
உடல் ஆரோக்கியத்துடன் ஒப்பிடும் போது மன ஆரோக்கியம் பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகிறது. ஆனால் உடல் ஆரோக்கியமும், மன ஆரோக்கியமும் ஒன்றோடொன்று நெருக்கமான தொடர்புடையவை. சமீப காலமாக மனஅழுத்தத்தால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக கோவிட்-19- க்குப் பிறகு இந்த சிக்கல் வேகமாக அதிகரித்து வருகிறது.
2024 ஆம் ஆண்டில், இந்தியாவில் சுமார் 56.7 மில்லியன் மக்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இது நாட்டின் மக்கள் தொகையில் சுமார் 4.5% ஆகும். மனச்சோர்வு என்பது நாட்டில் மிகவும் பரவலாக உள்ள மனநல கோளாறுகளில் ஒன்றாகும். NIMHANS நடத்திய தேசிய மனநல ஆய்வில், இந்தியாவில் 15% பெரியவர்களுக்கு மனநலப் பிரச்னைகளைக் கண்டறிய தீவிர தலையீடு தேவைப்படுகிறது என்று தெரியவந்துள்ளது.
Also Read : தொப்புளில் தினமும் எண்ணெய் வைப்பதால் இவ்வளவு பலன்களா..! Benefits Of Applying Oil on Belly Button!
மன ஆரோக்கியமும், உடல் ஆரோக்கியமும் நாம் நினைப்பதை விட ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடையது. நல்ல மன ஆரோக்கியம், உடல் ஆரோக்கியத்தில் நேரடி மற்றும் நேர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். மோசமான மன ஆரோக்கியம், உடல் ஆரோக்கியத்தில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும்.
மனநலப் பிரச்சினைகள் அல்லது நீண்டகால மன அழுத்தம் மற்றும் பதற்றம் ஆகியவற்றை புறக்கணிக்கவோ அல்லது குறைத்து மதிப்பிடவோ கூடாது. மன ஆரோக்கியம், உடல் ஆரோக்கியத்தில் ஏற்படுத்தும் முக்கியப் பிரச்சினைகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
செரிமான ஆரோக்கியம்
பொதுவாக நாம் பதற்றமாக இருக்கும் போது வயிற்றை பிசைவது போன்ற உணர்வு ஏற்படும். இது உங்கள் மனமும், உடலும் எப்படி பிணைக்கப்பட்டுள்ளது என்பதற்கான சிறு உதாரணம் மட்டுமே. ஆனால் அதைவிட தீவிரமாக மோசமான மன ஆரோக்கியம் நாள்பட்ட மனச்சோர்வு, மன அழுத்தம் மற்றும் பதற்றம் உண்மையில் செரிமான மண்டலத்தின் உடலியலை மாற்றி, அது செயல்படும் விதத்தை பாதிக்கிறது. சில சமயங்களில் வலி மற்றும் அசௌகரியத்தை தீவிரப்படுத்துகிறது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

தூக்க சிக்கல்கள்
நாள்பட்ட மன அழுத்தம், மனச்சோர்வு மற்றும் ஆற்றல் இல்லாமை போன்றவை நீங்கள் தூங்கும் முறையையும், தூங்கும் தன்மையையும் பாதிக்கலாம். தூக்கமின்மையால், மன அழுத்தம், பதற்றம் மற்றும் மனச்சோர்வு தொடர்பான அறிகுறிகள் அதிகரிக்கலாம். இறுதியில், இது தூக்கமின்மை அல்லது தூக்கத்தில் மூச்சுத்திணறல் உள்ளிட்ட தூக்கக் கோளாறுகள் அதிகரிக்க பங்களிக்கும்.
இதய ஆரோக்கியம்
உங்கள் இதயத்தின் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உயர் இரத்த அழுத்தம், அதிகரித்த மற்றும் நீடித்த இதயத் துடிப்பு போன்றவை இதய நோய்க்கான ஆபத்தை அதிகரிக்கலாம். இந்த ஆபத்து காரணிகள் அனைத்தும் மன ஆரோக்கியத்தை பாதிக்கலாம். உதாரணமாக, நீங்கள் மன அழுத்தத்தில் இருக்கும்போது, உங்கள் உடல் கார்டிசோல் ஹார்மோனை வெளியிடுகிறது, இதன் விளைவாக இரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பு அதிகரிக்கிறது. நீண்ட கால மன அழுத்தம் அல்லது நாள்பட்ட மனச்சோர்வு, பதற்றம் அல்லது PTSD(Post-Traumatic Stress Disorder) ஆகியவை இதய நோயை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கலாம்.
ஆயுட்காலத்தைப் பாதிக்கலாம்
மன ஆரோக்கியம் முழு உடலிலும் ஒரு விரிவான தாக்கத்தை ஏற்படுத்துவதால், கடுமையான மற்றும் நாள்பட்ட மனநலப் பிரச்சினைகள் ஆயுட்காலத்தைக் குறைக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஏனெனில் மன ஆரோக்கிய குறைபாடு, நோயெதிர்ப்பு சக்தி முதல் உடலின் குணமடையும் தன்மை வரை அனைத்தையும் பாதிக்கும்.
நிம்மதியான, சந்தோஷமான வாழ்க்கையை வாழ வேண்டுமானால், அதற்கு உடலும், மனமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். இதில் உடல் ஆரோக்கியமாக இருக்க எப்படி உடற்பயிற்சிகளும், உணவுகளும் உதவி புரிகிறதோ, அதேபோல் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உணவுகளும், உடற்பயிற்சிகளும் உதவி புரிகின்றன.
குறிப்பாக நாம் உண்ணும் உணவுகள் நமது மன ஆரோக்கியத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சால்மன் மீனில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகளவில் நிறைந்துள்ளன. அதோடு வைட்டமின் டியும் கொண்டுள்ளன. இந்த மீனை அடிக்கடி வாங்கி சாப்பிட்டு வந்தால், மன அழுத்தம் குறைந்து, மனம் ரிலாக்ஸாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.
சிக்கனில் ட்ரிப்டோபேன் உள்ளது. இந்த ட்ரிப்டோபேன் செரடோனின் உற்பத்திக்கு உதவி புரிந்து, மனதை ரிலாக்ஸாக வைத்துக் கொள்ள உதவுகிறது. சிக்கனில் மூளையின் ஆரோக்கியத்திற்கு வேண்டிய பி வைட்டமின்கள் மற்றும் மக்னீசியம் அதிகளவில் உள்ளன. எனவே மனஆரோக்கியத்திற்கு சிக்கனையும் அவ்வப்போது சாப்பிடுங்கள். வான்கோழி அல்லது கோழியுடன் முழு தானியங்களை உண்ணும் போது, மனச்சோர்வு, மனக்கவலை போன்ற அறிகுறிகள் குறையலாம்.
அவகேடோ பழத்தில் ஃபோலேட் மற்றும் வைட்டமின் கே உள்ளன. இது மனநிலை, அறிவாற்றல், செறிவு போன்றவற்றை மேம்படுத்த உதவுகிறது. அதோடு இந்த பழத்தில் வைட்டமின் பி, மெக்னீசியம், வைட்டமின் சி போன்ற பல சத்துக்களும் உள்ளன. கீரைகள் மூளைக்கு நல்லது மற்றும் மனச்சோர்வை தடுக்கவும், டிமென்ஷியா அபாயத்தைக் குறைக்கவும், தூக்கமின்மையைத் தடுக்கவும் உதவுகின்றன. இதற்கு காரணம் கீரைகளில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், மக்னீசியம் மற்றும் பிற சத்துக்கள் தான். எனவே உங்கள் உணவில் கீரைகளை தவறாமல் சேர்த்து வாருங்கள்.
Also Read : வெந்தயக் கீரையை சாப்பிடுவதால் இத்தனை நோய்கள் குணமாகுமா? Amazing Health Benefits of Vendhaya Keerai!
புரோபயோடிக்குகள் குடல் ஆரோக்கியத்தை மட்டுமின்றி மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுவதாக ஆய்வு ஒன்று கூறுகிறது. எனவே மன ஆரோக்கியம் சிறப்பாக இருக்க தயிரை தினசரி உணவில் சேர்த்து வாருங்கள். முக்கியமாக தயிரில் மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் உள்ளது. இது மூளைக்கு ஆக்ஸிஜன் செல்ல உதவுகிறது. மூளையில் ஆக்ஸிஜன் அதிகம் இருந்தால், மனநலம் சிறப்பாக இருக்கும்.
நட்ஸ்களிலும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. எனவே, முந்திரி, பிஸ்தா, பாதாம் போன்ற நட்ஸ்களுடன், சியா விதைகள், பூசணி விதைகள் போன்றவற்றையும் உணவில் சேர்த்து வாருங்கள். முக்கியமாக பல நட்ஸ்களில் அதிக அளவு மெக்னீசியம் உள்ளது, இது மூளைக்கு ஆக்ஸிஜனைப் பெற உதவுகிறது.
Image Source : Getty Image
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry