கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய ரூ.12,110 கோடி கடன் தள்ளுபடி! முதலமைச்சர் அறிவிப்புக்கு விவசாயிகள் வரவேற்பு!

0
9

கூட்டுறவு வங்கிகளில் 16.43 லட்சம் விவசாயிகள் பெற்ற ரூ.12,110 கோடி கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இதனை விவசாயிகள் வரவேற்றுள்ளனர்.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று முதல்அமைச்சர் பழனிசாமி 110-வது விதியின் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் தற்போது கொரோனா, புரெவி மற்றும் நிவர் புயல்கள், ஜனவரி மாத மழை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு 12,110 கோடி கூட்டுறவுக் கடன் தள்ளுபடி செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிவிப்பில், “2019-20ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்றின் காரணமாக உலக நாடுகள் பலவும் பெரும் பாதிப்புக்கு உள்ளாயின. தமிழ்நாட்டிலும் இதன் தாக்கம் இருந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியது. இந்நிலையில், விவசாயமும் பாதிப்புக்குள்ளானதுடன், தொடர்ந்து ஏற்பட்ட நிவர், புரெவி போன்ற புயல்களும், அதைத் தொடர்ந்து, சென்ற மாதம் பருவம் தவறிப் பெய்த கடும் மழையும், பெருத்த பயிர்ச்சேதத்தை ஏற்படுத்தியதால், கடன் பெற்று பயிர் சாகுபடி செய்த விவசாயிகள் பெரும் அல்லலுக்கு உள்ளாகினர்.

இந்தப் பேரிடர், அறுவடைகளுக்குத் தயாராக இருந்த நெல், கரும்பு, வாழை, தோட்டப் பயிர்களை மட்டுமல்லாது, மானாவாரி பயிர்களையும் பெருமளவில் சேதப்படுத்தியது. வேளாண் பெருமக்களின் நலனில் என்றும் அக்கறை கொண்டுள்ள எனது தலைமையிலான அரசு, மத்திய அரசின் நிதி விடுவிப்பையும் எதிர்பாராமல், சாகுபடி செய்த பயிர்களுக்கான இடுபொருள் உதவித்தொகை 1,717 கோடி ரூபாயை 16.43 லட்சம் விவசாயிகளுக்கு உடனடியாக வழங்க உத்தரவிட்டு, அந்தத் தொகையையும் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

இந்த இடுபொருள் உதவித்தொகையானது, விவசாயிகளின் துயரைத் துடைத்தாலும், அவர்கள் மீண்டும் பயிர்த்தொழிலைத் தொடர உதவ வேண்டும் என்று அரசு எண்ணியது. மேலும், விவசாயிகள், பல்வேறு விவசாய சங்கங்கள், சாகுபடி பயிர்களுக்கு ஏற்பட்டுள்ள பெருத்த சேதத்தைக் கருத்தில் கொண்டு, நிலுவையில் உள்ள பயிர்க்கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர்.

கீழே விழுந்தவர்களை மேலே தூக்கிவிட்டால் மட்டும் போதாது, அவர்கள் மேலும் வலுப்பெற உதவி செய்திட வேண்டும் என்ற உயரிய சிந்தனையில், எனது தலைமையிலான அரசு செயல்பட்டு வருகின்றது. எனவே, தற்போதுள்ள சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு, 31.1.2021 அன்றைய நிலவரப்படி, கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற 16.43 லட்சம் விவசாயிகளின் கடன் நிலுவைத் தொகையான 12,110 கோடி ரூபாயையும் தள்ளுபடி செய்யப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

அதிகமாக நேசிப்பவனே அதிகமாக உதவி செய்பவன்‘. நானும் ஒரு விவசாயி; விவசாயிகளை அதிகமாக நேசிப்பவன்; வேளாண் பெருங்குடி மக்களின் இன்னலைத் தீர்ப்பதே எனது முதல் கடமை என்னும் நிலையில் இருந்து எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கையினால், பயிர்க்கடன் நிலுவை வைத்துள்ள 16.13 லட்சம் வேளாண் பெருமக்களும் எந்தவிதமான சிரமமும் இன்றி, வரும் ஆண்டில் பயிர் சாகுபடியைத் தொடர வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அரசு தற்போது பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ததோடு மட்டுமல்லாமல் அரசாணையையும் வெளியிட்டு, அதற்கான நிதி ஆதாரத்தையும் வருகின்ற நிதிநிலை அறிக்கையிலேயே ஏற்படுத்த உள்ளது. இந்த அறிவிப்பு உடனடியாக செயல்படுத்தப்படும்.” இவ்வாறு முதலமைச்சர் பழனிசாமி கூறினார். இந்த அறிவிப்பை விவசாயிகள் வரவேற்றுள்ளனர். முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry