பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் ஆகிய துறைகளை கவனிக்கும் அமைச்சர் எ.வ.வேலுவுக்குச் சொந்தமான வீடு, கல்வி நிறுவனங்களில் இன்று காலை 7 மணி முதல் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு படை உதவியுடன் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை, திருவண்ணாமலை, கோவை, கரூர் என தமிழகம் முழுவதும் எ.வ. வேலு தொடர்புடைய 60-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. எ.வ.வேலுவுக்குச் சொந்தமான நிறுவனங்கள் மட்டுமல்லாது, அவரதப உறவினர்கள் தலைமை வகிக்கும் நிறுவனங்களிலும் சோதனை நடக்கிறது. பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்கள் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. வரி ஏய்ப்பு நடந்திருக்கிறதா என்ற அடிப்படையில் இந்தச் சோதனை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. சென்னையில் மட்டும் அண்ணாநகர், அடையாறு, புரசைவாக்கம், வேப்பேரி, தி.நகர் என 11 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அப்பாசாமி குடியிருப்பில், அந்நிறுவனத்தின் சி.இ.ஓ. கிருஷ்ணன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. திருவான்மியூரில் உள்ள காசா கிராண்ட் கட்டுமான நிறுவனத்திலும், காசா கிராண்ட் நிறுவனம் தொடர்பாக அடையாறு தலைமை அலுவலகம், நிர்வாகிகள் வீடு என 2 இடங்களிலும் சோதனை நீடித்து வருகிறது. வேப்பேரி ஈவிகே சம்பத் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தொழிலதிபர் கமலேஷ் ஜெயின் வீடு, புரைவாக்கத்தில் உள்ள கட்டிட ஒப்பந்ததாரர் அமீத் வீடு – அலுவலகம், பொதுப்பணித்துறை அதிகாரிகள் வீடு என வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகர் பகுதியில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் கரூர் மாவட்ட திமுக செயலாளர் வாசுகி முருகேசனின், சகோதரி பத்மா என்பவரது வீட்டில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தோட்டக்குறிச்சி பகுதியில் உள்ள திமுக முன்னாள் சேர்மன் இல்லமான சக்திவேல் இல்லம், காந்திபுரம் பகுதியில் அமைந்துள்ள அனெக்ஸ் சுரேஷ் என்பவருக்கு சொந்தமான நிதி நிறுவன அலுவலகம் மற்றும் வையாபுரி நகர் பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. கோவையில் ராமநாதபுரம் பகுதியில் உள்ள பார்சன் குடியிருப்பில் வசிக்கும் திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநில துணை செயலாளர் மீனா ஜெயக்குமார் என்பவரது இல்லத்தில் சோதனை நடைபெற்று வருகிறது. மீனா ஜெயக்குமார், அமைச்சர் எ.வ.வேலுவின் உறவினர் எனக் கூறப்படுகிறது. மீனா ஜெயக்குமாரின் கணவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்
ஏற்கெனவே, 2021-ம் ஆண்டு தேர்தலில் பணப்பட்டுவாடா செய்ததாக எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி 25 கோடி ரூபாய் பறிமுதல் செய்தனர். எ.வ.வேலுவின் குடும்ப உறுப்பினர்கள் பெயர்களில் மட்டும் 10 கல்வி நிறுவனங்கள், ஆறாயிரம் ஏக்கர் நிலம், ஸ்பின்னிங் மில், கிரானைட் கம்பெனி, ஃபைனான்ஸ் தொழில் ஆகியவை இருப்பதாகச் சொல்லப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம், பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டிருந்த தி.மு.க-வினர் தொடர்புடைய சொத்துப் பட்டியலிலும், அமைச்சர் எ.வ.வேலுவின் சொத்து மதிப்பு ரூ.5,552.39 கோடி எனத் தெரிவித்திருந்தார்.
சில மாதங்களுக்கு முன்பு மணல் குவாரி அதிபர்களுக்கு தொடர்புடைய இடங்கள் மற்றும் மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு பல முக்கிய ஆவணங்கள் மற்றும் போலி ரசீதை காட்டி முறைகேட்டில் ஈடுபட்டு சட்டவிரோதமாக மணல் அள்ளியதை கண்டுபிடித்தனர். இந்த ஆவணங்களை அடிப்படையாக வைத்து பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. பொதுப்பணித்துறையில் டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர் மற்றும் கட்டுமானப் பணிகளுக்கு மணல் வாங்கிய கட்டுமான நிறுவனங்களில் சோதனை மேற்கொள்ளப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஒப்பந்ததாரர்கள், கட்டுமான நிறுவன அதிபர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
முன்னாள் மத்திய அமைச்சரும், அரக்கோணம் தொகுதி தி.மு.க எம்.பி-யுமான ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் கடந்த மாதம் அமலாக்க்த்துறை சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் ரூ.400 கோடி மதிப்பிலான கணக்கில் வராத கட்டண ரசீதுகள் கைப்பற்றப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. அதேபோல கடந்த ஜூலை மாதம் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டது.
அதற்கு முன்னதாக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைதுசெய்தது. அவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இந்தச் சூழலில், தி.மு.க-வின் இரண்டாம் கட்ட தலைவர்களுள் ஒருவரான அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டு வருவது, திமுகவினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry