சமூக ஊடகப் பதிவுகளை தணிக்கை செய்ய அரசு அமைப்பு! ஜனநாயகத்துக்கு விடப்பட்ட சவால், கருத்துரிமைக்குப் பெரும் அச்சுறுத்தல்! Fact Checking Unit!

0
58
Minister Udhayanidhi Stalin & Iyan Karthikeyan

தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், தி.மு.க., மற்றும் திராவிடக் கொள்கைகளை எதிர்க்கும் அரசியல் கட்சியினர், அரசியல் ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், சமூக வலைதள ஆர்வலர்கள் மீது வழக்குகள் பதிவது, சிறையிலடைப்பது எனத் தொடர் அடக்குமுறைகள் நடந்து வருகின்றன. இதை மேலும் கூர்தீட்டும் விதமாக, தமிழகத்தில் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்திற்குச் சாவு மணி அடிக்கும் விதமாக சமூக ஊடகக் கண்காணிப்பு அமைப்பு தொடங்கப்பட்டு, அதற்கு திமுக ஆதரவாளர் இயக்குநராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

2022-23 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை பேரவையில் தாக்கல் செய்த அப்போதைய நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், “காவல் துறையின் கீழ் சிறப்பு சமூக ஊடக கண்காணிப்பு மையத்தை அமைக்க மாநில அரசு முடிவு செய்துள்ளதாகக் குறிப்பிட்டார். சமூக ஊடக தளங்களில் போலி செய்திகள் மற்றும் தவறான தகவல்களை எதிர்த்துப் போராடுவதற்காக சமூக ஊடகக் கண்காணிப்பு அமைப்பு ஏற்படுத்தப்படுகிறது” என்று அவர் கூறினார். காவல்துறை மூலம் மாற்றுக் குரல்களை அடக்க திமுக அரசு இதைப் பயன்படுத்தக்கூடும் என்று அப்போதே சலசலப்பு எழுந்தது.

திமுக இளைஞரணி செயலாளரும், விளையாட்டு மற்றும் சிறப்புத்திட்ட செயலாக்கத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் கட்டுப்பாட்டின் கீழ், உண்மை கண்டறியும் பிரிவை தமிழக அரசு தற்போது உருவாக்கியுள்ளது. FCU(Fact Checking Unit) எனப்படும் உண்மைக் கண்டறியும் பிரிவுக்கு, திமுகவுக்காக பிரச்சாரம் மேற்கொண்ட, தீவிர திமுக அனுதாபியான, திராவிட யூடியூபர் ஐயன் கார்த்திகேயன் திட்ட இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

யூடர்ன் என்ற சுய-பிரகடனப்படுத்தப்பட்ட “உண்மை சரிபார்ப்பு” வலைத்தளம் மற்றும் யூடியூப் சேனலை நிர்வகித்து வந்த அயன் கார்த்திகேயன், “உண்மை சரிபார்ப்பு” என்ற போர்வையில், மாரிதாஸ், பத்திரிகையாளர்கள் ரங்கராஜ் பாண்டே, சந்தியா ரவிசங்கர் உள்ளிட்ட திமுக விமர்சகர்களையும், பாஜக, அதிமுக, நாம் தமிழர் கட்சியினரையும் குறிவைத்து அவதூறு பரப்பியதாக அவர் மீது ஏற்கனவே விமர்சனங்கள் உண்டு.

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை, உண்மைச் சரிபார்ப்புப் பிரிவை உருவாக்கிச் செயல்படுவதைக் கண்காணிக்க அவசரச் சட்டம் பிறப்பித்ததாகத் தெரிகிறது. சவுக்கு மீடியா வெளியிட்டுள்ள தகவலின்படி, தலைமை இயக்குநர், திட்ட இயக்குநர் மற்றும் இணை இயக்குநர் (அரசு அறிக்கைகள்) பதவிகளைத் தவிர 73 தற்காலிக பணியிடங்கள் இந்தப் பிரிவில் இருக்கும்.

இந்தப் பதவிகளுக்கான தேர்வுச் செயல்முறை வெளிப்படைத்தன்மைகுறித்து கேள்விகள் எழுந்துள்ளது. இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரும் விளம்பரம் எந்தப் பத்திரிகையில் வெளியிடப்பட்டது? எத்தனை விண்ணப்பங்கள் பெறப்பட்டன? நேர்காணல் எப்போது, எங்கே நடந்தது? என்பன போன்ற கேள்விகள் தேர்வு செயல்முறை குறித்து எழுப்பப்படுகிறது.

Also Read : நவம்பர் – 1ஐ தமிழ்நாடு நாளாக அறிவித்த அதிமுக அரசு! மபொசி-யின் கனவை நனவாக்கிய ஈபிஎஸ்! November 1st is Tamil Nadu Day!

மேற்கண்ட பதவிகளுக்காக அரசு நிர்ணயித்துள்ள தகுதிகள் மற்றும் அனுபவம் தொடர்பான விவரங்கள் சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளன. அடிப்படைத் தகுதிகளே குழப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளன. அதாவது, விண்ணப்பதாரர் பொறியியல் பட்டம் அல்லது இதழியலில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இதில் ஐயன் கார்த்திகேயன் ஒரு பொறியியல் பட்டதாரி என்பது தெரிய வந்துள்ளது. அவருக்கு ஏற்ற வகையிலேயே அரசாணையில் தகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து கருத்துப் பதிவிட்டுள்ள சவுக்கு மீடியா நிறுவனர் சவுக்கு சங்கர், ‘ஐயன் கார்த்திகேயன் அந்தப் பதவிக்கு தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதற்காக இந்த தகுதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. திமுக ஆதரவாளரும் யூடியூபருமான அயன் கார்த்திகேயன் பொறியியல் பட்டதாரி. இதழியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர். அவருக்கு இடமளிக்கும் வகையில், வரவிருக்கும் ஃபேக்ட் செக் யூனிட்டில் மிஷன் டைரக்டர் பதவிக்கு இந்த விசித்திரமான தகுதியை தமிழக அரசு நிர்ணயித்துள்ளது, இது மாதத்திற்கு 3 லட்சம் ஊதிய தொகுப்பைக் கொண்டுள்ளது. இது கூட முதல்வருக்குத் தெரியாமல் செய்யப்படுகிறது.” என்று கூறியுள்ளார்.

“உண்மை சரிபார்ப்புப் பிரிவு நிறுவப்பட்டதும், அதற்கான நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டதும் வெளி உலகுக்கு தெரியாமல் நடந்துள்ளது. இது அரசின் பாரபட்சமான அணுகுமுறையையே காட்டுகிறது. தி.மு.க.வையும், திமுக அரசையும், ஆட்சியாளர்களையும் விமர்சிப்பவர்களை வேட்டையாட பொதுப் பணத்தைப் பயன்படுத்துவதா?” என அரசியல் நோக்கர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

உண்மை சரிபார்ப்புப் பிரிவின் செயல்பாடுகள் தொடர்பான ஆவணத்தின் இணைப்பு-3 பின்வருமாறு கூறுகிறது: “அரசாங்கம், அதன் அமைச்சகங்கள், துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள் தொடர்பான புகார்களை மதிப்பீடு / உண்மைச் சரிபார்ப்புக்காக FCU (Fact Checking Unit) எடுத்துக் கொள்ளும். உண்மை சரிபார்ப்பு மற்றும் பல்வேறு ஆதாரங்களிலிருந்து புகார்களைப் பெறுவதில் FCU தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்கிறது. பெறப்பட்ட தகவல்கள், நடவடிகைக்கு உட்படுத்த வேண்டியவை, வேண்டாதவை என பிரிக்கப்படும். நடவடிக்கை எடுக்கக்கூடிய தொகுப்பில் இருந்து, சட்ட மற்றும் காவல் துறையின் ஆலோசனைக் குழுவுடன் கலந்தாலோசித்து சட்ட நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்படும்.” என்று கூறப்பட்டுள்ளது.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள சவுக்கு மீடியா நிறுவனர் சவுக்கு சங்கர், “உண்மைக் கண்டறியும் பிரிவுக்கும், அதன் திட்ட இயக்குநர் ஐயன் கார்த்திகேயனுக்கும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மிகக் கடுமையானவை. திமுக அரசை விமர்சிக்கும் சேனல்கள், டிவீட்டுகள் மற்றும் பிற சமூக ஊடக இடுகைகளை மூடும் வகையில் சுமோட்டோ அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் எதிர்ப்புகளை நசுக்கும் அரக்கனை ஸ்டாலின் உருவாக்குகிறார்” என்று எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

பல லட்சங்கள் இவர்களுக்கான ஊதியமாக வழங்கப்படுவதைப் பார்க்கும்போது, செவிலியர்களும், ஆசிரியர்களும் சம ஊதியம் கேட்டுப் போராடி வரும் நிலையில், அரசு கடும் கடனில் சிக்கித் தவித்து வரும் சூழலில், அரசின் நோக்கம் கேள்விக்குறியாகிறது. 2021 அக்டோபர் மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின் பல யூடியூபர்களை நேரில் பாராட்டினார். அவர்களில், வீடியோவிலேயே ஆபாசமாக பேசுபவர்கள், ஆபாசமான உள்ளடக்கத்தை உருவாக்கியவர்கள் மற்றும் பிராமணர்களை இழிவுபடுத்தியவர்கள் எண்ணிக்கை அதிகம். முதல்வரை சந்தித்தவர்களில் அரசுப் பதவி பெற்றுள்ள ஐயன் கார்த்திகேயனும் ஒருவர்.

FCUவை நிறுவி, திமுக ஆதரவு யூடியூபரை திட்ட இயக்குநராக நியமித்திருப்பது, திமுகவை விமர்சிப்பவர்களைக் குறிவைத்து நசுக்கும் முயற்சியே தவிர வேறில்லை. தமிழ்நாடு அரசின் Fact Checking Unit ஒட்டு மொத்த செய்திப் பத்திரிகை, காட்சி ஊடகம் மற்றும் சமூக ஊடகங்களுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாவும், கருத்துரிமைக்கு எதிரான, கருத்துரிமையின் கழுத்தை நெறிக்கும் செயலாகவும், பத்திரிகையாளர்கள் மற்றும் அரசியல் நோக்கர்களால் கருதப்படுகிறது.

Also Read : மொழிவழிப் பிரிவினை மோசடியின் 67வது நினைவு நாள்! ஈவெரா செய்த வரலாற்றுத் துரோகம்! 85 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பறிபோனதன் பின்னணி!

அரசின், ஆட்சியாளர்களின் தவறுகள், பிழைகள் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டும் உரிமை ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு. அப்படிப்பட்ட உரிமையைப் பறிக்கும் வகையில் FCU செயல்படாது என்று ஆட்சியாளர்களால் உத்திரவாதம் அளிக்க முடியுமா? FCU பணியை அரசே செய்கிறது என்பது மேலோட்டமாகப் பார்த்தால் நல்லது போலத் தோன்றினாலும், ஆழமாகப் பார்த்தால் கருத்துரிமைக்குப் பெரும் அச்சுறுத்தல், அடக்குமுறை, ஒடுக்குமுறைக்கு வழிகோலும் அபாயகரமான ஒன்றாக இருக்கக்கூடும். ஒரு தனியார் நிறுவனம் உண்மை சரிபார்ப்புப் பணியைச் செய்கின்ற போது அந்நிறுவனத்திற்கு சட்ட வலிமை இல்லை. ஆனால் ஒரு அரசு நிறுவனமாக இப்பணியை செய்யும் போது அது சட்ட வலிமை கொண்டதாகிவிடுகிறது.

செய்தி மக்கள் தகவல் தொடர்புத் துறை அல்லது இணையதளக் குற்றத் தடுப்புப் பிரிவு கீழ் இயங்க வேண்டிய ஒரு பிரிவை, சிறப்புத் திட்ட அமலாக்கத்துறையின் கீழ் தொடங்குவது, முழுக்க முழுக்க அரசியல் லாப நோக்கமும், எதிர்க்கட்சிகள் மற்றும் விமர்சகர்களின் குரல்வளையை நசுக்கத்தான் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளர் ராஜ் சத்யன், “விமர்சனங்களை ஏற்க மனமில்லாமல், அவற்றை மூடி மறைக்கவும், விமர்சகர்களை ஒடுக்கவுமே உண்மை சரிபார்ப்பு குழுவை அரசு அமைத்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

திமுகவை, ஆட்சியாளர்களை விமர்சித்து மீம் போட்டால் சிறை, கருத்து பதிவிட்டால் சிறை; ஆனால் பிற கட்சியினரைப் பற்றிப் பொய்யான, வெறுப்புணர்வுப் பேச்சுகளை திமுகவினர் செய்தால் அது கருத்துரிமை, பேச்சுரிமை என்று நிலையில்தான் ஐயன் கார்த்திகேயன் இதுவரை செயல்பட்டு வந்துள்ளார். கருத்துகள், விமர்சனங்கள் தணிக்கை செய்யப்படும் என்றால், சனநாயகத்துக்கு விடப்பட்ட சவாலகவே இதனைக் கருத வேண்டும்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry