
உடலில் உள்ள நீர்ச்சத்தை மேம்படுத்த அடிக்கடி தண்ணீர் குடிப்பது மிக முக்கியம் என்றாலும், நாம் எங்கு சென்றாலும் தண்ணீர் பாட்டில்களை எடுத்து செல்வதில் ஆரோக்கியம் சார்ந்த சிலச் சிக்கல்கள் இருக்கத்தான் செய்கின்றன. அப்படியானால் பாட்டில்களை தவிர்ப்பதுதான் இதற்குத் தீர்வா அல்லது இதிலிருந்து தப்பிக்க வேறு வழிகள் ஏதேனும் இருக்கின்றதா என்பதை காண்போம்.
தண்ணீர் பாட்டிலில், எவ்வளவு நாட்களுக்குத் தண்ணீரை சேமித்து வைக்கிறோமோ அந்த அளவிற்கு அதில் பாக்டீரியாவின் வளர்ச்சி அதிகரிக்கும் என்கிறார் லண்டனில் உள்ள லீசெஸ்டர் பல்கலைக்கழகத்தில் மருத்துவ நுண்ணுயிரியல் இணை பேராசிரியர் ப்ரிம்ரோஸ் ஃப்ரீஸ்டோன்.
Also Read : நீங்கள் வாங்கும் கேன் குடிநீர் பாதுகாப்பானதா? உணவு பாதுகாப்புத்துறையின் அதிர்ச்சி ரிப்போர்ட்!
மனித உடலில் தொற்றை ஏற்படுத்தக் கூடிய பாக்டீரியாக்கள் 37 டிகிரி செல்சியசில் வாழும் என்றும், 20 டிகிரி செல்சியசில் அது வளர்ச்சியடையும் என்கிறார் அவர். இந்த வெப்பநிலையில் இருக்கும் தண்ணீரை நீண்ட நேரம் பாட்டிலில் சேமித்து வைத்தால் பாக்டீரியாவின் எண்ணிக்கை பல மடங்கு உயரும் என ஃப்ரீஸ்டோன் குறிப்பிடுகிறார்.
ஒரு மில்லி மீட்டர் பரப்பில் வளரும் லட்சக்கணக்கான பாக்டீரியாக்கள்
சிங்கப்பூரில் கொதிக்க வைக்கப்பட்ட குழாய் நீரைக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், அழிந்திருக்க வேண்டிய பாக்டீரியாக்கள் அனைத்தும், நீரை பாட்டிலில் வைத்து நாள் முழுவதும் பயன்படுத்துகையில் வளர்ந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஒருவர் பயன்படுத்தும் பாட்டிலில் மதிய நேரம் வரையில் சரசரியாக மில்லிலிட்டர் ஒன்றுக்கு 75,000 பாக்டீரியாக்கள் உருவாகும் எனவும், 24 மணி நேரத்தில் 10 முதல் 20 லட்சம் பாக்டீரியாக்கள் உருவாகும் எனவும் கண்டறியப்பட்டு உள்ளது.
பாக்டீரியா வளர்ச்சியை குறைப்பதற்காக ஒவ்வொரு முறை பாட்டிலில் இருந்து தண்ணீர் குடித்த பிறகும் குளிர்சாதன பெட்டியில் வைக்கலாம், ஆனால் இது முழுமையாக பாக்டீரியா வளர்ச்சியைத் தடுக்காது. சில சமயங்களில் பாக்டீரியாவின் வளர்ச்சி தண்ணீரின் தன்மையைப் பொறுத்து அமைந்தாலும், பெரும்பான்மையாக அதை குடிப்பவர் மூலமாகவே ஏற்படுகிறது.

அலுவலகம், உடற்பயிற்சி கூடம் போன்ற இடங்களுக்கோ அல்லது வீட்டிலேயே வைத்திருந்தால் கூட பாட்டிலின் வெளிப்புறத்தில் நிறைய நுண்ணுயிர்கள் இடம்பெற்றிருக்கும். இவை நீங்கள் தண்ணீர் குடிக்கும் பொழுது வாய் வழியாக வரும் பாக்டீரியாவுடன் இணைந்து கலக்கப்படும், என்கிறார் ஃப்ரீஸ்டோன்.
அடிக்கடி கை கழுவாதவர்கள் பயன்படுத்தும் பாட்டில்களில் ஈ-கோலி எனப்படும் பாக்டீரியா உருவாகலாம் என்கிறார் அவர். இந்த பாக்டீரியா நமது கைகள் சுத்தமாக இல்லையென்றால், குறிப்பாக கழிவறை சுகாதாரம் குறைவாக இருந்தால் உருவாகக் கூடிய பாக்டீரியா ஆகும். இந்த பாட்டிலை மற்றவர்களுடன் பகிரும் பொழுது அதனால் பல்வேறு வைரஸ் தொற்று பாதிப்பும் ஏற்படலாம். உதாரணமாக நோரோ வைரஸ் இந்த வழிமுறையில் எளிதாக பரவலாம்.
மனிதர்களின் வாயில் இருக்கும் 600 வகையான பாக்டீரியாக்கள்
பொதுவாக மனிதர்களின் வாயில் 500 முதல் 600 வகையான பாக்டீரியாக்கள் உள்ளன. உங்களுக்கு நோய் ஏற்படுத்தாத பாக்டீரியா மற்றவருக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று கூறிவிட முடியாது. உங்களுக்கு ஒரு தொற்று ஏற்பட்டிருக்கலாம், ஆனால் உங்களுக்கு அது தெரியாமல் இருக்கலாம். ஏனென்றால் நம்மை பாதுகாப்பதில் நமது நோய் எதிர்ப்பு சக்தி தீவிரமாக வேலை செய்யும்.
பாக்டீரியா வளர்ச்சிக்கு வித்திடும் இன்னொரு காரணி, நீங்கள் தண்ணீரோடு கலக்கும் மற்ற பொருட்கள், அதாவது உதாரணமாக சுத்தமான குடிநீருடன் சர்க்கரை கலக்கப்பட்டால், பாட்டிலில் பாக்டீரியா அல்லது பூஞ்சை உருவாகும்.
ஏனெனில் உங்களுக்கு சத்து அளிக்கக் கூடிய அனைத்துமே பாக்டீரியாவின் வளர்ச்சிக்கும் சத்து அளிப்பதாக இருக்கும்.
Also Read : எந்த பிளாஸ்டிக் பாதுகாப்பானது தெரியுமா? பிளாஸ்டிக் பயன்பாடும், வகைகளும்!
தண்ணீர் தவிர, புரோட்டின் ஷேக்ஸ் போன்றவை பாக்டீரியா வளர கூடாரமாக அமைகின்றன. சூடு செய்த பாலை ஒரு குவளையில் சிறுது நேரம் விட்டுவிட்டு, திரும்பி வந்து பார்க்கும் பொழுது அதில் ஏடு உருவாகியிருக்கும். இந்த ஏடு தான் பாக்டீரியாக்களுக்கு மிகவும் பிடிக்கும் என்கிறார் ஃப்ரீஸ்டோன். நம்மை சுற்றி இருக்கும் நிலம், காற்று ஆகிய எல்லாவற்றிலும் பாக்டீரியாக்கள் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அதில் பெரும்பான்மையானவை பாதிப்பற்றதாகவோ அல்லது பலனளிக்கும் வகையிலோ இருக்கும்.
எத்தனை நாளைக்கு ஒருமுறை கழுவ வேண்டும்?
பாட்டிலை எவ்வளவு நாளுக்கு ஒருமுறை கழுவுகின்றோம், எப்படி கழுவுகின்றோம் என்பது பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. இருந்தாலும் சோப் மற்றும் பிரஷ் ஆகியவற்றைக் கொண்டு கழுவியவர்களின் பாட்டிலில் குறைந்த அளவிலான பாக்டீரியாக்களே இருந்தது ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது. பாத்திரம் கழுவும் சோப்பைக் கொண்டு, குறைந்த இடைவெளையில் பாட்டிலைக் கழுவுவது இதற்கு ஒரு சிறந்த தீர்வாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் அறிவுறுத்துகின்றனர்.
டீ, காபி மற்றும் ஜூஸ் போன்ற திரவங்கள் இருக்கும் பாட்டில்கள் இன்னும் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாட்டிலை சுத்தமாக கழுவி பயன்படுத்துவதே இதற்கான ஒரே தீர்வு. பாட்டிலுக்குள் இருக்கும் நீர் சுத்தமானதாக இருந்தாலும் கூட, தண்ணீர் குடிக்கும் பொழுது உங்கள் எச்சில் அதில் விழுந்தால், அதில் இருக்கும் ஊட்டச்சத்துக்களில் அந்த பாக்டீரியா செழுமையாக வளரும்.

குளிர்ந்த நீரில் கழுவுவதால் இந்த பிரச்னை தீராது. ஆகவே 60 டிகிரி செல்சியசிற்கு அதிகமான வெப்பநிலையில் உள்ள நீரைக் கொண்டு கழுவுவதே இதிலிருக்கும் கிருமிகளைக் கொல்லும். சூடான நீருடன் பாத்திரம் கழுவும் சோப்பை நன்றாக கலக்கிவிட்டு 10 நிமிடங்களுக்கு ஊறவிட்ட பின்பு மீண்டும் சுடுநீரில் கழுவுவது சிறந்த வழி. பின்னர் பாட்டிலை நன்றாக காற்றில் காய விடவேண்டும். ஏனென்றால் ஈரப்பதம் இருக்கும் இடத்தில் தான் இந்த நுண்ணுயிரிகள் உருவாகும்.
ஒவ்வொரு பயன்பாட்டிற்கு பிறகும் இந்த வழிமுறையைப் பின்பற்றி கழுவுவது அவசியம். அல்லது, குறைந்தபட்சமாக வாரத்திற்கு சிலமுறையாவது கழுவுவது நல்லது. பாட்டிலில் இருந்து வாடை வரும் வரை கழுவாமல் வைத்திருக்கக் கூடாது. பாட்டிலில் மோசமான வாடை வந்துவிட்டது என்றால் அதை பயன்படுத்த வேண்டாம். சுத்தமான பாட்டிலை பயன்படுத்தும் பொழுது உங்கள் கைகள் சுத்தமாக இருப்பதும் அவசியம்.
எது சிறந்தது – ஸ்டீல் பாட்டிலா, பிளாஸ்டிக் பாட்டிலா?
ஸ்டீல் பாட்டில்களுடன் ஒப்பிடுகையில் நெகிழி பாட்டில்களில் அதிக பாக்டீரியா இருப்பதாக ஆய்வுகள் தெரிவித்தாலும், அதை சுத்தமாக பராமரிப்பதில் தான் வித்தியாசம் இருக்கின்றது. பாட்டிலின் எல்லா பகுதியையும் சுத்தமாக கழுவுவது மிகவும் அவசியம். ஆனால் ஸ்டீல் பாட்டிலை பயன்படுத்துவது பல காரணங்களுக்கு சிறந்ததாக பார்க்கப்படுகின்றது.
நெகிழியில் இருக்கும் வேதியியல் கலப்புகள் தண்ணீருடன் கலப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். அதனால் கண்ணாடி மற்றும் ஸ்டீல் பாட்டில்களைப் பயன்படுத்துவது நல்லது. எந்த பாட்டிலை பயன்படுத்தினாலும் அதை சுத்தமாக பராமரிப்பது அவசியம். அப்படி இருந்தால் மட்டுமே நீங்கள் குடிக்கும் நீர் சுத்தமானதாக, பாக்டீரியாக்கள் இல்லாத நீராக இருக்கும்.
Image Source : Getty Images. With Input form BBC.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry