நாகை – இலங்கை இடையே அதிவேக பயணிகள் படகு சேவை! பயண நேரம், கட்டணம்… முழு விவரம்! India Resumes Ferry Service with Sri Lanka!

0
100
India Resumes Ferry Service with Sri Lanka After Four Decades; PM Hails 'new Chapter' in Ties.

40 வருடங்களுக்குப் பிறகு இந்தியா-இலங்கை இடையிலான அதிவேக பயணிகள் படகு சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. இருநாட்டு வர்த்தகம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக, நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு அதிவேக படகு போக்குவரத்து சேவை தொடங்க ஒப்பந்தமானது.

அதன்படி, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே ஆகியோர் இரு நாடுகளுக்கும் இடையிலான அதிவேக படகு சேவையை காணொளி காட்சி மூலம் தொடங்கிவைத்தனர். நாகையில் நடைபெற்ற விழாவில், கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் சர்பானந்தா சோனாவால், தமிழ்நாடு சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆகியோர் கொடியசைத்து படகை வழியனுப்பி வைத்தனர்.

முன்னதாக காணொலி வாயிலாக உரையாற்றிய பிரதமர் மோடி, நாகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து இலங்கை உள்பட பல நாடுகளுக்கு வர்த்தக ரீதியாக தொன்று தொட்டே கப்பல் போக்குவரத்து இருந்ததாக குறிப்பிட்டார். பட்டினப்பாலை, மணிமேகலை உள்ளிட்ட சங்ககால இலக்கியங்களையும், பாரதியார் பாடலையும் அவர் மேற்கோள் காட்டினார். இரு நாடுகளுக்கும் இடையிலான கலாச்சார, வர்த்தக மற்றும் இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்த படகு சேவை உதவும் என்றும், ராமேஸ்வரத்திற்கும் தலைமன்னாருக்கும் இடையிலான படகு சேவையை மீண்டும் தொடங்குவோம் என்றும் மோடி கூறினார்.

காணொளி வாயிலாக உரையாற்றிய இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, “இரு நாடுகளுக்கும் இடையிலான இணைப்பை மேம்படுத்துவதில் படகு சேவை ஒரு முக்கியமான படியாகும். இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போர் (1983) காரணமாக முந்தைய படகு சேவை நிறுத்தப்பட்டது.” என்று அவர் குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனாவால், படகு சேவை மூலம் தமிழகத்திற்கும் இலங்கையின் வடக்கு மாகாணத்திற்கும் இடையிலான கலாச்சார உறவுகள் அதிகரிக்கும் என்றார். நாகூர், வேளாங்கண்ணி உள்ளிட்ட புண்ணியத் தலங்கள் நாகப்பட்டினத்துக்கு அருகாமையில் இருப்பதால் இலங்கையைச் சேர்ந்த பல யாத்ரீகர்கள் பயனடைவார்கள் என்றும் அவர் கூறினார்.

அதிவேக படகுப் பயணத்தை தொடங்குவதற்கு முன்பாகவும், பயணம் செய்யும் போதும் உற்சாகமாக பேசிய பயணிகள், தங்களது நீண்ட கால கனவு நிறைவேறியுள்ளதாக கூறினர். இந்த கப்பல் சேவையின் மூலம் இரு நாடுகள் இடையிலான சுற்றுலா, வர்த்தகம் உள்ளிட்டவை மேம்படும் என்றும் அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Also Read : நடைப்பயிற்சி மட்டும் சர்க்கரைநோயை கட்டுப்படுத்துமா? இப்படித்தான் நடக்க வேண்டுமா? How Much Walking Is Best for Diabetes Control?

நாகையிலிருந்து நாள் தோறும் காலை 7 மணிக்கு புறப்படும் ‘செரியா பாணி’ என்ற அதிவேகப் படகு, காலை 11 மணிக்கு இலங்கை காங்கேசன் துறையை சென்றடையும். மீண்டும் பிற்பகல் 1:30 மணிக்கு இலங்கையில் இருந்து புறப்பட்டு, மாலை 5.30 மணிக்கு நாகை வந்தடையும். இந்தப் படகில் பயணம் செய்ய 18 சதவீத ஜிஎஸ்டி உடன் சேர்த்து பயணக் கட்டணமாக ஒரு நபருக்கு 7 ஆயிரத்து 670 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

150 பேர் வரை பயணம்  மேற்கொள்ளும் வசதி உடைய இந்த அதிவேகப் படகில் இன்று 12 ஊழிர்கள் மற்றும் 50 பயணிகள் இலங்கை சென்றனர். இந்திய கப்பல் போக்குவரத்துக் கழகத்தால் இயக்கப்படும் இந்தப் படகு சேவைக்கான டிக்கெட்டுகளை விற்பனை செய்யும் பொறுப்பு தனியார் நிறுவனம் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பயணிகள் 50 கிலோ எடை வரை எந்தவித கட்டணங்களும் இல்லாமல் தங்கள் உடைமைகளைக் கொண்டு செல்லலாம். இந்த பயணத்துக்கு பாஸ்போர்ட், இ விசா கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்கி கடல் கொந்தளிப்பாக மாறும் அக்டோபர் 23-ம் தேதி வரை படகு சேவை அமலில் இருக்கும். பிறகு, 2024 ஜனவரியில் மீண்டும் சேவை தொடங்கப்படும் என்று துறைமுக பொறுப்புக்கழக அதிகாரி அன்பழகன் தெரிவித்துள்ளார்.

செரியாபாணி என்ற இந்தப் படகு கேரள மாநிலம் கொச்சியில் தயாரிக்கப்பட்டு கடந்த வாரம் சனிக்கிழமை நாகை துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டது. சோதனை ஓட்டம் 2 நாட்கள் நடைபெற்ற நிலையில், 10 ஆம் தேதி பயணிகளுக்கான சேவை தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் அன்று சேவை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் 12 ஆம் தேதி முதல் படகு சேவை தொடங்கப்படுவதாக இருந்தது. ஆனால் நிர்வாக காரணங்களுக்காக சேவை தொடங்கும் நாள் ஒத்திவைக்கப்பட்டது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry