுபிடி காட்டினால், அவர்கள் என்ன செய்வார்கள்? விபத்தைக் குறைக்க வேண்டும் என்ற நோக்கில் கிரண்பேடி செயல்படுகிறாரா? அல்லது அரசுக்கு கெட்ட பெயர் ஏற்பட வேண்டும் என செயல்படுகிறாரா? என்பது எங்களுக்குத் தெரியாது. ஆனால், இவரது செயல்பாட்டால், வரும் தேர்தலில் பாஜக–வுக்கு எங்கள் மூலமாகவும் பின்னடைவு ஏற்படும் என்பது மட்டும் உறுதி” என்று கூறினார். ஹெல்மெட் பதிவேடு விவகாரத்தில் முதலமைச்சர் என்ன செய்யப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு அரசு ஊழியர்கள் மத்தியில் மேலோங்கி உள்ளது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry