முன்பெல்லாம் குளியலுக்கு வீட்டிலேயே பாரம்பரிய முறைப்படி அரைத்த ‘நலுங்கு மாவு’ எனும் குளியல் பொடியைப் பயன்படுத்தி வந்தார்கள். முழுவதும் இயற்கையான பொருட்களைக் கொண்டு தயாரித்த அந்தப் பொடியின் மூலம் சருமம் ஆரோக்கியமாக இருந்தது. தற்போது ‘சோப்’ உபயோகித்து வருகிறோம். சந்தையில் பல்வேறு குளியல் சோப்புகள் உள்ளன. சிலவற்றில் சருமத்தில் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தும், தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் உள்ளன.
இது ஒரு சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தி, சருமத்தில் பாதிப்பை உண்டாக்கும். சரும பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க இயற்கையான மூலப்பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் சோப்பை பயன்படுத்துவது சிறந்தது. எனவே உங்கள் சருமத்திற்கு ஏற்ற இயற்கையான மூலப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் குளியல் சோப்பைத் தேர்ந்தெடுப்பது அவசியம்.
குளியல் சோப்புகளை வாங்கும் போது, சில காரணிகளை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும், இதனால் உங்கள் சருமம் நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடனும், நீரேற்றத்துடனும் இருக்கும். மேலும் பல்வேறு நன்மைகளையும் அனுபவிக்கலாம். பாடி வாஷ்கள் இப்போது சந்தையை ஆள்கின்றன என்றாலும், சோப்புகள் ஒரு நல்ல குளியல் அனுபவத்திற்கு முக்கியமான எக்ஸ்ஃபோலியேட்டிங் நன்மைகளைக் கொண்டுள்ளன.
Also Read : பெட்ஷீட்டுகளை எத்தனை நாளைக்கு ஒரு முறை மாற்ற வேண்டும்? படுக்கை விரிப்பில் இவ்வளவு பிரச்சனைகள் இருக்கா?
வறண்ட சருமம்
சருமம் அதிகமாக வறண்டு இருந்தால் அதில் எண்ணெய் சுரப்பு குறைவாக இருக்கும். வறண்ட சருமம் கொண்டவர்கள் கிளிசரின் கலந்த சோப்புகளை பயன்படுத்தலாம். ஆட்டுப்பால் கலந்த சோப்புகள் வறண்ட சருமத்துக்கு ஏற்றது. கலப்பட பொருட்கள் கலந்து தயாரிக்கப்படாத சோப்பை பயன்படுத்தலாம்.
சென்சிடிவ் அல்லது உணர்திறன் சருமம்
சென்சிடிவான சருமத்தினர், வண்ணம் மற்றும் வாசனை இல்லாத சோப்களை பயன்படுத்தலாம். சரும மருத்துவரின் ஆலோசனையோடு இந்த சோப்புகளை தேர்ந்தெடுப்பது நல்லது.
எண்ணெய் பசை சருமம்
சருமத்தில் எண்ணெய் பசை அதிகமாக இருப்பவர்கள் ஆன்ட்டி பாக்டீரியல் சோப் வகைகளை பயன்படுத்தலாம். குறிப்பாக வேப்பிலை, சாலிசிலிக் அமிலம் இருக்கும் சோப் வகைகள் சருமத்தில் எண்ணெய் பசையை கட்டுப்படுத்தும். அதிகமான எண்ணெய் பசை கொண்டவர்கள், சருமத்துளைகளிலும் அடைப்பு இருப்பதை உணரலாம். இவர்கள் லாவெண்டர் மற்றும் டீ ட்ரீ ஆயில் கலந்த சோப்களை பயன்படுத்தலாம். முகத்தில் சோப்புக்கு மாற்றாக பேஸ் வாஷும் பயன்படுத்தலாம்.
மூலிகை சோப்
ரசாயனங்கள் கலக்காமல் வீட்டிலேயே பலர் சோப் தயாரித்து விற்கிறார்கள். இந்த வகை சோப்பில் தேங்காய் எண்ணெய் அதிகம் சேர்க்கப்படுகிறது. இது சருமத்துக்கு சிறந்த ஊட்டச்சத்தை வழங்கும். சருமத்தில் இருக்கும் தழும்புகளை நீக்க வைட்டமின் ‘ஏ’,வும், வைட்டமின் ‘பி’ சருமப் பொலிவை அதிகரிக்கவும் உதவுகிறது. எனவே சருமத்தில் இருக்கும் தழும்புகளை குறைப்பதற்கு முயற்சிப்பவர்கள் வைட்டமின்கள் கலந்த சோப்களை பயன்படுத்தலாம்.
ஸ்கிரப் சோப்
சருமத்தில் படிந்து இருக்கும் இறந்த செல்களை நீக்குவதற்கு ஸ்கிரப் சோப் பயன்படும். இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தி தயாரிக்கும் இந்த சோப் வகைகளை உடலுக்கு தேய்த்துக் குளிக்கலாம். பாதுகாப்பான சோப் அதிக வாசனை இல்லாமல் இருக்க வேண்டும். வாசனைக்காக ரசாயனங்கள் கலந்து தயாரிக்கப்பட்டிருக்ககூடும். இயற்கையான நிறத்தில் அல்லது லேசான நிறத்தில் இருக்கும் சோப்புகளை மட்டும் பார்த்து வாங்குங்கள். அடர்த்தியான நிறம் கொண்ட சோப்களை தவிர்ப்பதே நல்லது.
Also Read : ஜீரண பிரச்சனை இருக்கா? சிறந்த செரிமானத்திற்கு உதவும் புரோபயாடிக் உணவுகள்!
சோப்பின் மூலப்பொருள் என்ன?
சாதாரண சோப்பு ஒத்துக் கொள்ளாதவர்கள் மற்றும் சரும பிரச்சினை உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் சோப்பை தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும். எந்த சோப்பை பயன்படுத்தினால் என்ன மாதிரியான மணம் வீசும் என்று தெரிந்து வைத்திருப்பவர்களில் பலருக்கும் அதில் வீசும் மணத்தின், அதில் பொங்கும் நுரையின் ரகசியம் தெரியாது. அதை தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.
ஒருவகை உப்புதான் சோப்பின் மூலப்பொருள். அதில் காரத்தன்மை பொருந்திய ஆல்கலைனையும், தாவர கொழுப்புகளையும் சரியான விகிதத்தில் சேர்க்கும்போது குளியல் சோப்பு தயாராகிறது. நிறத்திற்கான பொருளும், வாசத்திற்கான பொருளும் அதில் சேர்க்கப்படுகிறது. நுரைக்கான ரசாயனமும் அதில் கலக்கப்படுகிறது. நீங்கள் தேர்ந்தெடுக்கும் சோப்பில் உங்கள் சருமத்திற்கு ஏற்ற காரத்தன்மையும், அமிலத்தன்மையும் இருப்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். கார, அமிலத்தன்மையை குறிக்கும் அளவீடு 5.5 என்ற கணக்கில் இருக்க வேண்டும். அவ்வாறு அமையாவிட்டால் வறட்சி, அரிப்பு, எரிச்சல் போன்ற சரும பிரச்சினைகள் உருவாகலாம்.
எண்ணெய் பசை நிறைந்த சருமத்திற்கு வேப்பிலை, எலுமிச்சை கலந்த சோப்பு நல்லது. வறண்ட சருமத்திற்கு கோகோ பட்டர், வெஜிடபிள் எண்ணெய், கற்றாழை, ஜோஜோபா எண்ணெய், வைட்டமின் கலந்த எண்ணெய், அவகோடா ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட சோப்பு சிறந்தது. சோப்பின் அழகிய நிறங்களும் குறிப்பிட்ட சில ரசாயன மூலப்பொருட்களை சார்ந்தே அமைகிறது.
டி.எஃப்.எம். எத்தனை சதவிகிதம் இருக்க வேண்டும்?
டி.எப்.எம். என்பது சோப்பின் தரத்தை குறிப்பிடுகிறது. முதல் தர சோப்பு என்பது 75 சதவீதத்திற்கு அதிகமான டி.எப்.எம் கொண்டதாகும். 65 முதல் 75 சதவீதம் வரை டி.எப்.எம் இருந்தால் அது நடுத்தரமானது. சிலர் அறிமுகமாகும் அனைத்து சோப்புகளையும் பயன்படுத்திப் பார்ப்பார்கள். அது தவறான பழக்கம். சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே சோப்பு வாங்கும்போது டி.எப்.எம் அளவினை பார்த்து வாங்குங்கள். வீரியம் நிறைந்த ரசாயனங்களான சோடியம் லாரில் சல்பேட், சோடியம் லாரீத் சல்பேட், சின்தடிக் ப்ராக்ரன்ஸ் ஆகியவைகளால் தயாரிக்கப்பட்ட சோப்புகளை குளியலுக்கு பயன்படுத்தக்கூடாது.
பெரியவர்கள் சிலர் பேபி சோப்பு எனப்படும் குழந்தைகளுக்கான பிரத்யேக சோப்பினை பயன்படுத்துகிறார்கள். அது சரியில்லை. அதை பயன்படுத்தினால் உடலில் அழுக்கு தங்கிவிடும். பிறந்த குழந்தைகளுக்கு சரும துளைகள் இருக்காது. அதற்கு ஏற்றபடி வீரியம் குறைந்த பொருட்களை கொண்டே குழந்தைகளுக்கான சோப்பு தயாரிக்கப்படுகிறது. பெரியவர்களுக்கு சருமத்துளைகள் முழுமையடைந்து எண்ணெய் பிசுபிசுக்கும். அழுக்கும் படியும். அவற்றை நீக்கும் சக்தி பேபி சோப்பில் இல்லை. எனவே மூன்று வயதுக்கு மேல் பேபி சோப்பு பயன்படுத்த வேண்டாம்.
வாசனைக்காக சோப்பு வாங்குவதை தவிர்க்க வேண்டும்
மூலிகை சோப்பு என்று சொல்லப்பட்டாலும், அதிலும் ரசாயன மூலப்பொருட்களை சேர்க்கத்தான் செய்வார்கள். இயற்கை பொருட்களில் தயாராகும் சோப்புகளும் கடைகளில் கிடைக்கின்றன. அவற்றை வாங்கும் போது தரத்தை சரிபார்த்துக்கொள்ளுங்கள். தினமும் இருமுறை மட்டுமே சோப்பு பயன்படுத்தி முகத்தை கழுவுங்கள். பிற நேரங்களில் சாதாரண தண்ணீரால் முகத்தை கழுவினால் போதுமானது. அடிக்கடி முகத்தில் சோப்பு போட்டால், சருமம் வறண்டுபோகும். ‘லிக்விட்’ எனப்படும் திரவ சோப்பு வகை ஈரத்தன்மை அதிகம் கொண்டது. அதில் ரசாயனத்தின் வீரியம் குறைவு.
சாதாரண சோப்பு ஒத்துக் கொள்ளாதவர்கள் மற்றும் சரும பிரச்சினை உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் சோப்பை தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும். சோப்பில் சேர்க்கப்படும் அதிகப்படியான கொழுப்பின் வாசத்தை குறைக்கவே நறுமண ரசாயனங்கள் சேர்க்கப்படுகிறது. எனவே நறுமணத்தினை மட்டுமே விரும்பி சோப்பு வாங்குவதை தவிர்த்திடவேண்டும்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry