பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிக்கப்படுமா? என்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம் அளித்துள்ளார்.
கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக வட மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் வெப்ப அலை காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். தமிழகத்திலும் சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ்,
தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால் ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கும், பொதுத்தேர்வு இல்லாத மாணவர்களுக்கும் முன்கூட்டியே விடுமுறை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக முதலமைச்சருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும். விடுமுறை குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
கொரோனா காலத்தில் பள்ளிகள் இயங்காததால் மாணவர்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர். அதனால், சில விரும்பத்தகாத சில நிகழ்வுகள் நடைபெறுகிறது. இது வேதனை அளிக்கிறது. அதனை சரிசெய்ய தமிழ்நாடு அரசு திவீர முயற்சி எடுத்துவருகிறது. மேலும், மாணவர்களின் நலனில் ஆசிரியர்கள் மட்டுமின்றி பெற்றோர்களும் கவனம் செலுத்த வேண்டும், என்று கூறினார்.
இதனிடையே, இந்தியாவின் வட மேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் 122 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு வெப்பம் நிலவி வருவதாக இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. கடும் வெயில் காரணமாக ஒடிசா மாநிலத்தில் காலை 6 மணி முதல் 9 மணி வரை மட்டுமே பள்ளிகள் செயல்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry