ஒற்றைக் காலில் நிற்கும் யோகப் பயிற்சி அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஆனால், ஒற்றைக் காலில் நிற்பது என்பது, உங்களது ஆரோக்கியம் மற்றும் நீங்கள் வாழப்போகும் நாள்களைத் தொடர்புப்படுத்த வாய்ப்புள்ளது என்பது தெரியுமா?
நமக்கு வயதாகும்போது சமநிலை குறைந்து, அதனுடன் தொடர்புடைய சிக்கல்களின் அபாயம் அதிகரிக்கிறது. உங்கள் சமநிலை எந்தளவு நன்றாக இருக்கிறது என்பதைச் சோதிக்க, ஒற்றைக் காலில் நிற்க முயற்சித்திருக்கிறீர்களா? 50 வயதிற்கு மேற்பட்டவராக இருந்தால், 10 விநாடிகள் கூட சமநிலையை பராமரிக்க போராடுகிறீர்களா? ஆம் என்றால், இது ஒட்டுமொத்த சுகாதார எதிர்மறை விளைவுகளின் முன்னறிவிப்பாக இருக்குமென ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
குறைந்து வரும் சமநிலை, குறிப்பாக 10 விநாடிகள் ஒரு காலில் நிற்க முடியாவிட்டால் அது ஒரு நபரின் ஆயுளில் குறிப்பிடத்தகுந்த தாக்கங்களை ஏற்படுத்துவதற்கான ஆழமான தொடர்பு இருக்கிறது. அதாவது, நடுத்தர மற்றும் வயதானவர்கள் ஒற்றைக் காலில் 10 விநாடிகளாவது நிற்க முடியாவிட்டால், அடுத்த 10 வருடங்களுக்குள் அத்தகையவர்களுக்கு மரணம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகிறது என, பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் ஸ்போர்ட்ஸ் மெடிசின் என்ற இதழில் வெளியான ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன.
இதை உறுதிப்படுத்துவதுபோல, 2008 மற்றும் 2020 க்கு இடையில், 51 முதல் 75 வயதுக்குட்பட்ட 1,702 நபர்களை மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தொடர் கண்காணிப்பில் வைத்திருந்தனர். எடை மற்றும் கடந்தகால நோய்கள் போன்ற பல்வேறு சுகாதார அளவீடுகளுடன், ‘ஒன் லெக் ஸ்டாண்டிங்’ 10 விநாடி சோதனையில் அவர்களின் செயல்திறனைக் கவனித்தனர்.
ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் அனைவரும், தங்களின் ஒற்றைக் காலில் நின்று, மற்றொரு காலை நிற்கும் காலுக்கு பின்னால் நீட்டி, கைகளை சேர்த்தபடி, கண்களை நேராக நோக்கி 10 விநாடிகள் வரை நிற்க வேண்டும். இரண்டு கால்களிலும் மூன்று முயற்சிகள் வரை செய்ய வாய்ப்புகள் வழங்கப்பட்டன. 1,702 பங்கேற்பாளர்களில் 20.4 சதவீதம் பேரால் முழு 10 விநாடிகளுக்கும் ஒற்றைக் காலில் நிற்க முடியவில்லை.
7 வருட கண்காணிப்பில், சோதனையை வெற்றிகரமாக முடிக்க முடியாத 17.5 சதவிகிதத்தினரின் இறப்பு முன்கூட்டியதாக இருந்தது. இவர்களின் இறப்புக்கான காரணமானது வயது, பாலினம், பி.எம்.ஐ, உடல்நலக் குறைபாடுகள், கரோனரி தமனி நோய், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், அதிக கொழுப்பு மற்றும் நீரிழிவு போன்ற காரணங்களைப் பொறுத்தது என்றும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஃபின்லாந்து மற்றும் பிரேசிலைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால், 12 வருட காலம் நடத்தப்பட்ட ஆய்வு இது என்பது குறிப்பிடத்தக்கது.
முதியவர்கள் ஒற்றைக் காலில் நிற்பது பல காரணங்களுக்காக முக்கியமாகக் கருதப்படுகிறது. காரில் இருந்து இறங்க, படிக்கட்டில் ஏறி இறங்க எனத் தொடர்ந்து ஒற்றைக் காலில் நிற்பதற்கான நிலை தேவைப்படுகிறது. அது மட்டுமல்லாமல், இது ஃபிட்னஸையும், ஆரோக்கியத்தையும் எதிரொலிப்பதாக உள்ளது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
5 விநாடிகள் அல்லது அதற்கும் குறைவாக நிற்க முடியாவிட்டால், கீழே விழுந்து காயம் ஏற்படும் அபாயம் அதிகம். அதாவது இவர்கள் கால் வலுவின்றி வழுக்கி விழும் அபாயம் உள்ளது. வலுவற்ற கால்கள் காரணமாக அவர்கள் அடுத்த, 10 ஆண்டுகளில் தடுக்கி விழுந்து உயிரிழக்கும் அபாயம் அதிகரிக்கிறது.
ஒற்றைக் காலில் நிற்பதை வயதானவர்களுக்கான ஆரோக்கிய பரிசோதனைகளில் ஒன்றாக இணைப்பது அவசியம் என்று கூறும் ஆராய்ச்சியாளர்கள், 10 நொடிகள் ஒற்றைக் காலில் நிற்க இயலாமல் சமநிலை தவறுபவர்கள், உணவு, உடற்பயிற்சி, வாழ்க்கை முறை எனத் தங்கள் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தும் சமிக்ஞை என்று கூறுகின்றனர். கீழே குறிப்பிட்டுள்ள நேர விகிதாச்சாரப்படி, ஒருவரது கண்காணிப்பில், ஒரு காலில் நிற்கும் சோதனையை நாமே செய்து பார்க்கலாம்.
* 18-39 years-old (eyes open): 43 seconds
* 18-39 years-old (eyes closed): 9 seconds
* 40-49 years-old (eyes open): 40 seconds
* 40-49 years-old (eyes closed): 7 seconds
* 50-59 years-old (eyes open): 37 seconds
* 50-59 years-old (eyes closed): 4.8 seconds
* 60-69 years-old (eyes open): 26.9 seconds
* 60-69 years-old (eyes closed): 2.8 seconds
* 70-79 years-old (eyes open): 18.3 seconds
* 70-79 years-old (eyes closed): 2 seconds
* 80-99 years-old (eyes open): 5.6 seconds
* 80-99 years-old (eyes closed): 1 second
ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையின் நரம்பியல் நிபுணர் டாக்டர் சுதிர் குமார் கூறுகையில், “நோய்களைக் கண்டறியவும், நோய்கள் அல்லது இறப்பு அபாயத்தைக் கணிக்கவும், இரத்தப் பரிசோதனைகள் மற்றும் ஸ்கேன் போன்ற பல ஆய்வுகளை நாங்கள் நம்புகிறோம். ஒரு காலில் நிற்கும் திறன் மக்களிடையே வேறுபடுகிறது மற்றும் வயதுக்கு ஏற்ப குறைகிறது. நடுத்தர வயது மற்றும் வயதானவர்களுக்கான வழக்கமான மருத்துவ பரிசோதனையின் ஒரு பகுதியாக, ஒரு காலில் நிற்கும் சோதனையும் சேர்க்கப்பட வேண்டும்.
இருப்பினும், ஒரு காலில் நிற்கத் தவறுவது ஒரு குறிப்பிட்ட நோயைக் குறிக்காது. முழங்கால் மூட்டுவலி, கால்களின் பலவீனம் அல்லது உணர்வின்மை, மோசமான சமநிலை, பலவீனமான அறிவாற்றல், உடல் பருமன், இதய நோய்கள் போன்ற காரணங்களால் கூட ஒரு காலில் நிற்க இயலாமல் போகலாம்” என்று கூறுகிறார்.
ஒரே காலில் நிற்பது உங்கள் சமநிலையை மேம்படுத்த எளிய ஆனால் பயனுள்ள வழியாகும். “ஒற்றைக் கால் சமநிலை” என்று அழைக்கப்படும் இந்தப் பயிற்சி, உங்கள் கால்கள் மற்றும் மையத்தில் உள்ள தசைகளை வலுப்படுத்த உதவுகிறது, ப்ரோபிரியோசெப்சனை (Proprioception – உடலின் இருப்பிடம், இயக்கங்கள் மற்றும் செயல்களை உணரும் திறன்) மேம்படுத்துகிறது. ஒரே காலில் நிற்பதை யோகாசனத்தில் ஏக பாதாசனம் என்கிறார்கள்.
அகண்ட சூத்ராவின்படி ஒரு முழுமையான, ஆரோக்கியமான மற்றும் ஒருங்கிணைந்த மனிதர், கண்களை மூடிக்கொண்டு எளிதாக நிற்க முடியும். மூடிய கண்களுடன் நிற்பது சாதாரண உணர்ச்சி நரம்பு மண்டல செயல்பாடுகளை மதிப்பிடுவதற்கான சோதனையாகப் பயன்படுத்தப்படுகிறது. நாம் கண்களை மூடும்போது, ஒற்றைக் காலில் நிற்பதற்கு சமநிலை, ப்ரோபிரியோசெப்சன் மற்றும் வெஸ்டிபுலர் செயல்பாடு (உள் காது சமநிலை) ஆகியவை தேவைப்படுகிறது.
Also Read : வைட்டமின் பி12 அதிகமானால் கேன்சர் வரலாம்! Vitamin B12: Overdose and Side Effects
சமநிலையை மேம்படுத்துவது மற்றும் மூடிய கண்களுடன் ஒற்றைக் காலில் நிற்பது போன்ற பணிகளைச் செய்வது பயிற்சிகள் மூலம் சாத்தியமாகும். யோகா, டாய் சி மற்றும் குறிப்பிட்ட சமநிலைப் பயிற்சிகள் போன்ற செயல்பாடுகள் இந்த உணர்வு அமைப்புகளை உருவாக்கவும், புரோபிரியோசெப்சன் மற்றும் சமநிலைக் கட்டுப்பாட்டை மேம்படுத்தவும் உதவும்.
ஃபிளமிங்கோ பறவைகள் இரு கால்களால் நிற்கும் நிலையை காட்டிலும் ஒரு காலில் நிற்கும் போது குறைந்த அளவிலான ஆற்றலை செலவழிப்பதாக விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். தினமும் ஒற்றைக் காலில் நிற்கும் பயிற்சி செய்வோரின் கால்கள் வலுவாக இருக்கும் என்பதால், அவர்கள் சுலபமாக கீழே விழுந்து மரணம் அடைய அதிக வாய்ப்பில்லை. உலகளவில் ஆண்டுக்கு, 6.80 லட்சம் பேர் கால் வலுவின்றி வழுக்கி விழுந்து மரணம் அடைகின்றனர் என்பது குறிப்பிட்டத்தக்கது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry