எந்த பிளாஸ்டிக் பாதுகாப்பானது தெரியுமா? பிளாஸ்டிக் பயன்பாடும், வகைகளும்!

0
319

1920கள் வரை கேள்விப்படாத ஒன்றாக இருந்தபோதிலும், நவீன கால வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் பிளாஸ்டிக் ஊடுருவி இருக்கிறது. பல வகையான பிளாஸ்டிக்குகள் இருந்தாலும், அவற்றில் சில பயனுள்ள மற்றும் பல்துறை பண்புகளைக் கொண்டுள்ளன.

எந்த வகையான பிளாஸ்டிக் பொருளை தினசரி வாழ்க்கையில் நாம் பயன்படுத்தலாம் என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. ஏனென்றால், பிளாஸ்டிக் பயன்பாடு கேன்சர் நோய் வரை வரவழைக்கும் என்று எச்சரிக்கப்படுகிறது. அந்த வகையில் நடைமுறையில் உள்ள பிளாஸ்டிக்குகளின் தன்மை பற்றியும், அவை பயன்படுத்த உகந்ததா? என்பது குறித்தும் தெரிந்துகொள்வோம்.

Also Read : சிகரெட் புகைப்பவர்கள் கட்டாயம் படிங்க! சிகரெட் தயாரிக்க ஆண்டுக்கு 4 லட்சம் ஹெக்டேர் காடுகள் அழிப்பு!

பிளாஸ்டிக் பொருட்களில் முக்கோணத்தின் நடுவே ஒரு எண்ணுடன் கூடிய குறியீடு இருக்கும். உற்பத்தியாளர்கள் இந்தக் குறியீட்டை அவசியம் அச்சிட வேண்டும். மறுசுழற்சி செய்பவர்களுக்கு மட்டுமின்றி நுகர்வோருக்கும் இந்த குறியீடுகள் உதவுகின்றன.

PET எனப்படும் பாலிஎத்திலீன் டெரெப்தாலேட்

இந்த வகையான பிளாஸ்டிக் பொருட்களில், முக்கோணத்தின் நடுவே 1 எனவும், அதற்குக் கீழே PET என்றும் அச்சிடப்பட்டிருக்கும். இதை எளிதாக மறுசுழற்சி செய்ய முடியும். குளிர்பானம், தண்ணீர் பாட்டில், சமையல் எண்ணெய் பாட்டில்கள், பேக்கேஜிங் தட்டுகள், ரெடிமேட் உணவு தட்டுகள் உள்ளிட்டவை PET பிளாஸ்டிக்கால் செய்யப்படுபவை.

பீன்பேக்குகள், கயிறுகள், கார் பம்ப்பர்கள், டென்னிஸ் பால் ஃபெல்ட், சீப்புகள், படகுகளுக்கான பாய்மரங்கள் போன்றவை தயாரிப்பிலும் PET பிளாஸ்டிக் முக்கிய பங்கு வகிக்கிறது. கடைகளில் விற்கப்படும் பாட்டில்களும் PET பிளாஸ்டிக்கால் ஆனவைதான். உணவுகளை இதில் அடைத்துவைத்து சாப்பிடலாம் அல்லது குடிக்கலாம். ஆனால், இந்த பெட் பாட்டில்கள் ஒரு முறை மட்டுமே பயன்படுத்த உகந்தது, மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடாது.

HDPE எனப்படும் அதிக அடர்த்தி கொண்ட பாலிஎத்திலின்

HDPE – High Density Poly Ethyleneக்கு பிளாஸ்டிக் குறியீட்டின்படி வழங்கப்பட்டுள்ள எண் 2. இது திக்கான பிளாஸ்டிக். சுத்தப்படுத்தும் கரைசல், சோப்பு கொள்கலன்கள், உணவு மற்றும் பானங்கள் சேமிப்பு கலன்கள், ஷாப்பிங் பைகள், குழாய்கள், பாட்டில் மூடிகள், வாகன எரிபொருள் டேங்க்குகள், கெட்டியான வாட்டர் பாட்டில்கள், பாதுகாப்பு தலைக்கவசங்கள், மோட்டார் எண்ணெய் கொள்கலன் போன்றவை இந்த வகை பிளாஸ்டிக்கால் செய்யப்படும்.

பொம்மைகள், பிளாஸ்டிக் கதவுகள் போன்றவை தயாரிப்புக்கும் இந்த வகை பிளாஸ்டிக்குள் பயன்படுகின்றன. இதை நாம் மீண்டும் மீண்டும்(மறுபயன்பாடு) பயன்படுத்தலாம். மறுசுழற்சி மையங்களில் HDPE பிளாஸ்டிக்குகள் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இந்தவகை பிளாஸ்டிக் பொருட்களில் உணவுப் பொருட்களை அடைத்து வைத்து பயன்படுத்தலாம். ஆனால், சூடான உணவுப் பொருளை இதில் அடைத்துவைத்து சாப்பிடக்கூடாது.

PVC எனப்படும் பாலிவினைல் குளோரைடு

இதற்கு 3-ம் எண் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. மலிவாகக் கிடைக்கக்கூடிய PVCயைக் கொண்டு வேலை செய்வது மற்றும் வடிவங்களை உருவாக்குவது எளிது.

ஆடைகள், மருத்துவ கொள்கலன்கள், குழாய்கள், நீர் மற்றும் கழிவுநீர் குழாய்கள், தரைகளுக்கான வினைல் கோட்டிங், கேபிள்கள், துப்புரவு கொள்கலன்கள், தண்ணீர் பாட்டில்கள், ஜன்னல் சட்டங்கள், கிரெடிட் கார்டுகள், ஷுக்கள், சமையல் எண்ணெய் பாட்டில்கள் உள்ளிட்டவைகளை உருவாக்க இந்த பிவிசி பயன்படுகிறது. இந்த வகை பிளாஸ்டிக்குகளில் உணவுப்பொருளை சேமித்து வைக்கக் கூடாது.

LDPE எனப்படும் குறைந்த அடர்த்தி பாலிஎத்திலின்

LDPEக்கு பிளாஸ்டிக் குறியீட்டில் வழங்கப்பட்டுள்ள எண் 4 ஆகும். பொதுவான வெப்பநிலையில் LDPE வேதிவினை புரியாது. இது 100 டிகிரி செல்சியஸை நெருங்கும் வெப்பநிலையைத் தாங்கக்கூடியது. HDPE போல வலுவாக இல்லாவிட்டாலும், அதிக மீள்தன்மை கொண்டது.

LDPE இன் பொதுவான பயன்பாடுகள்: தட்டுகள், கொள்கலன்கள், இயந்திர பாகங்கள், மூடிகள், பானம் அட்டைப்பெட்டிகள், பிரெட் உறைகள், பிளாஸ்டிக் ஃபிலிம், கேரி பேக், பாதுகாப்பு ஓடுகள், கணினி வன்பொருள் உறைகள், விளையாட்டு மைதான சாதனங்கள், பின்-பைகள், சலவை பைகள் போன்றவை LDPE பிளாஸ்டிக்குளால் செய்யப்படுகிறது. இந்த வகை பிளாஸ்டிக் பொருட்களில் சூடான உணவு பொருளை சேமிக்கக் கூடாது. குறிப்பாக ஹோட்டல்கள், தேநீர் கடைகளில் சூடான உணவு பொருளை இந்தவகை பிளாஸ்டிக் கவரில் அடைத்து கொடுக்கிறார்கள். இது உடல்நலத்துக்கு தீங்கானது, கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும்.

PP எனப்படும் பாலிப்ரோப்பிலீன்

பிளாஸ்டிக் குறியீட்டு எண் 5ஐ பெற்றிருக்கும் இந்த PP, மற்ற பிளாஸ்டிக்குகளுடன் ஒப்பிடுகையில் அதிக வெப்பநிலையை தாங்கக் கூடியது. உணவுகளை சேமிக்க பாதுகாப்பானதாகவும் கருதப்படுகிறது.

ஸ்டிரா, ஹேங்கர், டப்பர்வேர், பிளாஸ்டிக் டயபர், ஆடை, அறுவை சிகிச்சை கருவிகள், பாட்டில் மூடிகள், உணவுப் பாத்திரங்கள், மிருதுவான பைகள், கெட்டில்கள், மதிய உணவுப் பெட்டிகள், பேக்கிங் டேப், தயிர் கப், ஜார், மைக்ரோவேவ் ஓவனில் வைக்கக்கூடிய கொள்கலன்கள் உள்ளிட்டவை PP வகை பிளாஸ்டிக்கால் செய்யப்படுகிறது. இது பாதுகாப்பான பிளாஸ்டிக் என்பதால் சூடான மற்றும் குளிர்ச்சியான உணவுப்பொருளை இதில் அடைத்து வைத்து சாப்பிடலாம்.

PS எனப்படும் பாலிஸ்டிரீன்

இதன் பிளாஸ்டிக் குறியீட்டு எண் 6.  ஒரு முறை பயன்படுத்தப்படும் காபி கோப்பைகள், உணவு டப்பாக்கள், ஸ்பூன்கள், டிரே, இறைச்சி தட்டுகள் உள்ளிட்டவை இந்த PS வகையான பிளாஸ்டிக்குகளால் செய்யப்படுபவை.

குறிப்பாக ஹோட்டல்களில் வழங்கப்படும் டப்பாக்கள். இதில் சூடான உணவுப் பொருளை அடைக்கும்போது, ஸ்டைரின் எனப்படும் நரம்புமண்டலத்தை பாதிக்கும் வேதிப்பொருள் உருவாகிறது. எனவே சூடான உணவுப் பொருட்களை அடைத்துவைத்து சாப்பிடுவதற்கு PS வகை பிளாஸ்டிக் கலன்கள் உகந்தது இல்லை.

மற்ற பிளாஸ்டிக்குகள்

மேலே பார்த்த 6 வகை பிளாஸ்டிக்குகளை சேராத பாலிகார்பனேட், நைலான், அக்ரலிக் உள்ளிட்டவை பிளாஸ்டிக்கு குறியீட்டு எண் 7ன் கீழ் வருகிறது. இந்த பிளாஸ்டிக்குகள் மறுசுழற்சி செய்வது மிகவும் கடினம். கண் கண்ணாடிக்கு மாற்றான லென்ஸ், சிடி – டிவிடிக்கள், குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் பாட்டில், பெரிய அளவிலான வாட்டர் கேன், மருந்து பொருட்கள் வைத்திருக்கும் கண்டெய்னர், மின்சார ஒயர்கள் போன்றவை இந்த 7ம் வகை பிளாஸ்டிக்குகளால் செய்யப்படுகின்றன.

குறிப்பாக குழந்தைகளுக்கான பால் புட்டி, பெரிய வாட்டர் கேன்கள் பாலி கார்பனேட்டால் தயார் செய்யப்பட்டு வந்தது. இதைப் பயன்படுத்தும்போது BPA எனப்படும் ரசாயனம் வெளியாகி நாளமில்லா சுரப்பிகளை பாதிப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே தற்போது PP அல்லது HDPE வகை பிளாஸ்டிக்குளால் பால்புட்டிகள், பெரிய வாட்டர் கேன்கள் தயாராகின்றன. இப்போது விற்பனைக்கு வரும் பெரும்பாலான பால்புட்டிகளில் BPA FREE என அச்சிடப்பட்டே வருகிறது. பெற்றோர் இதை சரிபார்த்து வாங்குவது அவசியம்.

தற்போதைய சூழலில் பிளாஸ்ட் பயன்பாட்டை அறவே தவிர்க்க வேண்டும். உடையானாலும், உபகரணம் ஆனாலும், மீண்டும் பயன்படுத்தக்கூடிய, முழுதாக மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களையே பயன்படுத்துவோம் என நாம் உறுதியேற்க வேண்டும். இல்லாவிட்டால், இந்தியாவில் கண்ணுக்குத் தெரியும் பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் ஆபத்துகளைவிட, கண்ணுக்குத் தெரியாத நுண் பிளாஸ்டிக்குகளால் ஏற்படும் ஆபத்துகள் பல மடங்கு அதிகரிக்கும்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry